Saturday, July 20, 2024
Home » பலஸ்தீன மக்களின் வலிகளை சர்வதேசம் புறக்கணிக்கின்றதா?

பலஸ்தீன மக்களின் வலிகளை சர்வதேசம் புறக்கணிக்கின்றதா?

சிட்னி நூல் வெளியீட்டில் தனபாலசிங்கம் உரை

by gayan
June 15, 2024 6:30 am 0 comment

பலஸ்தீனத்தில் பலஸ்தீன மக்களுக்கு எதிராக, இஸ்ரேலிய நில ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை ஆண்டு வரிசையில் தரவுகளுடன் ஐங்கரன் விக்கினேஸ்வரா விளக்கியுள்ளார் என ‘பாலஸ்தீனம் எரியும் தேசம்‘ நூலை அறிமுகம் செய்த சிட்னியின் மூத்த தமிழ் செயற்பாட்டாளர் தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

சிட்னி தமிழ் மன்றம் ஆதரவில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடும் இலக்கிய அரங்கும் அண்மையில் நடைபெற்றன.

சிட்னியில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த தமிழ் செயற்பாட்டாளர் தனபாலசிங்கம் மேலும் தெரிவிக்கையில், “தற்போது பலஸ்தீன மக்கள் மிகவும் நெருக்கடியான காலத்தில் இனப்படுகொலை ஒன்றுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். உலக நாடுகள் வெறுமனே கண்டிப்பதுடன் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன.

இந்நூலில் அரசியல்- வரலாற்றுத் தகவல்களை ஐங்கரன் விக்கினேஸ்வரா தெளிவாக விளக்குகியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

“ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் பலஸ்தீன மக்கள் எதிர்நோக்கிய, நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘பாலஸ்தீனம் எரியும் தேசம்’ என்ற நூலானது பலஸ்தீன மக்களின் வலிகளை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது.

இந்நூலில் நிகழ்கால பலஸ்தீன போர்க்கள நிகழ்வுகளின் ஆய்வுக் கட்டுரைகள் பல வெளியாகியுள்ளன. நூறாண்டுகளாக தொடரும் துயரத்தைச் சுமந்த எரிகின்ற பாலஸ்தீன தேசம் பற்றிய வரலாற்றுப் பார்வையில் கட்டுரைகள் இந்நூலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இன்று பலஸ்தீனம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு பல துண்டுகளாக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டுள்ளது. சர்வதேசமும் இவர்களை கைவிட்டுள்ளது. எவ்வாறு நிலங்கள் துண்டாடப்பட்டன, எவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டன, மக்கள் மீது எவ்வாறு போர் திணிக்கப்பட்டது. வன்முறைகளும் இடப்பெயர்வுகளும் காலனித்துவ நாடுகளின் சதிகளும் துரோகங்களும் அவர்களின் இரட்டை நிலைப்பாடுகளும், எனப் பல பொதுத்தன்மைகளை இந்நூலில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

இலங்கை இலக்கிய உலகில் நீண்ட காலம் அறிமுகமான ஐங்கரன் விக்கினேஸ்வரா நீண்ட காலமாக சர்வதேச அரசியல் விவகார ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவருபவர். இதற்கு ஆழமான புரிதலும் நீண்டகால தெளிவான நோக்கமும் இருக்க வேண்டும்” என்றும் தனபாலசிங்கம் தெரிவித்தார்.

‘பாலஸ்தீனம் எரியும் தேசம்’, ‘ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்’, ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடு கடந்த வாரம் ஜூன் 7 ஆம் திகதி சிட்னியில் உள்ள பெமுள்வே சமூக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் தலைமையுரையை எழுத்தாளர் மாத்தளை சோமு ஆற்றினார். அதன்பின் பாலஸ்தீனம் எரியும் தேசம் நூல் அறிமுகவுரையை தனபாலசிங்கம் நிகழ்த்தினார். அதன்பின் ‘ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்’ நூலின் அறிமுகவுரையை டொக்டர் ஹாரூன் காசிம் ஆற்றினார்.

‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ நூலின் அறிமுகவுரையை எழுத்தாளர் சுந்தரதாஸ் ஆற்றினார்.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் தினகரன் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, சிறப்புரை நிகழ்த்தினார். அத்துடன் திருநந்தகுமார், பாடும் மீன் சிறிஷ்கந்தராஜா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

சிட்னி தமிழ் மன்றம் ஆதரவில் நடைபெற்ற நூல் வெளியீடு மற்றும் இலக்கிய அரங்கின் ஏற்புரையை ஐங்கரன் விக்கினேஸ்வரா நிகழ்த்தினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT