Saturday, July 13, 2024
Home » காசா தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேலில் நெதன்யாகு அரசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

காசா தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேலில் நெதன்யாகு அரசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

நுஸைரத் அகதி முகாமில் 17 பேர் பலி: மோதல்களில் சற்று தணிவு

by mahesh
June 19, 2024 7:11 am 0 comment

காசா போர் மற்றும் வடக்கில் ஹிஸ்புல்லாவுடன் போர் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் இஸ்ரேல் அரசுக்கு உள்நாட்டிலும் அழுத்தம் அதிகரித்துள்ளது.

காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்கும் பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேலிய அரசு தோல்வி அடைந்து வரும் நிலையில், நெதன்யாகு அரசுக்கு எதிராக நேற்று முன்தினம் இரவும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இஸ்ரேலின் மிகப்பெரிய நகரான டெல் அவிவில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வாராந்தம் நடைபெற்று வந்த நிலையில், ஜெரூசலத்தில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய தேர்தல் ஒன்றை நடத்த அழைப்பு விடுத்ததோடு பொலிஸாருடனும் மோதலில் ஈடுபட்டனர். இதன்போது ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதோடு சிலருக்கு சிறு காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய பாராளுமன்றம் மற்றும் நெதன்யாகுவின் இல்லத்திற்கு வெளியிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.

ஏற்கனவே நெதன்யாகுவின் போர்க்கால அமைச்சரவையில் இருந்து மையவாதத் தலைவர்களான பென்னி கான்ட்ஸ் மற்றும் அவரது கூட்டாளியான காடி ஐசன்கொட் விலகியதை அடுத்து ஆறு உறுப்பினர்கள் கொண்ட போர் கால அமைச்சரவையை நெதன்யாகு கலைத்துள்ளார். அந்த அமைச்சரவைக்குள் தீவிர வலதுசாரிகள் அங்கத்துவம் பெற முயன்ற நிலையிலேயே அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

கடந்த ஒக்டோபரில் காசாவில் போர் வெடித்து சில நாட்களிலேயே நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி அரசில் கான்ட்ஸ் மற்றும் ஐசன்கொட் இணைந்தனர். எனினும் கடந்த ஜூன் 9 ஆம் திகதி போர் கால அமைச்சரவையில் இருந்து விலகிய கான்ட்ஸ், வெற்றி ஒன்றை எட்டுவதற்கு நெதன்யாகு தடையாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நெதன்யாகுவை அதிகாரத்தில் இருந்து அகற்ற எதிர்க்கட்சி சக்திகளால் ஒன்றுபட முடியும் என்று இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் யயிர் லப்பிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ‘இந்த அரசு வெளியேற்றப்பட வேண்டும், வெளியேற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன்’ என்று இஸ்ரேலின் 103 எப்.எம். வானொலிக்கு லப்பிட் தெரிவித்தார்.

வீடுகள் மீது குண்டு மழை

இதேவேளை மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாமில் இஸ்ரேலியப் படை கடந்த திங்கட்கிழமை இரவு தொடக்கம் நடத்தி வரும் சரமாரித் தாக்குதல்களில் 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இதில் வீடுகள் மீது இடம்பெற்ற இரு வெவ்வேறு தாக்குதல்களிலேயே இவர்கள் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல் தாக்குதலில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இவர்களில் ஐவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். பலரும் காயமடைந்திருப்பதோடு மேலும் பலர் தொடர்ந்தும் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக அங்கிருக்கும் அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் இடம்பெற்ற ஒரு மணி நேரத்தின் பின்னர் மற்றொரு குடும்ப வீட்டை இலக்கு வைத்து இரண்டாவது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகள் தவிர பாட்டன் பாட்டிகளும் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தெற்கு காசா நகரான ரபாவில் இஸ்ரேல் படை நடவடிக்கையை ஆரம்பித்ததை அடுத்து அங்கிருந்து வெளியேறி வந்த பலஸ்தீனர்களே பெரும்பாலும் நுஸைரத் அகதி முகாமில் அடைக்கலம் பெற்றுள்ளனர். இந்த மாத ஆரம்பத்தில் இங்கும் நான்கு பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேலியப் படை நடத்திய தாக்குதலில் குறைந்தது 274 இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காசா பகுதியின் பிரதான கிழக்கு வீதியில் வர்த்தக லொறிகளுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதலில் குறைந்து ஒன்பது பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் காயமடைந்தவர்கள் ஐரோப்பிய காசா மருத்துமவனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாளுடன் உதவிகள் செல்வதற்கு வசதி அளிக்கும் வகையில் தினசரி சண்டை நிறுத்தம் ஒன்று வார இறுதியில் இஸ்ரேல் அறிவித்த நிலையில் காசாவில் ஒப்பீட்டளவில் மோதல்கள் தணிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் எட்டு மாதங்களுக்கு மேலாக தொடரும் நிலையில் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 37,400 ஐ நெருங்கியுள்ளது. ஐ.நா பாதுகாப்புச் சபையில் அங்கீகரிக்கப்பட்ட, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்வைத்த போர் நிறுத்தத் திட்டத்திலும் எந்த முன்னேற்றமும் காணவில்லை.

இந்தத் திட்டத்தில் பல திருத்தங்களுக்கு ஹமாஸ் அமைப்பு பரிந்துரைத்திருந்த நிலையில் அதில் மாற்றங்கள் செய்ய இஸ்ரேல் தயாரில்லை என்று மூத்த இஸ்ரேலிய பேச்சுவார்த்தையாளர் ஒருவர் இஸ்ரேலின் யெடியோத் அஹரனோர் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்புச் சபையினால் ஏற்கப்பட்ட திட்டத்திற்கு அப்பால் எந்த பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பு இல்லை’ என்று பெயர் குறிப்பிடாத அந்த பேச்சுவார்த்தையாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தாம் செய்த மாற்றங்கள் முக்கியமானவை இல்லை என்றும் தமது நிலைப்பாடு முன்மொழிவின் அடிப்படையுடன் ஒத்துப்போவதாகவும் ஹமாஸ் வலியுறுத்தி இருந்தது. இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் அரசு இன்னும் வெளிப்படையான ஆதரவை வெளியிடவில்லை என்பதோடு, ஹமாஸ் தோற்கடிக்கப்படும் வரை காசாவில் போர் தொடரும் என்றும் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

லெபனான் விரைவு

காசா போர் மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்திருக்கும் சூழலில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையில் தீவிரம் அடைந்துள்ள மோதலை தணிக்கும் முயற்சியாக அமெரிக்க மூத்த இராஜதந்திரி அமோஸ் ஹொச்ஸ்டைன் பிராந்தியத்திற்கு விரைந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் சென்ற ஹொச்ஸ்டைன் அங்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜனாதிபதி இசாக் ஹெர்சொக் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் அவர் நேற்று லெபனான் சென்றடைந்தார்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் பரஸ்பரம் தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. எனினும் கடந்த வாரம் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹஸ்புல்லா முன்னணி தளபதி ஒருவர் கொல்லப்பட்டது தொடக்கம் அந்த அமைப்பு இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT