Saturday, July 20, 2024
Home » சிறுமியை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு: எடியூரப்பா மீது 3 மணி நேரம் விசாரணை!

சிறுமியை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு: எடியூரப்பா மீது 3 மணி நேரம் விசாரணை!

by Gayan Abeykoon
June 18, 2024 4:08 pm 0 comment

பதினேழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

முதல்வர் பதவியில் இல்லாவிட்டாலும் எடியூரப்பாவுக்கு கட்சியில் பதவி அப்படியேதான் உள்ளது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் எடியூரப்பா மீது 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெங்களூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது கர்நாடகாவிலும் பா.ஜ.கவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதே நேரத்தில் இந்த வழக்கை கர்நாடக அரசு சிறப்புப் புலனாய்வு குழுவின் விசாரணைக்கு மாற்றியது. இதையடுத்து எடியூரப்பாவை விசாரணைக்கு ஆஜராக சிறப்புப் புலனாய்வுக் குழு அழைப்பாணை அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் எடியூரப்பா மீது புகார் கொடுத்த சிறுமியின் தாயார் நுரையீரல் புற்றுநோயால் திடீரென உயிரிழந்தார்.

இதையடுத்து எடியூரப்பாவை போக்சோவில் கைது செய்யக் கோரி சிறுமியின் சகோதரர் நீதிமன்றத்தை நாடினார். இதனால் எடியூரப்பாவை கைது செய்ய பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்தது போக்சோ நீதிமன்றம்.

இதனால் எடியூரப்பா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் இருந்தது.

இந்த நிலையில் எடியூரப்பாவோ டெல்லிக்கு சென்றார். இதனால் கர்நாடக சிறப்புப் புலனாய்வு குழுவும் டெல்லி சென்றுவிட்டது. மேலும் கைது செய்ய தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்திற்கு எடியூரப்பா சென்றார்.

இதை விசாரித்த நீதிமன்றம் ஜூன் 17 ஆம் திகதி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு எடியூரப்பா ஆஜராக வேண்டும். அதுவரை அவரை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டது.

இந்த நிலையில்தான் டெல்லியில் இருந்து பெங்களூர் திரும்பிய எடியூரப்பா, நேற்று சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT