Monday, July 22, 2024
Home » நாட்டில் முடிவின்றி தொடரும் துயர் தரும் உயிரிழப்புகள்!

நாட்டில் முடிவின்றி தொடரும் துயர் தரும் உயிரிழப்புகள்!

by Gayan Abeykoon
June 18, 2024 1:00 am 0 comment

 இலங்கையில் விபத்துகளால் தினமும் அதிகளவில் மரணங்கள் சம்பவிக்கின்றன. நாளாந்தம் ஊடகங்களில் செய்திகளை அவதானிக்கின்ற போது, விபத்துகளால் மரணங்கள் அதிகளவில் இடம்பெறுவதை அறியமுடிகின்றது.

வீதிகளில் வாகன விபத்துகளால் ஏற்படுகின்ற மரணங்களை மாத்திரமே நாம் ‘விபத்து மரணங்கள்’ என்று கருதுகின்றோம். ஆனால் வாகன விபத்துகளால் ஏற்படுபவை மாத்திரமே ‘விபத்து மரணங்கள்’ அல்ல. எதிர்பாராத விதத்தில் தற்செயலாக ஏற்படுகின்ற ஆபத்தான சம்பவங்கள் அனைத்துமே விபத்துகள் ஆகும்.

நீரில் மூழ்குதல், மின்சாரத் தாக்குதல், குளவி கொட்டுதல், பாம்பு தீண்டுதல், வாகனங்களால் மோதப்படுதல், உயர்ந்த இடங்களிலிருந்து கீழே வீழ்தல், மரம் முறிந்து வீழ்வதால் பாதிக்கப்படுதல் போன்ற பலவிதமான அனர்த்தங்களும் விபத்து என்றே கருதப்படுகின்றன.

இலங்கையில் வாகன விபத்துகளால் ஏற்படுகின்ற மரணங்கள் பற்றி நாம் அதிகம் அறிந்திருக்கின்றோம். நாளாந்தம் நாம் ஊடகச் செய்திகளில் இவ்வாறான சம்பவங்களைப் பற்றி அதிகம் அறிகின்றோம். இலங்கையில் தினமும் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட மக்கள் வாகனவிபத்துகளால் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் கூறுகின்றன. அதேசமயம் மேலும் பலர் வீதிவிபத்துகளால் படுகாயமடைவதாகவும் தெரியவருகின்றது.

தனியார் பஸ்கள், முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியனவே பெருமளவான விபத்துகளுக்குக் காரணமாகின்றன. வீதிப்போக்குவரத்து விதிமுறைகளை அனுசரித்தவாறு பயணம் செய்யாததன் காரணமாகவே இவ்விதமான துர்ப்பாக்கிய சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. எமது மக்களில் பலருக்கு சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து நடந்து கொள்கின்ற சுபாவம் முற்றாகவே கிடையாது.

வீதிகளில் பயணிக்கின்ற ஓட்டோ வண்டிகளையும், மோட்டார் சைக்கிள்களையும், தனியார் பஸ்களையும் பார்ப்போமானால், அவற்றின் சாரதிகள் எவ்வாறு போக்குவரத்து விதிமுறைகளை மீறி நடந்து கொள்கின்றார்களென்பது நன்றாகவே தெரிந்துவிடும். வீதியில் நடமாடுகின்ற ஏனைய மக்களை சாதாரண பிராணிகளாகக் கூட அவர்கள் பொருட்படுத்துவதில்லை என்பதை நாம் அன்றாடம் வீதிகளில் காண்கின்றோம்.

வீதிவிபத்துகள் இவ்வாறிருக்க, நீரில் மூழ்கி மரணமடைபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்திருப்பதை ஊடகச் செய்திகள் புலப்படுத்துகின்றன. ஆறுகள், குளங்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் கடல் ஆகியவற்றில் மூழ்கி மரணமடைபவர்களின் எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்திருக்கின்றது. இவ்வாறு மரணமடைபவர்களில் அநேகமானவர்கள் இளவயதினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆபத்தான இடங்களில் நீராடுவதன் காரணமாகவே பலர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். கடுமையான அலை நிறைந்த கடல், நீரோட்டம் கூடிய ஆறுகள், ஆழமான குளங்கள் போன்றவற்றில் நீராடுபவர்களே பெருமளவில் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.

கடந்த ஒரு வாரகாலத்தில் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. காரைதீவில் மருத்துவர் ஒருவர் பாணமை பிரதேச கடலில் அகப்பட்டு இரண்டொரு தினங்களுக்கு முன்னர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார். தனது குடும்பத்தினர் சகிதம் ஆலயமொன்றுக்குச் சென்று திரும்பும் வேளையிலேயே இத்துயர சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது.

அப்பிரதேச கடல் மிகவும் அபாயகரமானது. திடீரென்று கடுமையான அலைகள் கரையை நோக்கித் தாக்குவதுண்டு. கடலரிப்பும் அதிகம் இடம்பெறுவதால் கடலின் கரைப்பகுதியே மிகவும் ஆழமாகக் காணப்படுகின்றது. அக்குடும்பத்தினர் கரையோரமாக நின்று கொண்டிருந்த வேளையிலேயே திடீரென்று வந்த பேரலையில் அகப்பட்டுள்ளனர். அவர்களில் மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இடம்பெறுவதற்கு முதல்நாளன்று காரைதீவில் இதேபோன்ற மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மூன்று A சித்திகள் பெற்று மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெறவிருந்த மாணவர் ஒருவரே கடலில் அகப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பெற்றோருக்கு ஒரேயொரு புதல்வரான இம்மாணவரும் தனது குடும்பத்தினருடன் ஆலயமொன்றுக்குச் சென்று திரும்பும் வழியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவ்விரு பரிதாப சம்பவங்களும் காரைதீவு பிரதேசத்தை துயரில் மூழ்கச் செய்துள்ளன. ஒருவர் அனுபவம் வாய்ந்த மருத்துவர். மற்றையவர் எதிர்காலத்தில் மருத்துவராக வரவேண்டிய விவேகமான மாணவர். தண்ணீரின் அபாயம் குறித்து மிகவும் எச்சரிக்ைகயாக இருந்திருப்பின் இவ்விருவருக்கும் இந்த பரிதாப முடிவு ஏற்பட்டிருக்காது என்பதே பலரதும் கவலையாக உள்ளது.

‘நீர் விளையாடேல்’ என்பது எமது ஆன்றோர் கூறிய வாக்கு ஆகும். நீர் மாத்திரமன்றி பஞ்சபூதங்கள் எனப்படுகின்ற நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்துமே மிகவும் எச்சரிக்ைகக்கு உரியனவாகும்.

இளவயதினர் பலர் தமது பெற்றோருக்குத் தெரியாமல் நீர்நிலைகளுக்கு நீராடச் சென்று உயிராபத்தைச் சந்திப்பது வழமையாகியுள்ளது. மாணவர்களும் பலர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். எந்நேரமும் தமது பிள்ளைகளை அவதானித்துக் கொண்டிருத்தல் பெற்றோருக்கு இயலாத காரியமாகும். ஆகவே இளவயதினர் ஆபத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு எச்சரிக்ைகயாக நடந்து கொள்வதே புத்திசாலித்தனமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT