Monday, July 22, 2024
Home » நடப்புச் சம்பியன் இங்கிலாந்து சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம்

நடப்புச் சம்பியன் இங்கிலாந்து சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம்

by damith
June 17, 2024 10:30 am 0 comment

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 5 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்த நிலையில் நடப்புச் சம்பியன் இங்கிலாந்து அணி நிகர ஓட்ட விகிதம் அடிப்படையில் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. முன்னதாக இங்கிலாந்து அணி நமீபிய அணிக்கு எதிரான போட்டியில் டக்வர்த் லுவிஸ் முறையில் வெற்றியீட்டியது அந்த அணி அடுத்து சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்திருந்தது.

செயின்ட் லூசியாவில் இலங்கை நேரப்படி நேற்று (16) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது. பிரண்டன் மக்முலன் 34 பந்துகளில் 60 ஓட்டங்களை விளாசினார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த அவுஸ்திரேலிய அணி 60 ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளையும் இழந்தபோதும் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டிரவஸ் ஹெட் (68) மற்றும் மார்கஸ் ஸ்டொயினிஸ் (59) 80 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று வெற்றி வாய்ப்பை அதிகரித்தனர்.

இதன்மூலம் ஆஸி. அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய நிலையில் இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது உறுதியானதோடு ஸ்கொட்லாந்து வெளியேறியது.

முன்னதாக அன்டிகுவாவில் நடந்த போட்டி மழையால் தாமதமான நிலையில் அணிக்கு தலா 10 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டன. இதில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி 10 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது. ஹரி ப்ரூக் 20 பந்துகளில் ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களை விளாசினார்.

இந்நிலையில் பதிலெடுத்தாடிய நமீபிய அணி 10 ஓவர்களுக்கும் 3 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களையே பெற்றது.

டி20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் 8 சுற்றுக்கான இடத்தை இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய ஏழு அணிகள் உறுதி செய்துள்ளன.

டி குழுவில் மற்ற அணியாக அடுத்த சுற்றை உறுதி செய்வதற்கு பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் இடையே போட்டி நீடித்து வருகிறது. இன்று நடைபெறும் பங்களாதேஷ் எதிர் நோபளம் மற்றும் இலங்கை எதிர் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவுகள் இதனைத் தீர்மானிப்பதாக அமையும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT