Sunday, July 14, 2024
Home » ஜப்பானில் பதிவாகியுள்ள புதுவகை பக்றீரியா நோய்

ஜப்பானில் பதிவாகியுள்ள புதுவகை பக்றீரியா நோய்

by sachintha
June 20, 2024 6:00 am 0 comment

ஜப்பானில் கண்டறியப்பட்டுள்ள புதுவித பக்றீரியா நோய் உலகின் கவனத்தை ஈத்துள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோற்றம் பெற்ற கொவிட் 19 பெருந்தொற்று முழு உலகிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உலகில் 70 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களை கடந்த நாலாண்டு காலப்பகுதியில் காவு கொண்ட இவ்வைரஸ், 70 கோடியே 47 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களைப் பாதித்துள்ளது. இதன் தாக்கம் முதலிரு வருடங்களில் மிகவும் மோசமான கட்டத்தை அடைந்திருந்தது.

அந்த வைரஸின் தாக்கம், பாதிப்புக்கள் தற்போது கட்டுப்பாட்டு நிலையை அடைந்துள்ள போதிலும், அதன் பாதிப்புக்களின் வடுக்கள் மக்களின் மனங்களில் இருந்து இன்னும் அகலவில்லை. அதற்கிடையில் ஜப்பானில் இந்த புதிய பக்றீரியா தாக்கம் கண்டறியப்பட்டிருக்கிறது. அதுவும் மனித சதையை உண்ணக்கூடிய ‘ஸ்ட்ரெப்டோகொக்கல் டொக்சிக் சின்ட்ரொம்’ (Streptococcal toxic shock syndrome – STSS) என்ற பெயர் கொண்ட அரிய வகை பக்றீரியா இது என்றும் கூறப்படுகிறது.

இதன் விளைவாக மற்றொரு உயிராபத்து அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்கப் போகின்றோமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. ஏனெனில் கொவிட் 19 பெருந்தொற்றின் தாக்கமும் பாதிப்புக்களும் அந்தளவுக்கு நெருக்கடிகள் நிறைந்தவையாகக் காணப்பட்டதே இதற்கான காரணமாகும்.

ஆனால் இந்த பக்றீரியா இற்றைக்கு ஒன்றரை தசாப்தத்திற்கு முன்னர், அதாவது 1999 இல் ஜப்பானில் கண்டறியப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னரே உலகில் இப்பக்றீரியா உலகில் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தற்போது ஜப்பானில் இப்பக்றீரியா தொற்றினால் சுமார் ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இவ்வருட இறுதியாகும் போது 2500 ஐ எட்ட முடியுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பின்புலத்தில்தான் இப்பக்றீரியா அதிக கவனத்திற்கு உள்ளாகக்கூடிய ஒன்றாக விளங்குகிறது. தகவல் தொடர்பாடல் துறையில் ஏற்பட்டுள்ள அபரிமித வளர்ச்சியும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

இப்பக்றீரியாவானது, அதன் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கும் அவர்களது உணவு மற்றும் பானங்களைப் பகிர்ந்து கொள்பவர்களுக்கும் எளிதில் தொற்ற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், இப்பக்றீரியா தொற்றுக்கு உள்ளானவர்கள் மத்தியில் பல அறிகுறிகளை அவதானிக்க முடியும். அவற்றில் வீக்கம், தொண்டை வலி, மூட்டுவலி. காய்ச்சல், குறைந்த குருதி அழுத்தம், சுவாசப் பிரச்சினைகள், உறுப்பு செயலிழப்பு போன்றவாறானவை குறிப்பிடத்தக்கவையாகும்.

இத்தொற்று தொடர்பில் கவனயீனமாகவும் அசிரத்தையோடும் நடந்து கொண்டால் இரண்டு நாட்களில் உயிரிழப்புக்கூட ஏற்படலாம் என்றும் ஜப்பானிய மருத்துவ அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனாலும் இந்த பக்றீரியா பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்றுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடப் பேராசிரியர் கென்கி குசி குறிப்பிடுகையில், ஒருவருக்கு இப் பக்றீரியா தொற்று ஏற்பட்டால் முதலில் காலில் வீக்கத்தை அவதானிக்கலாம். அது சில மணி நேரங்களில் முழங்கால் வரை விரிவடைய முடியும். இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தத் தவறினால் சுமார் 48 மணித்தியாலயங்களில் உயிரிழப்புக்கும் முகம்கொடுக்க நேரிடலாம்’ என்றுள்ளார்.

இதன் ஊடாக இந்நோயின் பயங்கரத்தன்மை தெளிவாகிறது. அதனால் இப்பக்றீரியா தொற்று குறித்து கூடுதல் கவனம் செலுத்துவது மிக அவசியம்.

ஆன போதிலும் இது ஜப்பானில் பதிவாகியுள்ள நோயான போதிலும் வேறு நாடுகளில் பரவி இருப்பதற்கான பதிவுகள் இன்னும் இல்லாதுள்ளன. இந்நாட்டுக்குள் அவ்வாறான பக்றீரியா தொற்று வருவதைத் தவிர்ப்பதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் நாடு கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள இலங்கை மருத்துவர்கள், இப்பக்றீரியா குறித்து மக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

ஆகவே ஆரோக்கியம் தொடர்பில் மருத்துவர்களின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் குறித்து கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஒவ்வொருவருக்கும் பெரிதும் பயன்மிக்கதாக இருக்கும். அதன் ஊடாக ஏதாவது நோய் நிலைக்கு உள்ளானாலும் அவை குறித்து கண்டறிந்து உரிய சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT