Thursday, July 18, 2024
Home » கனடா ஈக்குருவி, புதிய வெளிச்சம் அமைப்புகளால் வடமராட்சியில் இன்று நீண்டதூர நடைப் பயணம்

கனடா ஈக்குருவி, புதிய வெளிச்சம் அமைப்புகளால் வடமராட்சியில் இன்று நீண்டதூர நடைப் பயணம்

by damith
June 17, 2024 2:02 pm 0 comment

கோடை காலம் நெருங்கி வருவதால், வருடாந்த ஈக்குருவி நடைப்பயணம் (-2024) இம்முறையும் இடம்பெறவுள்ளது. இன்று 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் ஓகஸ்ட் 16 வரை நடைபெறவுள்ள பிரமாண்டமான நடைப்பயணத்தில் கலந்து கொள்ளுமாறு ஈக்குருவி மற்றும் புதிய வெளிச்சம் அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

உலகெங்கும் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. உலகெங்கிலும் வாழும் பங்கேற்பாளர்களை இணைத்து, அவர்களின் முன்னேற்றத்தை மேம்படுத்தும் முயற்சியில் புதிய வெளிசசத்தின் இந்த நடைபயணம் இடம்பெற்று வருகின்றது. கடந்த 2023ஆம் ஆண்டு கனடா, இலங்கை, அவுஸ்திரேலியா, லண்டன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளில் இருந்து 300 இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டில் மேலும் பல நாடுகளில் ஈகுருவி நடைப் பயணம் முன்னெடுக் கப்படஉள்ளது.

உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தி உடல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடைப்பயிற்சி அமைகிறது.

அந்தவகையில் இதன் தொடர்ச்சியாக கடல் வளத்தை விஞ்ஞான பூர்வமாக அணுகி அதன் பயனை நாடு முழுவதும் அனுபவிக்கும் வகையில் இந்த ஆண்டின் கருப்பொருளாக ‘நீலப் பொருளாதாரம்’ (Blue Economy) என்ற கருப்பொருளை முன்வைத்து வடமராட்சியில் இன்று 17ஆம் திகதி காலை 5.20 மணிக்கு பருத்தித்துறை வெளிச்சவீட்டின் முன்னால் ஆரம்பித்து கடற்கரை வீதி வழியாக சுப்பர்மடம், சக்கோட்டை, திக்கம், பொலிகண்டி, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு வழியாக வளலாய் சென்று, அங்கிருந்து மயிலிட்டி,காங்கேசன்துறை, மாவிட்டபுரம், கீரிமலையை அடைந்து பிற்பகல் 5.20மணிக்கு மாதகல் சிவன் கோயில் முன்பாக நிறைவடையும்.

இந்த மாபெரும் நடைப்பயணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அவ்வப்போது சிற்றுண்டிகள்,காலை உணவு மற்றும் மதிய உணவும் ஏற்பாடுகள் பொது அமைப்புக்களினாலும் ஏற்பாட்டாளர்களினாலும் செய்யப்பட்டுள்ளன. இதில் அனைத்து மக்களையும் கலந்து கொண்டு தமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் செயற்றிட்டத்தின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தின் மூலமும் கனடாவில் சேகரிக்கப்படும் நிதி உதவி மூலமும் ஒவ்வொரு ஆண்டும் பல குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. இலங்கையில் வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கான வாழ்வாதார உதவிகளைச் செய்து வருவதற்கான திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த ஆண்டு, மக்களால் வழங்கப்படும் நன்கொடைகள் இலங்கையின் நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு செயல்திட்டமாக இது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT