Saturday, July 13, 2024
Home » கம்பன் விழா இன்று நிறைவு; கம்பன்புகழ் விருது பெறும் சிவசங்கரி

கம்பன் விழா இன்று நிறைவு; கம்பன்புகழ் விருது பெறும் சிவசங்கரி

by damith
June 17, 2024 10:30 am 0 comment

கொழும்புக் கம்பன் கழகத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை மற்றும் மாலை வேளைகளில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில் மு.ப. 9.30 மணிக்கு ரவி ஜுவலர்ஸ் அதிபர் ஆர். மகேஸ்வரன் தம்பதியர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

நிவாசினி கடவுள் வாழ்த்திசைப்பார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையுரையையும்

வி. மகாலிங்கம் (சிங்கப்பூர்) தொடக்க உரையையும் ஆற்றவுள்ளனர். முதலில் ‘தன்னையே தொழுதவன்’ எனும் தலைப்பில் இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் (தமிழ்நாடு) தனியுரை ஆற்றவுள்ளார். தொடர்ந்து, கலாநிதி பாரதி கிருஷ்ணகுமார் (தமிழ்நாடு) தலைமையில் ‘கம்ப ஆடியில் கண்டனம் இவர்களை’எனும் தலைப்பிலான கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இந்த அரங்கில், ந. விஜயசுந்தரம், முனைவர் இரா. மாது (தமிழ்நாடு), கலாநிதி ஆறு. திருமுருகன், பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா (தமிழ்நாடு) ஆகியோர் உரையாற்றவுள்ளனர். மாலை 5.30 மணிக்கு, தேவி ஜுவலர்ஸ் அதிபர் தம்பதியர்; மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க, திருமதி தாரணி ராஜ்குமார் கடவுள் வாழ்த்திசைப்பார்கள். மலேசிய நாட்டின் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையுரையையும் புதுச்சேரி சட்டசபை முன்னாள் சபாநாயகர் வி. பி. சிவக்கொழுந்து தொடக்க உரையையும் ஆற்றவுள்ளனர்.

இன்று மாலை சமூக நிதி வழங்கும் நிகழ்ச்சி, சான்றோர் கௌரவ அரங்கு என்பன நடைபெற்றது. உயர் கல்வித் துறையில் ஈடுபடும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி பல்கலைக்கழக மாணவர் ஐவருக்கு வழங்கப்படவுள்ளன.

அகில இலங்கைக் கம்பன் கழகம் உலகளாவித் தமிழ்ப்பணி செய்த சான்றோர் ஒருவருக்கு ‘கம்பன் புகழ் விருதை’ ஆண்டுதோறும் கொழும்புக்கம்பன் விழாவில் வழங்கி வருகிறது. ‘வி. ரி. வி. பவுண்டேஷன்’ நிறுவியுள்ள வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளை நினைவு அறக்கட்டளை வழங்கும் இக் ‘கம்பன்புகழ் விருது’இவ்வாண்டு, புகழ்பெற்ற எழுத்தாளர் சிவசங்கரிக்கு வழங்கப்படவுள்ளது. தம் செயற்பாடுகளால் நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் அறுவரை ஆண்டுதோறும் அகில இலங்கைக் கம்பன் கழகம் கௌரவித்து வருகிறது.

அவ்வரிசையில் இவ்வாண்டு கௌரவத்துக்குரியவர்களாக, இலங்கையின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் சண்முகம் ஸ்ரீதரன், தமிழ் அறிஞர் கலாநிதி திருமதி மனோன்மணி சண்முகதாஸ், வடமாகாண பிரதம செயலாளர் திரு. லட்சுமணன் இளங்கோவன் ஆகியோருக்கு இன்று சான்றோர் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

நிறைவாக விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வழக்காடு மன்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மன்றின் நீதியரசர்களாக, கம்பவாரிதி இ. ஜெயராஜ் மற்றும் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோர் கடமையாற்றுவர். வழக்கறிஞர் கே. சுமதி வழக்குத் தொடுக்க பேராசிரியர் பர்வீன் சுல்தானா வழக்கை மறுக்கவுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT