Saturday, July 13, 2024
Home » 24 ஆண்டுகளில் முதல்முறை புட்டின் வட கொரியா பயணம்

24 ஆண்டுகளில் முதல்முறை புட்டின் வட கொரியா பயணம்

by mahesh
June 19, 2024 12:28 pm 0 comment

தனிமைப்படுத்தப்பட்டுள்ள வட கொரியாவுக்கு 24 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று இரு நாள் விஜயத்தை மேற்கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு வட கொரியா வழங்கி வரும் ஆதரவை பாராட்டி இருப்பதோடு இரு அணு ஆயுத நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் கடந்த ஆண்டு குண்டு துளைக்காத ரயிலில் ரஷ்யாவின் தூரக் கிழக்கிற்கு பயணித்திருந்தபோதே புட்டினுக்கு வட கொரியாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்ற நிலையிலேயே புட்டினின் வட கொரிய பயணம் இடம்பெற்றுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வட கொரியா நிறுவப்பட்டது தொடக்கம் ரஷ்யா மற்றும் வட கொரிய உறவு நீடித்தபோதும், 2022இல் உக்ரைனின் மீது ரஷ்யா படையெடுத்து மேற்குலகம் புட்டின் நிர்வாகத்தை தனிமைப்படுத்திய நிலையில் இந்த உறவு அண்மைக் காலத்தில் பலம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் பயன்படுத்துவதற்கு பலிஸ்டிக் ஏவுகணைகள் உட்பட ரஷ்யாவுக்கு தேவையான ஆயுதங்களை வட கொரியா வழங்கி வருவதாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

புட்டின் கடைசியாக 2000 ஆம் ஆண்டு ஜூலையில் முதல் முறை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு நான்கு மாதங்களின் பின்னர் வட கொரியா பயணித்திருந்தார். அப்போது ஆட்சியில் இருந்த கிம்மின் தந்தை கிம் ஜொங் இல்லை சந்தித்தார்.

புட்டினின் விஜயம் பற்றி வட கொரிய அரச செய்தி நிறுவனம் அறிவித்தபோதும் மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை. அவரது பயணத்தின்போது மூலோபாய உடன்பாடு எட்டப்படும் என்றும் நம்பப்படுகிறது.

வட கொரியாவை தொடர்ந்து புட்டின் வியட்நாம் செல்லவுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT