Saturday, July 20, 2024
Home » தொடரும் தாக்குதல்: காசாவில் விரைவில் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்புகள் குறைவு

தொடரும் தாக்குதல்: காசாவில் விரைவில் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்புகள் குறைவு

அமெரிக்கா அவநம்பிக்கை: லெபனானிலும் பதற்றம் அதிகரிப்பு

by gayan
June 15, 2024 7:48 am 0 comment

இஸ்ரேலிய இராணுவம் காசாவின் தெற்கு நகரான ரபாவில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் அமெரிக்கா முன்வைத்த போர் நிறுத்தத் திட்டம் தொடர்பான எதிர்பார்ப்பு குறைந்து வருகிறது.

பாதுகாப்புச் சபையால் உறுதி அளிக்கப்பட்ட மூன்று கட்ட போர் நிறுத்தத் திட்டத்தை முன்னெடுக்கும் இராஜதந்திர முயற்சிகள் இடம்பெறும் நிலையில், எகிப்து எல்லையை ஒட்டிய ரபாவில் இஸ்ரேல் கடந்த இரு தினங்களாக தாக்குதல்களை அதிகரித்துள்ளது.

அந்த நகர வீதிகளில் இஸ்ரேலிய தரைப்படை மற்றும் பலஸ்தீன போராளிகள் இடையே மோதல் வெடித்திருப்பதோடு, அங்கு ஹெலிகல் மூலம் சூடு நடத்தும் இஸ்ரேல் போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள், போர்க் கப்பல்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதனால் அங்கு அடைக்கலம் பெற்றிருந்த மக்கள் மீண்டும் ஒருமுறை வெளியேறி வருவதோடு உயிர்ச்சேதங்களும் பதிவாகி உள்ளன.

காசாவின் மற்றப் பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன. வடக்கில் காசா நகரில் உள்ள வீடு ஒன்றின் மீது கடந்த வியாழக்கிழமை (13) இடம்பெற்ற வான் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

காசா நகரின் நபெக் வீதியில் இருக்கும் வீட்டின் மீது இரு ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அங்குள்ள வபா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

காசா நகரில் குடியிருப்புப் பகுதி மீது இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுவர் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகரில் மேற்கில் உள்ள ஹைதர் சதுக்கத்திற்கு அருகில் பக்ரி குடும்பத்திற்குச் சொந்தமாக வீடு ஒன்றின் மீதே தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக உள்ளூர் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தெற்கு நகரான கான் யூனிஸின் துறைமுகப் பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் வீசிய குண்டு மழையில் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டிருப்பதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் 37,200க்கும் அதிமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

‘நம்பிக்கை இழக்கவில்லை’

காசாவில் போர் தொடர்ந்து தீவிரமாக நீடித்து வரும் நிலையில் கூடிய விரைவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இத்தாலியில் ஜி7 மாநாட்டில் பங்கேற்றிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இன்னும் ‘நம்பிக்கை இழக்கவில்லை’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்டிருக்கும் போர் நிறுத்தத் திட்டத்திற்கு, ஹமாஸ் அமைப்பு திருத்தங்களுடன் பதிலளித்திருந்தது. அது நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வாபஸ் பெறுவதை உறுதி செய்வதாகவே ஹமாஸின் பதில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் போர் நிறுத்தத் திட்டத்தை இஸ்ரேல் செயற்படுத்துவது பற்றி ஹமாஸ் அமைப்பு சந்தேகத்தையும் வெளியிட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் இணங்கியதாக அமெரிக்கா கூறுகின்றபோதும் இஸ்ரேல் தரப்பில் இருந்து இன்னும் உறுதியான பதில் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் போர் நிறுத்தம் ஒன்று கூடிய விரைவில் ஏற்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பைடன் ‘இல்லை’ என்றே பதிலளித்தார்.

இந்தப் போர் காசாவில் உள்ள 80 வீதத்திற்கும் அதிகமான மக்களை தமது வீடுகளை விட்டு வெளியேற்றி இருப்பதோடு நகரங்கள் முற்றாக சின்னபின்னமாக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் அங்கு பட்டினி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

‘எமக்கு தீர்வொன்று வேண்டும். நாம் எமது வீடுகளுக்கு திரும்ப வேண்டும். இந்த வாழ்க்கையில் களைத்துவிட்டோம்’ என்று மத்திய காசா நகரான டெயர் அல் பலாவில் இடம்பெயர்ந்து கூடாரத்தில் தங்கி இருக்கும் சலாமா அபூவல் கும்புஸ் குறிப்பிட்டார்.

காசாவில் பிடிக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு அவர்களின் குடும்பங்களில் இருந்து இஸ்ரேலிய அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. ஹமாஸுடன் உடன்பாடு ஒன்றுக்கு வருவதற்கு அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தப் போர் வெடிக்கக் காரணமான கடந்த ஒக்டோபர் 7 அன்று இடம்பெற்ற இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலின்போது சுமார் 250 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். கடந்த நவம்பரில் ஒரு வாரம் நீடித்த போர் நிறுத்தத்தின்போது 100 பணயக்கைதிகள் வரை விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து சுமார் 80 பேர் பயணக்கைதிகளாக இருப்பதோடு 40 உயிரிழந்த பணயக்கைதிகளின் சடலங்களும் இருப்பதாக நம்பப்படுகிறது.

எனினும் காசாவில் உள்ள பணயக்கைதிகள் பற்றி யாருக்கு தெரியாது என்று ஹமாஸ் பேச்சாளர் மற்றும் அந்த அமைப்பின் அரசியல் பிரிவு உறுப்பினரான ஒசாமா ஹம்தான் அமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

போர் வெடிப்பதற்கு காரணமான ஒக்டோபர் 7 தாக்குதலை நடத்தியதற்கு ஹமாஸ் வருந்துகிறதா என்று இதன்போது ஹம்தானிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘ஆக்கிரமிப்புக்கான எதிர்வினையாகவே அது இருந்தது’ என்று பதிலளித்தார்.

பஞ்சம் அதிகரிப்பு

இதேவேளை ஊட்டச்சத்து குறைபாட்டால் காசாவில் 12 வயது சிறுவன் ஒருவன் நேற்று மரணித்தாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. முஸ்தபா ஹிஜாசி என்ற அந்த சிறுவன் டெயர் அல் பலாஹ்வில் உள்ள அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமளையில் உயிரிழந்துள்ளார்.

காசா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புபட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்திருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கு காசாவில் பஞ்சம் அதிகரித்திருப்பதாகவும் 200,000இற்கும் அதிகமான பலஸ்தீன சிறுவர்கள் இடையே ஊட்டச்சத்து குறைபாட்டுக்கான அறிகுறிகள் தெரிவதாகவும் கமால் அத்வான் மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் ஹொசான் அபூ சபியா குறிப்பிட்டுள்ளார்.

அல் அரபியா தொலைக்காட்சிக்குப் பேசிய அவர், காசா மனிதாபிமான நெருக்கடி ஒன்றை எதிர்கொண்டிருப்பதாக எச்சரித்தார். ‘மாவை தவிர எந்த உணவுப் பொருளும் வடக்கு காசாவில் இல்லை. பஞ்சத்தின் அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு அனைத்து சர்வதேச நிறுவனங்களுக்கும் நான் ஒரு துயர அழைப்பை விடுக்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டார்.

காசாவில் ஏற்கனவே உணவு, மருந்து, எரிபொருளுக்கு தட்டுப்பாடு இருக்கும் நிலையில் கடந்த மே ஆரம்பத்தில் எகிப்துடனான ரபா எல்லைக் கடவையை இஸ்ரேலியப் படை கைப்பற்றியதை அடுத்து நிலைமை மோசடைந்துள்ளது. இந்த எல்லைக் கடவை காசாவுக்கான உதவிகள் வரும் வாயிலாக இருந்த நிலையில், அது தற்போது மூடப்பட்டுள்ளது.

‘இஸ்ரேல் உதவிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி, தாக்குதல்களை நிறுத்தி மற்றும் முக்கிய சேவைகளை மீள ஆரம்பிக்காத பட்சத்தில் விரைவில் காசாவில் பஞ்சம் ஏற்படும்’ என்று நிவாரண அதிகாரிகள் மற்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

பொரும்பாலான காசா குடியிருப்பாளர்கள் ‘கொடிய அளவில் பட்டினி மற்றும் பஞ்சம் போன்ற நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும்’ உலக சுகாதார அமைப்பு அண்மையில் எச்சரித்திருந்தது.

முழு அளவில் போர் அச்சுறுத்தல்

காசா போர் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்திருக்கும் சூழலில் இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே அடிக்கடி மோதலைத் தூண்டி வருகிறது. ஹிஸ்புல்லா மூத்த தளபதி ஒருவர் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் அந்தப் போராட்ட அமைப்பு பதில் நடவடிக்கையாக நேற்றும் இஸ்ரேல் மீது சரமாரி ரொக்கெட் மற்றும் ஆளில்ல விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது முழு அளவில் போர் ஒன்றாக வெடிக்கும் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.

தெற்கு லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டு வருவதாகவும் எல்லை நகரான கிர்யாத் ஷமோனின் சுற்றுப்புற பகுதிகள் இலக்காகி வருவதாகவும் இஸ்ரேலிய அவசர சேவைகள் பிரிவு நேற்று தெரிவித்தது.

வடக்கு காசாவில் எச்சரிக்கை சைரன் ஒலி எழுப்பப்பட்டிருப்பதோடு பொருட் சேதங்கள் பதிவாகி இருப்பதாகவும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அவசர சேவை பிரிவு குறிப்பிட்டது.

இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து தொடர்ந்து மூன்றாவது நாளாகவே ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தெற்கு லெபனானின் டைரே மாவட்டத்தில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஏழு பேர் காயமடைந்ததாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

இதன்போது ஜென்னத் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றே தாக்கப்பட்டிருப்பதாக அந்த செய்தி கூறுகிறது.

பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் இன்னும் நிறுத்தப்படவில்லை. உக்ரைனியருக்கு சொந்தமான சரக்குக் கப்பல் மற்றும் மேலும் இரு கப்பல்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் ஒரு கப்பலில் சேதங்கள் ஏற்பட்டு தீ பரவி இருப்பதோடு ஒருவர் காயமடைந்திருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT