Saturday, July 13, 2024
Home » தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாததாக மாற்றிவிடும்!
தமிழ் பொது வேட்பாளர் முயற்சி

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாததாக மாற்றிவிடும்!

பயனற்றது, தமிழ் இனத்துக்கே ஆபத்தானது - டக்ளஸ் எச்சரிக்கை

by damith
June 17, 2024 9:00 am 0 comment

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தரப்பு பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சி பயனற்றது மாத்திரமல்ல, அது தமிழ் மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்துமென ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் (15) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் சிலர் பேசி வருகின்றனர். அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

ஆனால், என்னைப் பொறுத்தவரையில் தமிழ்த்தரப்பு பொது வேட்பாளர் என்பது அவசியமற்றது என்றே நினைக்கின்றேன். அந்த முயற்சி, தமிழ் மக்களுக்குப் பயனற்றது மாத்திரமல்ல அது பாதிப்பையே ஏற்படுத்தும்.

உண்மையில் தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக இருக்கும் பிரச்சினைகளை, தீராப் பிரச்சினைகளாக வைத்திருப்பதற்கான ஒரு முயற்சியாகவே இதனை நான் பார்க்கின்றேன்.

இவர்கள் எல்லோரையும உருளைக்கிழங்கைப் போல் மூடையாக ஒன்றாகக் கட்டி வைத்திருந்தார்கள், இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லாத சூழலில் ஒவ்வொரு திசைக்கு உருண்டோடி சிதறுப்பட்டு இருக்கின்றனர்.

இவ்வாறான நிலைமையில் இவர்களுக்குள் ஐக்கியம், ஒற்றுமை எங்கே இருக்கின்றது? பல வருடங்களாக இவர்களை கட்டி வைத்து கிடைத்தது என்ன? அழிவைக் கட்டுப்படுத்த முடிந்ததா? அல்லது முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டதா? ஒன்றும் இல்லாத நிலையில் இப்போது தேர்தல் வருவதால் மீண்டும் அதைப் பற்றிப் பேசுகின்றனர்.

எம்மைப் பொறுத்தவரையில் இவர்களைப் போன்று அல்லாமல் கடந்த காலங்களில் நாம் மக்களுக்கு எதைக் கூறினோமோ அதனையே இப்போதும் கூறுகின்றோம்.

ஆக சொல்வதைச் செய்வதும் செய்வதைச் சொல்வதும்தான் நான். எனவே, எங்களை நம்பி மக்கள் எம்மோடு பயணிப்பதன் ஊடாக பல்வேறு விடயங்களைப் பெற்றுக்கொடுக்க முடியும்” என்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT