Saturday, July 20, 2024
Home » தமிழக வேலைவாய்ப்பில் திருநங்கையை புறக்கணித்த நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தமிழக வேலைவாய்ப்பில் திருநங்கையை புறக்கணித்த நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

by gayan
June 15, 2024 6:45 am 0 comment

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் 2017ஆம் ஆண்டு குரூப் 2 தேர்வில் கலந்துகொண்டு 121.5 கட்-ஓஃப் மதிப்பெண்கள் பெற்ற திருநங்கை அனுஸ்ரீ தொடர்ந்த வழக்கில், மாற்று பாலினத்தவரை சிறப்புப் பிரிவினராக கருதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநங்கைகளுக்கான நலவாரியம், தொழில் தொடங்குவதற்கான நிதி, கட்டணமில்லா பேருந்து பயணம், கட்டணமில்லா கல்வி என பல்வேறு சமூகநலத் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்று பாலினத்தவருக்கான சிறப்பு இடஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை. தமிழ்நாட்டின் திருநங்கைகள் நலவாரியத்தின் உறுப்பினராகவும், செயற்பாட்டாளராகவும் இருந்து வரும் திருநங்கை அனுஸ்ரீ சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஒன்றில், தமிழக அரசு மாற்று பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக கருதி அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தான் தொடர்ந்த வழக்கு குறித்து திருங்கை அனுஸ்ரீ பேசினார். கீழ்கண்ட தகவல்களை அவர் தெரிவித்தார்.

2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வை எழுதியுள்ளார் அனுஸ்ரீ. ஆனால், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அவரது கட்-ஓஃப் மதிப்பெண் போதவில்லை என்று அவருக்கு பணி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யாமல் நிராகரித்து விட்டது டி.என்.பி.எஸ்.சி.

திருநங்கையர் பிரிவில் தேர்வெழுதியிருந்தாலும், அந்த பிரிவுக்கான சிறப்பு ஒதுக்கீடு எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டிய டிஎன்பிஎஸ்சி, அனுஸ்ரீ சார்ந்த சமூகத்தின் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு வரிசைப்படி அவரது மதிப்பெண் போதவில்லை என்று அவரை நிராகரித்துள்ளது.

இதை எதிர்த்து2018-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் அனுஸ்ரீ. இந்த வழக்கில் தற்போது அவருக்கு சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் பணி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விளக்கமளிக்கக்கோரி உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

அந்த தீர்ப்பின்படி, வருகின்ற 22.6.2024-க்குள் அனுஸ்ரீயின் சான்றிதழ் சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும் என்றும், தமிழக அரசு மாற்று பாலினத்தவருக்கு சிறப்பு பிரிவின் கீழ் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT