Sunday, July 14, 2024
Home » கற்பிட்டியில் நாளை ஹஜ் பெருநாள் சிறப்பு கவி அரங்கம்

கற்பிட்டியில் நாளை ஹஜ் பெருநாள் சிறப்பு கவி அரங்கம்

-தினகரன், வாரமஞ்சரி அனுசரணையில் விமரிசையான இலக்கிய நிகழ்வு

by sachintha
June 20, 2024 10:22 am 0 comment

கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் முதல் நிகழ்வாக ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பிக்கும் வகையில் கவி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘சரித்திரம் கண்ட தியாகத் திருநாள்’ என்ற தலைப்பில் கற்பிட்டியின் மூத்த கவிஞர்கள் மற்றும் இளம் கவிஞர்கள், கவிதானிகள் என எட்டு பேர் கலந்து கொண்டு தமது கவி ஆற்றல்களை நாளை வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் 3 மணிக்கு கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் தம்பி நெய்னா மரைக்கார் கேட்போர் கூடத்தில் வெளிப்படுத்த உள்ளனர் .

இலங்கையின் தேசிய நாளிதழான தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் ஊடக அனுசரணையில் கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் தலைவரும் தில்லையூர் பாடசாலையின் அதிபருமான எஸ். எம். அருஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கவியரங்கில் மூத்த ஊடகவியலாளரும், எழுத்தாளருமான எம்.ஏ.எம் நிலாம் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றம் உருவாக்கப்பட்டு அதன் முதல் நிகழ்வாக இந்த கவியரங்கத்தை ஏற்பாடு செய்து கற்பிட்டியில் இலைமறைகாய்களாக இருக்கும் கவிஞர்களையும், ஆற்றல் மிக்க அல்அக்ஸா மாணவர்களையும் வெளிக்ெகாண்டுவரும் நிகழ்வாக இந்தக் கவியரங்கத்தை ஏற்பாடு செய்திருப்பதாக அதன் செயலாளர் எம்.எச்.எம். சியாஜ் தெரிவித்தார். இந்தக் கவிப்பெருவிழாவில் மன்றத்தின் உபதலைவர் எம்.எம்.எம். நவ்ப், உட்பட பிரதேச இலக்கியவாதிகள், பெற்றோர் என பெருமளவானோர் பங்கேற்கவிருக்கின்றனர்.

புத்தளம் மாவட்டத்தின் மிகச்சிறந்த இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் பலரையும் உள்வாங்கிய பிரதேசமாக கற்பிட்டி அமைந்துள்ளது. கற்பிட்டி மட்டுமன்றி திகளி, கண்டக்குளி, புளிச்சாக்குளம், குறிஞ்சிப்பிட்டி, காரைத்தீவு, பள்ளிவாசல்துறை உட்பட பல கிராமங்கள் 18ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் புலவர்கள் வாழ்ந்த பிரதேசங்களாகும். இக்காலகட்டத்திலும், பின்னரும் தர்காக்களை மையப்படுத்தி இஸ்லாமிய கலாசாரப் பாரம்பரியத்தை முன்னிறுத்தி புலவர்கள் பலநூறு இலக்கியப் படைப்புகளைத் தந்துள்ளனர்.

இவ்விலக்கியத்தினுள் புகழ்பாடும் கவிதைகள், கீர்த்தனைகள், நாட்டார் பாடல்கள், கும்மி, பதம்பாடுதல் என நிறையவே காணப்படுகின்றன. இவற்றில் சில காலத்தால் அழிந்து போனாலும் காலத்தால் அழியாத வாய்மொழிப் பாடல்களை இன்றளவும் காண முடிகிறது. இந்த விபரங்களை திரட்டி ‘புத்தளம் பிரதேச புலவர்கள்’ என்ற ஆய்வுநூலை பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் தந்துள்ளார்.

கவிதை, பாடல்கள் போன்ற இலக்கிய வடிவங்களுக்கு புத்துயிர் கொடுக்கும் கற்பிட்டி தமிழ் இலக்கிய மன்றம் முனைப்புடன் செயற்படத் தொடங்கியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். இந்த முயற்சிகளுக்கு தேசிய நாளிதழான தினகரன், தினகரன் வாரமஞ்சரி ஆதரவளிக்க முன்வந்திருப்பது மகிழ்ச்சி தருவதாக இருப்பதாக மன்றத்தின் தலைவர், உபதலைவர், செயலாளர் மற்றும் அல்அக்ஸா தேசிய பாடசாலை சமூகம், பிரதேச மக்கள் நன்றியுடன் கூறுகின்றனர்.

இந்த தியாகத் திருநாள் கவியரங்கம் இனிதே வெற்றி பெற வாழ்த்துவோம்!

எம்.எச்.எம். சியாஜ்

செயலாளர்,

கற்பிட்டி தமிழ் இலக்கிய மன்றம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT