ஈரானின் சபஹர் துறைமுகத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளைக் கையாளவென இந்தியாவும் ஈரானும் பத்தாண்டு கால உடன்படிக்கையொன்றில் கைச்சார்த்திட்டுள்ளன.
இந்திய போர்ட்ஸ் குளோபல் லிமிட்டட் நிறுவனமும் ஈரானின் போர்ட் அன்ட் மரிடயிம் ஓர்கனைசேஷன் நிறுவனமும் இந்த நீண்ட கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இவ் உடன்படிக்கையின் ஊடாக சபஹர் துறைமுக உட்கட்டமைப்பின் முக்கிய பகுதியாக விளங்கும்
ஷாஹித் பெஹெஷ்டி முனையத்தின் செயற்பாட்டு கட்டுப்பாடு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் ஈரானுடனும் ஏனைய மத்திய ஆசிய நாடுகளுடனும் தமது வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான மையமாக அதனைக் கையாள எதிர்பார்த்துள்ள இந்தியா, மத்திய ஆசியாவில் தமது மூலோபாய மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகவும் இந்த உடன்படிக்கையைக் கருதுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இருபக்க வர்த்தகம் மேம்பாடு அடைவதை விடவும் மத்திய ஆசியாவின் மையப்பகுதிக்குள் பிரவேசிப்பதற்கான நுழைவாயிலாக இத்துறைமுகம் அமையும் என்றும் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.
குஜராத்தின் கண்டலா துறைமுகத்தில் இருந்து 550 கடல் மைல் தொலைவிலும் மும்பையிலிருந்து 786 கடல் மைல் தூரத்திலும் அமைந்துள்ள சபஹர் துறைமுகம் இந்தியாவுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திற்கு சிறந்த போக்குவரத்து மையமாகவும் அமைந்துள்ளது.