Saturday, July 20, 2024
Home » அதிக வருமானம் பெறுவோருக்கே வாடகை வருமான வரி

அதிக வருமானம் பெறுவோருக்கே வாடகை வருமான வரி

சாதாரண மக்கள் பயப்பட தேவையில்லை

by mahesh
June 19, 2024 6:00 am 0 comment

– பாலின சமத்துவ சட்டம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆய்வு செய்ய தெரிவுக்குழு அவசியம்
– பாராளுமன்றில் நேற்று ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி ரணில் உறுதி

வாடகை வருமான வரியானது அதிக வருமானம் கொண்டவர்களுக்கு மாத்திரமே விதிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சாதாரண வருமானம் ஈட்டுபவர்களுக்கு அன்றி, அதிக வருமானம் ஈட்டுவோருக்கே இந்த வரி விதிக்கப்படும் என்றும் ஒரு வீடு உள்ளவர்கள் இந்த வரி தொடர்பில் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று விசேட உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வாடகை வருமான வரி தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“நிதி தொடர்பான விடயங்கள் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் நான் பாராளுமன்றத்தில் இல்லாத காரணத்தினால் நிதியமைச்சர் என்ற வகையில் வாடகை வருமான வரி தொடர்பில் பாராளுமன்றத்திற்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

மேற்படி வாடகை வருமான வரி அதிகளவு வருமானத்தை பெறுபவர்களிடமே அறவிடப்படவுள்ளது. நாட்டில் உள்ள வீடுகளில் 90 வீதமானவை இதில் உள்ளடங்காது. முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியிலிருந்து விடுவிக்கப்படுவர். சாதாரண வருமானம் ஈட்டுபவர்களுக்கு அன்றி, அதிக வருமானம் ஈட்டுவோருக்கே இந்த வரி விதிக்கப்படும். இதில் மிக அதிக வருமான வரம்பு உள்ளது. நாட்டில் உள்ள 90 வீத வீடுகளுக்கு இது பொருந்தாது. அந்த வகையில் நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீடுகளை பற்றி பயப்பட வேண்டியதில்லை.

ஆனால் நாம் செல்வ வரியை அமுல்படுத்த வேண்டும். அதற்காக ஐக்கிய மக்கள் சக்தி வருத்தப்படுவதை நான் அறிவேன். அவர்களுடன் இருக்கும் கோடீஸ்வரர்களை இந்த வரி பாதிக்கிறது என்பதுதான் அதற்கு காரணம் என்று நினைக்கின்றேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய ஜனாதிபதி, பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்புக்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையும் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில்;

சபாநாயகர் பாலினச் சமத்துவ சட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சபையில் அறிவித்தார். ஆனால் இது அரசியலமைப்பின் 04 ஆவது பிரிவின் கீழான இந்த சபையின் அதிகாரங்களை மீறுவதாகும். எனவே அதுகுறித்து ஆராய தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT