Thursday, July 18, 2024
Home » சமத்துவத்தை செயல்வடிவில் காட்டும் இஸ்லாத்தின் அடையாளம் – ஹஜ்

சமத்துவத்தை செயல்வடிவில் காட்டும் இஸ்லாத்தின் அடையாளம் – ஹஜ்

by damith
June 17, 2024 11:57 am 0 comment

இஸ்லாம் என்றால் அது சாந்தி, சமாதானம் சமத்துவம் என்னும் உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்டதாகும். இத்தகைய உயர்ந்த கோட்பாடுகளை வெறும் போதனைகளாக மட்டும் கொண்ட மார்க்கமாக இல்லாது அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சமூக அமைப்பையும் ஏற்பாடுகளையும் உருவாக்கி செயற்படுத்தி எழுச்சியை ஏற்படுத்திய மார்க்கமும் கூட.

இத்தகைய சமத்துவத்தை நிலை நாட்டும் இஸ்லாமியக் கடமைகளில் ஹஜ் தனியானதோர் இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. துல்ஹஜ் மாதம் வந்துவிட்டால் முழு உலகிலிருந்தும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள், மக்காவிலுள்ள கஃபாவில் ஒன்று கூடுவர். அவர்களிடையே இன, மத, மொழி, வர்க்க, தேச வேறுபாடுகள் இருந்தும் அவற்றை மறந்து சமத்துவத்துடன் தோளோடு தோள் சேர்த்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவர். இத்தகைய வேறுபாடுகளை ஒழித்து சமத்துவத்தை உலகில் ஏற்படுத்தியுள்ளது இஸ்லாம். அறிவியல், நாகரிகம் என்பவற்றில் முதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கூட அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இன்றும் கூட நிற வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. 1948 டிசம்பர் 10 ஆம் திகதி தான் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம் ஒன்றை நிறைவேற்றியது. அப் பிரகடனத்தின் உறுப்புரை 2 இல் ‘நிறவேற்றுமை பாராட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய பிரகடனம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கூட அறிவியலின் சிகரத்தைத் தொட்டு விட்டதாகக் கூறிக் கொள்ளும் மேற்கு நாடுகளில் நிறவேற்றுமையை ஒழிக்க முடியவில்லை, பல்கலைக்கழகங்களில் கூட நிற வெறி காரணமாக நீக்ரோ மாணவர்கள் அடக்கு முறைகளுக்கும் எண்ணற்ற கொடுமைகளுக்கும் இலக்காக்கப்பட்டு வந்தனர். இவற்றின் விளைவாக 1954 மே மாதம் 17 ஆம் திகதி பல்கலைக்கழகங்களில் நிறவேற்றுமை கடைப்பிடிக்கப்படுவது மனித சமுதாயக் கோட்பாடுகளுக்கு முரண்பட்டதும் நியாயமற்றதும் ஆகும்’ என அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், இஸ்லாம் இந்த நிறவேற்றுமைக்கு சாவு மணியடித்து பதினைந்து நூற்றாண்டுகள் கடந்து விட்டன. முஸ்லிம்களைப் பொறுத்தவரை கறுப்பரோ, வெள்ளையரோ, அல்லது பணக்காரனோ, ஏழையோ, எத்தகைய வேறுபாடுகளுமின்றி ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறி கரம் கொடுத்து ஆரத் தழுவிக் கொள்வது சர்வசாதாரணமே. இந்நிலை 1400 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மகத்தான இஸ்லாமியப் புரட்சியின் விளைவாகும். இத்தகைய மன மாற்றத்தை இஸ்லாம் மக்களிடம் கொண்டு வருவதற்குத் துணையாக இருந்தது. அதன் தெய்வீகக் கோட்பாடுகளாகும். முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது ஆற்றிய உரையில் சமத்துவம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.

‘மக்களே! உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் ஆதித் தந்தையும் ஒருவரே! நீங்கள் அனைவரும் ஆதமின் வழித்தோன்றல்கள் ஆவீர்கள் ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர் அறிந்து கொள்ளுங்கள், ஓர் அரேபியருக்கு அரேபியல்லாதவர் மீதோ… அரேபியல்லாதவருக்கு ஓர் அரேபியர் மீதோ… சிவப்பு நிறத்தவருக்கு கறுப்பு நிறத்தவர் மீதோ… கறுப்பு நிறத்தவருக்கு சிவப்பு நிறத்தவர் மீதோ… இறையச்சத்தைக் கொண்டல்லாது வேறெந்த வழியிலும் மேன்மையோ சிறப்போ கிடையாது. நிச்சயமாக உங்களில் மேன்மையானவர் யாரெனில் அல்லாஹ்வின் மீது அதிக அச்சம் உடையவராவார்.’ (நபிமொழி)

முஹம்மத் (ஸல்) அவர்களது இறுதியுரையானது மனித உரிமைப் பிரகடனம் என்று கூறும் அளவுக்கு அதன் கருத்துகள் மனித உரிமைகளுக்கு வலுவூட்டுதாக அமைந்துள்ளன, அந்த உரையானது முஸ்லிம்களது எழுச்சிக்கும் வெற்றிக்கும் வழி கோலுவதாக அமைந்துள்ளது. மேலும், முஸ்லிம்களது வாழ்க்கையில் செயல் வடிவம் பெற்று இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சிக்கும் வித்திட்டது.

இஸ்லாத்தைத் தழுவிய பிலால் (ரழி) அவர்கள் ஒரு கறுப்பு நிற நீக்ரோ அடிமையாவார். ஆனால் அவர் எப்போது இஸ்லாத்தைத் தழுவினாரோ அப்பொழுதே. அவர் அரேபியாவில் உயர் குலமாகக் கருதப்படும் குறைஷிக் குலத்தவரின் அந்தஸ்துக்கு உயர்ந்து விட்டார். தொழுகைக்கு அழைப்பு விடும் முதலாமவராக அவர் நியமிக்கப்பட்டு கண்ணியப்படுத்தப்பட்டார். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்களின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டார். இஸ்லாத்தின் இரண்டாவது கலீபாவான உமர் (ரழி) அவர்கள் கூட பிலால் (ரழி) அவர்களை ‘யா செய்யதீ’ என்னுடைய தலைவரே என்று அன்புடன் அழைக்கும் அளவுக்கு இஸ்லாம் அவரை உயர்த்திவிட்டது.

இத்தகைய வேற்றுமைகளை வேரறுத்த இஸ்லாத்தின் கொள்கைகளால் கவரப்பட்ட இந்தியாவின் ‘கவிக்குயில்’ எனப் போற்றப்பட்ட சரோஜினி நாயுடு அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள். ‘மனிதத்துவத்தைப் போதித்து நடைமுறைப்படுத்திய முதல் மார்க்கம் இஸ்லாம்தான். பள்ளிவாசலின் மினாராவிலிருந்து தொழுகைக்காக விடுக்கப்படும் அழைப்பு நாளெல்லாம் ஐவேளையும் வணங்குவதற்காக முஸ்லிம்களை ஒன்று திரட்டுகிறது. அப்பொழுது நாட்டுப் புறத்து விவசாயியும் நாடாளும் மன்னனும் முழந்தாளிலிருந்து, ‘அல்லாஹ் ஒருவனே… அனைத்துக்கும் பெரியவன்’ என்று பிரகடனம் செய்கின்றனர். உண்மையான ஜனநாயகம், உயிர் பெற்றுத் திகழ்வதைப் பார்க்கிறேன். உண்மையான சகோதரத்துத்துவத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் இஸ்லாமும் அதன் போதனைகள் என்னைக் கவர்ந்து விட்டன’ லண்டனில் இஸ்லாமானது இன மொழி, நிற வர்க்க வேறுபாடுகளைக் களைந்து பாவகரமான தீமைகளிலிருந்து பாதுகாப்பதில் வெற்றி கொண்டுள்ளது. இவ்வுயரிய சமத்துவ உணர்வுடைய மக்களை உருவாக்கியமைக்கு இறை கட்டளையும் இறைதூதரின் உயரிய போதனைகளும் வழி முறைகளுமே காரணமாகும். உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் இன மொழி, நிற, வர்க்க, தேச வேறுபாடுகளைக் கடந்து புனித ஆலயமான மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ் என்னும் இறையில்லத்தில் தோளோடு தோள் சேர்ந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் காட்சியானது சமத்துவத்தை நிலைநாட்டிய இஸ்லாத்தின் சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

யாழ் அஸீம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT