Sunday, July 14, 2024
Home » ஈரநில முகாமைத்துவத்தில் தீர்வுகளை எட்டுவதில் கவனம் செலுத்த பரிந்துரை

ஈரநில முகாமைத்துவத்தில் தீர்வுகளை எட்டுவதில் கவனம் செலுத்த பரிந்துரை

சர்வதேச ஈரநில பூங்கா ஒன்றிய மாநாட்டில் பிரதமர் தெரிவிப்பு

by Gayan Abeykoon
June 18, 2024 8:55 am 0 comment

ஒவ்வொரு நகர ஈரநிலமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் பொதுவான தன்மையை கருத்திற்கொண்டு ஈரநில முகாமைத்துவம் தொடர்பாக பொதுவான தீர்வுகளை எட்டுவதில் கவனம் செலுத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பரிந்துரைத்துள்ளார்.

சர்வதேச ஈரநில பூங்கா ஒன்றியத்தினுடைய ஆசிய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு நேற்று காலை  வோட்டர்ஸ் எட்ஜில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  கலந்துகொண்டு உரையாற்றிய போதே,  மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு  பிரதமர் இவ்வாறு பரிந்துரைத்துள்ளார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

“ஈரநில உறவுகள் சர்வதேச – ஆசியா கண்டத்தின் உச்சி மாநாட்டின் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்வதை நான் ஒரு பாக்கியமாக கருதுகிறேன். சூழலுக்கு உகந்த சுற்றுலாவுக்கான ஈரநிலங்கள் மற்றும் ஈரநில மையங்கள்” என்ற கருப்பொருளின் கீழ் 15க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 100 ஈரநில வல்லுநர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு,  ஈரநில முகாமைத்துவம் தொடர்பான அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டனர்.

இந்த முக்கியமான விடயத்தில் ஆற்றிய பணிகளுக்காகவும், இந்த மாநாட்டை வெற்றியடைய செய்ததற்காகவும் பிரசன்ன ரணதுங்க மற்றும் அதிகாரிகளுக்கும் நான்  பாராட்டு தெரிவிக்கிறேன்.

எந்தவொரு பெரிய நகரிலும் வாழும் மக்களின் நல்வாழ்வுக்கு ஈரநிலங்கள் அவசியம். இம்மாநாடு நமது வர்த்தக நகரமான கொழும்புக்கும் பொருந்துவதால் மிகவும் முக்கியமானது.  ஈரநிலங்கள் நகரின்  நல்வாழ்வுக்கு பங்களிக்கும் பல நன்மைகளை வழங்குகின்றன.

கொழும்பு ஈரநில வளாகம் 6 உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ளது. நிர்வாக தலைநகரம் ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே மாநகரசபை, கொழும்பு மாநகரசபை, கடுவெல மாநகரசபை, கொலன்னாவ நகரசபை, மஹரகம நகரசபை மற்றும் தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகரசபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களாகும். இந்த உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டு பகுதிகளின் கீழ் வரும் நகர ஈரநிலங்கள், நகரத்தின் அபிவிருத்தி  திட்டத்தில் முக்கிய அங்கமாகும். 150 ஆண்டுகள் பழமையான ஈரநிலங்கள் மீட்டெடுக்கப்பட்டு, இன்னும் 150 ஆண்டுகள் நீடிக்குமென்பது உறுதி. பிரதமர் என்ற ரீதியில் உள்ளூராட்சிகளுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில்  இந்த விடயத்தில் நான் ஆர்வமாக உள்ளேன்.

காலநிலை மாற்றத்தின் விளைவுகள் தெற்காசியா முழுவதும் தீவிரமடைந்து வருகின்றன.  காலநிலை மாற்றம் தொடர்பில் இலங்கை மிகுந்த அவதானம் செலுத்தி வருகின்றது” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT