Saturday, July 13, 2024
Home » இளைஞர்கள் மத்தியில் பா.ஜ.க மீதான ஈர்ப்பு இன்னுமே குறையாதது ஏன்?

இளைஞர்கள் மத்தியில் பா.ஜ.க மீதான ஈர்ப்பு இன்னுமே குறையாதது ஏன்?

நரேந்திர மோடியின் வெற்றிக்கு உரமூட்டிய இளவயதினர்!

by gayan
June 15, 2024 6:00 am 0 comment

இந்தியா போன்ற ஒரு பெரிய மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த நாட்டில், வாக்காளர்களின், குறிப்பாக இளைஞர்களின் (25 வயதுக்குட்பட்ட) விருப்பத்தேர்வுகள், மிகவும் கவனமாக ஆராய்ந்து புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.

முக்கியமான தேர்தல் களங்களில், அவர்களது வாக்குகள்தான் யார் வெற்றியாளர் என்பதைத் தீர்மானிக்கும். எனவே அவர்கள்தான் அரசியல் கட்சிகளின் பிரதான இலக்குகள். எனவே, நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் இளைஞர்கள் வாக்களித்தது எப்படி என்பது ஆராயப்பட வேண்டியதாகும்.

இளைஞர்கள் மத்தியில் பாஜக ஈர்ப்பு:

2019ஆம் ஆண்டில் 20 சதவீத இளைஞர் வாக்காளர்கள் காங்கிரஸை ஆதரித்தனர். இந்த எண்ணிக்கை 2024-இல் ஒரு சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு பெருமளவில் வளரவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

மாறாக, 2019இல் இளைஞர்களிடம் இருந்து பா.ஜ.கவுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அப்போது 40 சதவீத இளைஞர் வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றது பா.ஜ.க. இந்த இளைஞர் வாக்கு வங்கிதான், வயது முதிர்ந்த வாக்காளர்களிடமிருந்து பா.ஜ.கவை வேறுபடுத்திக் காட்டுகிறது.

இந்தியப் பெண்கள் முன்னரை விட தற்போது வாக்களிப்பதில் கூடுதல் ஆர்வம்

இந்தியப் பெண்கள் முன்னரை விட தற்போது வாக்களிப்பதில் கூடுதல் ஆர்வம்

2024ஆம் ஆண்டில் பா.ஜ.கவின் இளம் ஆதரவாளர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறையவில்லை. 25 வயதுக்குட்பட்ட வாக்காளர்களிடையே ஒரு சதவீத வாக்குகளும், 26 முதல் 35 வயதுக்குட்பட்ட வாக்காளர்களிடையே இரண்டு சதவீத வாக்குகளும் மட்டுமே குறைந்துள்ளன.

இங்கு ஒரு கேள்வி எழுகிறது? பின்னர் எப்படி இந்த முறை காங்கிரஸ் கட்சியால், பா.ஜ.கவுக்கு சவால் விட முடிந்தது?

2024 மக்களவைத் தேர்தலில், 21 சதவீத இளம் வாக்காளர்கள் காங்கிரஸையும், 39 சதவீதம் பேர் பா.ஜ.கவையும், 7 சதவீதம் பேர் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகளையும் ஆதரித்தனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மொத்தம் 46 சதவீத இளைஞர்கள் வாக்குகள் கிடைத்துள்ளன.

இருப்பினும், இந்தியா கூட்டணிக்கு என்ன பலன் கிடைத்தது என்றால், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் 12 சதவீத இளைஞர் வாக்குகளைப் பெற்றன. இது பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளை (7%) விட அதிகமாக இருந்தது. மேலும் இது என்.டி.ஏ மற்றும் இந்தியா கூட்டணிக்கு இடையிலான வாக்குப் பங்கில் இருந்த இடைவெளியைக் குறைக்க உதவியது.

சுருக்கமாகச் சொன்னால், பா.ஜ.க தனது இளைஞர் ஆதரவை குறிப்பிடத்தக்க இழப்பு ஏதுமின்றி, அப்படியே தக்கவைத்துக் கொண்டது. அதேநேரத்தில் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இளம் வாக்காளர்கள் மத்தியில் கணிசமான வெற்றியைப் பெற்றன.

மிக முக்கியமாக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்குப் பங்கு, வயது வாரியான வாக்காளர் குழுக்களில் சமமாக இருந்தபோதும், பா.ஜ.கவைப் பொறுத்தவரை, வயது அதிகரிக்கும்போது ஆதரவு குறைந்துள்ளது.

வயதான வாக்காளர்களை விட, இளம் வாக்காளர்கள் மத்தியில் பா.ஜ.கவின் மீதான ஈர்ப்பு அப்படியே உள்ளது என்பதே இதன் அர்த்தம்.

இந்தியத் தேர்தல்களில் பெண் வாக்காளர்களின் முக்கியத்துவம் மிகைப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

சமீப ஆண்டுகளில் இந்திய அரசியலில் பெண்கள் அதிக முக்கியத்துவத்தைப் பிடித்துள்ளனர்.

ஆனால் மறுபுறம், பா.ஜ.கவுக்கு 2019இல் ஒரு பெரிய வெற்றி மற்றும் 2024இல் ஓரளவு வெற்றி என கிடைத்துள்ள போதிலும், பா.ஜ.கவுக்கு ஆதரவாக பெண்களின் வாக்குகளில் ஒரு தீர்க்கமான மாற்றம் ஏற்பட்டுள்ளது எனக் கூற எந்த ஆதாரமும் இல்லை.

நிச்சயமாக, இந்தியப் பெண்கள் முன்பை விட அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வருகிறார்கள்.

2019 மக்களவைத் தேர்தலின் போது, ஆண்களின் வாக்குப்பதிவை விட பெண்களின் வாக்குப்பதிவு வெறும் 0.6% மட்டுமே குறைவாக இருந்தது. ஏனெனில் 1990களில் இந்த வித்தியாசம் 10% அதிகமாக இருந்தது.

ஆனால் தேசிய அளவில் பா.ஜ.கவுக்கு ஆதரவான வகையில் பெண்களின் வாக்குகளில் ஒரு தீர்க்கமான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற கூற்றை நிரூபிக்க முடியவில்லை.

தேர்தல் முடிவுகள் கூறுவது:

காங்கிரஸ் தொடர்ந்து ஆண்களை விட பெண்களிடையே அதிக ஆதரவைப் பெற்றுள்ளது.

தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பின் தரவுகள், ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களிடையே பா.ஜ.க அதிக ஆதரவைப் பெறவில்லை என்பதைக் காட்டுகிறது. இது 2024 மக்களவைத் தேர்தலுக்கு மட்டுமல்ல, கடந்த 2019 மற்றும் 2014 மக்களவைத் தேர்தலுக்கும் பொருந்தும்.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 37% ஆண்களும் 36% பெண்களும் பா.ஜ.கவுக்கு வாக்களித்துள்ளனர், அதாவது அக்கட்சி பெற்ற வாக்குகளில் ஒரு சதவீத பாலின வேறுபாடு மட்டுமே உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், காங்கிரஸ் தொடர்ந்து ஆண்களை விட பெண்களிடையே அதிக ஆதரவைப் பெற்றுள்ளது. 2024இல் காங்கிரசுக்கு ஆண்களை விட பெண்களின் ஆதரவே அதிகமாக கிடைத்துள்ளது.

தலித்துகள், பழங்குடியினர், கிராமப்புற வாக்காளர்கள் போன்ற பல்வேறு சமூகங்களிடையே பா.ஜ.க தனது அடித்தளத்தை அதிகரித்தாலும், 2024ஆம் ஆண்டில் பதிவான பெண்கள் வாக்குகள் குறித்த தரவுகள், பெண் வாக்காளர்களிடையே பா.ஜ கவுக்கு குறைவான செல்வாக்கே இன்றும் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT