Saturday, July 20, 2024
Home » நியூசிலாந்தை வெளியேற்றி ‘சுப்பர் 8’ சுற்றுக்கு ஆப்கான் அணி முன்னேற்றம்

நியூசிலாந்தை வெளியேற்றி ‘சுப்பர் 8’ சுற்றுக்கு ஆப்கான் அணி முன்னேற்றம்

இலங்கையின் வெளியேற்றம் உறுதி

by gayan
June 15, 2024 6:00 am 0 comment

பப்புவா நியூகினிக்கு எதிரான டி20 உலகக் கிண்ண சி குழுவுக்கான போட்டியில் 7 விக்கெட்டுகளால் வெற்றிட்டிய ஆப்கானிஸ்தான் அணி சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது. இதன்மூலம் அந்தக் குழுவில் முதல் இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருக்கும் நியூசிலாந்து அணி முதல் சுற்றுடனேயே வெளியேற வேண்டி ஏற்பட்டுள்ளது.

டிரினிடாட்டில் இலங்கை நேரப்படி நேற்று (14) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பப்புவா அணியை 95 ஓட்டங்களுக்கே ஆப்கானால் சுருட்ட முடிந்தது. பசால் ஹக் பரூக்கி 4 ஓவர்களுக்கும் 16 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

பதிலெடுத்தாடிய ஆப்கான் அணி முதல் இரு விக்கெட்டுகளையும் 22 ஓட்டங்களில் பறிகொடுத்தபோதும் 15.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்ட முடிந்தது. குல்புத்தீன் நாயிப் 36 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களை பெற்றார்.

இந்த முடிவினால் கடந்த மூன்று டி20 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் அரையிறுதி வரை முன்னேறி 2021 தொடரிபில் இறுதிப் போட்டி வரையில் முன்னேறிய நியூசிலாந்து அணி உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டியதோடு அந்த அணி இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று நடந்த பி குழுவின் ஓமானுக்கு எதிரான போட்டியில் இலகு வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி தனது சுப்பர் 8 வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அன்டிகுவாவில் நடந்த அந்தப் போட்டியில் ஓமான் அணியை 47 ஓட்டங்களுக்கு சுருட்டிய நடப்புச் சம்பியன் இங்கிலாந்து வெற்றி இலக்கை 3.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து பெற்றது.

நேற்று முன்தினம் நடந்த டி குழுவுக்கான தீர்க்கமான போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி தனது சுப்பர் 8 வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது. டி குழுவில் தென்னாபிரிக்க அணி ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருப்பதோடு நேற்றைய போட்டியில் முடிவு ஒன்று கிடைக்கப்பெற்றதை அடுத்து இலங்கை அணி ஆரம்ப சுற்றுடன் வெளியேறுவது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்தக் குழுவில் சுப்பர் எட்டுக்கு முன்னேறுவதற்கு பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே போட்டி நீடித்து வருகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT