Monday, July 22, 2024
Home » தியாகத் திருநாள்

தியாகத் திருநாள்

by damith
June 17, 2024 6:00 am 0 comment

இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தற்போது தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இஸ்லாத்தின் இறுதித் கடமையாக விளங்கும் ஹஜ்ஜை நிறைவேற்றிய பின்னர் கொண்டாடப்படும் பெருநாளே இது. இஸ்லாமிய வருடக் கணிப்பில் இறுதி மாதத்தில் இப்பெருநாள் கொண்டாடப்படுகிறது.

இஸ்லாம் முஸ்லிம்களுக்கு இரண்டு நாட்களை பெருநாட்களாக விதியாக்கியுள்ளது. அதில் ஒன்றுதான் ஹஜ் பெருநாள் ஆகும். இது இற்றைக்கு ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இறைத்தூதரான இப்றாஹீம் (அலை) (ஏப்ரகாம்) நபியினதும் அவரது குடும்பத்தினதும் தியாகம், அர்ப்பணிப்பு, பொறுப்பு, சகிப்புத்தன்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

மற்றைய பெருநாள் நோன்பு பெருநாளாகும். இது இஸ்லாத்தின் மற்றொரு பிரதான கடமையாக விளங்கும் ரமழான் மாத நோன்பை நிறைவேற்றிய பின்னர் கொண்டாடப்படக் கூடியதாகும்.

இஸ்லாம் விதியாக்கியுள்ள இரண்டு பெருநாட்களும் இரண்டு பிரதான கடமைகளை நிறைவேற்றிய பின்னர் கொண்டாடப்படக் கூடியவையாகும்.

அந்த வகையில் ஹஜ் பெருநாளானது பொருளாதார வசதிபடைத்தவர்கள் சவுதி அரேபியாவிலுள்ள மக்காவுக்கு சென்று வாழ்க்கையில் ஒரு தடவை ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும். அதனைத் தொடர்ந்து ஹஜ்ஜை நிறைவேற்றியவர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இப்பெருநாளைக் கொண்டாடுவது வழமையாகும்.

இறைத்தூதர் இப்றாஹீம் நபியும் அவரது குடும்பத்தினரும் மேற்கொண்ட தியாகம், அர்ப்பணிப்பு, சகிப்புத்தன்மை, பொறுமை என்பன மனித நாகரீகத்திற்கு அடித்தளமிட்டன. இப்றாஹீம் நபி தம் வாழ்க்கை அமைப்பையே மனித சமூகத்திற்கு வழிகாட்டுவதற்கு ஏற்ப அமைத்துக் கொண்டார். இறை கட்டளைகளை முழுமையாக செயலுப்படுத்திய இறைத்தூதர் அவர் ஆவார். அதனால் அவர்களது தியாகம், அர்ப்பணிப்பு, பொறுமை சகிப்புத்தன்மை ஆகியன முன்மாதிரி மிக்கவையாகவும் படிப்பினைகள் நிறைந்தவையாகவும் விளங்குகின்றன.

இப்றாஹீம் நபியினதும் அவரது குடும்பத்தினரதும் தியாகம், அர்ப்பணிப்பு, சகிப்புத்தன்மையை எடுத்தியம்பக் கூடியதாக ஹஜ் கடமையும் ஹஜ் பெருநாளும் விளங்குகின்றன.

இவ்வாறு சிறப்பும் மகத்துவம் மிக்க நீண்ட வரலாற்று பாரம்பரிய பின்புலத்தைக் கொண்ட ஹஜ் பெருநாளை முஸ்லிம்கள் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் இலங்கை முஸ்லிம்கள் கடந்த சில வருடங்களுக்கு பின்னர் இம்முறை தான் இப்பெருநாளை மன நிறைவுடன் கொண்டாடும் வாய்ப்பை பெற்றுக் கொண்டுள்ளனர். 2020 முதல் கொவிட் பெருந்தொற்று அச்சுறுத்தல், 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் நாடு முகம் கொடுத்த பொருளாதார வீழ்ச்சி என்பவற்றினால் இந்நாட்டு மக்களுக்கு சுதந்திரமாகவும் அச்சம் பீதியின்றியும் பெருநாட்களையும் பண்டிகளையும் மன நிறைவோடு கொண்டாடக் கூடிய வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை.

2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நாட்டின் தலைமையைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை விரிவான அடிப்படையில் ஆரம்பித்தார். நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டங்களின் பயனாக குறுகிய காலப்பகுதிக்குள் நாடு கட்டம் கட்டமாக மீட்சி பெற்று மறுமலர்ச்சி பாதையில் பிரவேசித்து நம்பிக்கை தரும் வகையில் முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. இதன் பயனாக பொருளாதார நெருக்கடி காலத்தில் நாட்டில் நிலவிய நெருக்கடிகளும் அசௌகரியங்களும் பெரும்பாலும் நீங்கிவிட்டன.

அந்த பொருளாதார வீழ்ச்சியின் தாக்கங்கள் முழுமையாக நீங்காத பிரதிபலிப்புக்கள் காணப்பட்ட போதிலும் மன நிறைவுடன் இப்பெருநாளைக் கொண்டாக்கூடிய வாய்ப்பு முஸ்லிம்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

அதேபோன்று வெசாக் பண்டிகையையும், சிங்கள – தமிழ் புத்தாண்மையும், ஈஸ்டர் பண்டிகையையும் இந்நாட்டின் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மக்கள் ஏற்கனவே மனநிறைவோடு கொண்டாடியுள்ளார்கள். இந்நாட்டு மக்கள் தங்கள் பெருநாட்களை மனநிறைவோடு கொண்டாடுவதற்கான வாய்ப்பைப் பல வருடங்களுக்குப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி முன்னெடுத்துள்ள பொருளாதார மீட்பு வேலைத்திட்டங்கள் பாரிய பங்களிப்பு நல்கியுள்ளன.

அதன் பிரதிபலனாக முஸ்லிம்களும் தங்கள் பெருநாளை மன நிறைவோடு கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளில் நாம் அனைவரும் உலக மக்களின் அமைதிக்காகப் பிரார்த்தனை நடத்துவதே சிறந்தது ஆகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT