Saturday, July 20, 2024
Home » பாரதியாரின் சமயப் பொதுமைக்கும் சமரச நோக்குக்கும் சான்று பகரும் நூல்
"ஒரு முண்டாசு கவிஞரின் முஸ்லிம் நேசம்"

பாரதியாரின் சமயப் பொதுமைக்கும் சமரச நோக்குக்கும் சான்று பகரும் நூல்

by gayan
June 15, 2024 7:00 am 0 comment

எழுத்துத் துறையில் பல தசாப்தங்களாக இலக்கியப் பணி புரிந்து வரும் மானா மக்கீன், இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஒருவர். இத்துறையில் இவர் 40க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு இலக்கியத் துறைக்கு பெரும் பணியாற்றியுள்ளார்.

மகாகவி பாரதியார் மீது அதிக ஈடுபாடுடைய மானா மக்கீன், “ஒரு முண்டாசுக் கவிஞரின் முஸ்லிம் நேசம்” என்ற பெயரில் மகாகவி பாரதியாரின் முஸ்லிம் நேசம் பற்றிய பல சுவாரசியமான தகவல்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். 132 பக்கங்களை உள்ளடக்கியதாக மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ள இந்த நூலில் உள்ள அருமையான பல தகவல்களில் சிலவற்றை வாசகர்களுக்காக இங்கு முன்வைக்கிறேன்.

மானா மக்கீன் தனது இந்த நூலுக்கான உள்ளடக்கங்களை – ஆரம்பிக்கிறேன், தொடர்கிறேன், தொட்டுத் தருகிறேன், ஆய்ந்து பார்க்கிறேன், இந்தியாவைத் தொடுகிறேன், இவர் பார்வையில் இஸ்லாம், பாடல்களில் இஸ்லாமியத் தாக்கம், விஜயாவைக் கண்டுபிடித்த வெங்கடாசலபதி, தமிழ் இதழியலில் புதுசு – புரட்சி, நிறுத்துகிறேன் – நெருடல்களை நேர் செய்து, விடைபெறும் வேளை, உசாத்துணை நூல்கள் ஆகிய 12 தலைப்புகளில் மிகவும் அழகாக முன்வைக்கின்றார்.

முண்டாசுக் கவிஞர், இளசை சுப்பிரமணியன் என்று சொன்னால் புரியாதவர்களுக்குக்கூட மகாகவி பாரதியார் என்றால் சட்டென்று புரிந்துவிடும். மகாகவி பாரதியாரை பலரும் பல்வேறு வகையாக விமர்சித்தாலும்கூட அவருடைய மனிதப் பண்பாட்டுடன் கூடிய எழுத்துக்களை யாரும் மறுதலிக்க முடியாது என்று முனைவர் பா. இறையரசன் (தஞ்சாவூர்) தமது ‘இதழாளர் பாரதி’ (1995 வெளியீடு) என்ற நூலில் 197 –198 ஆகிய பக்கங்களில் குறிப்பிடுகின்றார்.

அத்துடன் ஓய்வுறக்கத்திலிருக்கும் பன்னூலாசிரியர் எம்.ஆர்.எம். அப்துல் ரஹீம் (தொண்டி) மற்றும் பேராசிரியர், முனைவர் மு. சாயபு மரக்காயர் (காரைக்கால்) போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே இந்த முண்டாசுக் கவிஞருக்கு முட்டுக் கொடுத்துள்ளார்கள் என்ற தகவலையும் முன்வைக்கின்றார் நூலாசிரியர் மானா மக்கீன்.

1983 ஆம் ஆண்டுகளில் “பாரதி கண்ட இஸ்லாம்” என்ற பெயரில் ஒரு சிறு நூல் வெளிவந்ததாக அறிய முடிகின்றது. இந்த நூலுக்கு மர்ஹூம் அப்துர் ரஹீம் அணிந்துரை வழங்கியுள்ளார். நூலாசிரியர் மு.சாயபு மரக்காயர் பொதுவாக இஸ்லாமிய தத்துவங்கள் மீதும், திருநபியவர்கள் மீதும் பாரதியார் பெருமதிப்புக் கொண்டிருந்தார் என்ற தகவல்களை பல சான்றுகளுடன் அந்த நூலில் முன்வைத்துள்ளார்.

அத்துடன் “பாரதி கண்ட இஸ்லாம்” என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதும் அளவுக்கு பாரதியார் இஸ்லாத்தைப் பற்றி எழுதி இருக்கின்றாரா? என்று தனது நண்பர்கள் மிகுந்த வியப்போடு கேட்டதாகக் குறிப்பிட்டு, கதை, கட்டுரை, கவிதை போன்ற எல்லாத் துறைகளிலும் பாரதியார் இஸ்லாத்தைப் பற்றி பேசியிருப்பதாக தான் சுட்டிக் காட்டியதாகக் கூறுகின்றார்.

பாரதியின் இஸ்லாமிய படைப்புகளைப் படித்த போதே உண்மையில் அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்புக் கூடியது என்று குறிப்பிட்டு, சாதி மதங்களுக்கு அப்பால் பாரதியின் மனித நேயமே இந்த “பாரதி கண்ட இஸ்லாம்” என்ற நூலை எழுதுமாறு தன்னைத் தூண்டியதாக மு.சாயபு மரக்காயர் தனது நூலின் என்னுரையில் குறிப்பிடுகின்றார்.

மகாகவி பாரதியார் இந்து சமயத்தில் அழுத்தமான பிடிப்பும் ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டவர். ஆயினும் பிற சமய தெய்வங்களை வெறுத்தவர் அல்லர். ஏக இறைவனாகிய அல்லாஹ்வையும் இயேசு கிறிஸ்துவையும் போற்றிப் புகழ்ந்துள்ளார். பாரதியாரின் சமயப் பொதுமைக்கும், சமரச நோக்கிற்கும் அவருடைய பல பாடல்கள் சான்றாக அமைந்துள்ளன. இவ்வாறான பின்னணியுடைய ஒரு மகாகவி பாரதியாரைத் தோன்றாத் துணையாக வைத்துக் கொண்டு அவர் மறைந்து நூற்றாண்டைக் கடந்த நிலையிலும் முண்டாசுக் கவிஞருக்கு நானும் ஒரு முண்டாசு கட்ட விழைகின்றேன் என்று மானா மக்கீன் குறிப்பிடுவது போற்றத்தக்கது. அந்தவகையிலேயே முஸ்லிம் அபிமானிகளுக்குத் தெரியாத மகாகவியின் முஸ்லிம் நேசம் பற்றிய பல தகவல்களைத் திரட்டி தனது பதிவை முன்வைக்கின்றார். நூலாசிரியர் மானா மக்கீன். முண்டாசுக் கவிஞரின் முழு வாழ்க்கையையும் இங்கு நோக்காமல் தனது இதழியல் வாழ்க்கை மற்றும் மேடைகளில் முஸ்லிம் நேசத்தை எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதே இங்கு எடுத்து நோக்கப்பட்டுள்ளது.

தனது இதழியல் வாழ்க்கையில் பின்வரும் இதழ்களின் மூலம் பாரதியார் தனது இதழியல் ஆளுமையைப் பதிவு செய்துள்ளார்.

சுதேசமித்திரன் (சென்னை) – 1904, ஆசிரியர்

சக்கரவர்த்தினி (சென்னை) – 1905, ஆசிரியர்

இந்தியா (சென்னை) – 1906, ஆசிரியர்

பாலபாரதா (சென்னை) – 1906, ஆசிரியர்

இந்தியா (புதுவை) – 1908, ஆசிரியர்

விஜயா (புதுவை) – 1909, ஆசிரியர்

கர்மயோகி (புதுவை) – 1910, ஆசிரியர்

தர்மம் (புதுவை) – 1910, ஆசிரியர்

சூரியோதயம் (புதுவை) – 1910, ஆசிரியர்

பாலபாரதா (புதுவை) – 1910, ஆசிரியர்

சுதேசமித்திரன் (சென்னை) – 1916, துணை ஆசிரியர்

சுதேசமித்திரனில் பாரதியார் செய்துள்ள பங்களிப்பை முதன்மையானதாகக் குறிப்பிடுகின்றார். அத்துடன் 1904 இல் ஆரம்பித்த பாரதியாரின் இதழியல் பணி 1921 இல் முற்றுப் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார்.

ஆரம்பத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்திய இந்திய அரசியலில் இந்து – முஸ்லிம் நிலைமை பற்றியும், பின்னர் இஸ்லாம் பற்றியும், இறைவன் (அல்லாஹ்) பற்றியும், இறைத் தூதர் (நபிகள் நாயகம்) குறித்தும் அவர்கள் தம் அடியார்கள் (மக்கள்) சம்பந்தமாகவும் வழங்கியுள்ள விடயங்களுக்காக ஒரு பட்டியலைக் குறிப்பிட்டு தனது ஆய்வை முன்வைக்கிறார் நூலாசிரியர்.

இதில் ‘நமது முகமதிய சகோதரர்கள், வேலூர் முகமதிய கான்ஃபரன்ஸ், ஹிந்து – முகமதிய ஒற்றுமை, இந்து – முகமதியர், இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை, அல்லா.. அல்லா..” போன்ற தலைப்பில் அமைந்த பாரதியாரின் கட்டுரை, கதை, கவிதை, பாடல், சொற்பொழிவு ஆகியவற்றின் சாராம்சம் போன்றவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

சுதேசமித்திரனில் (1906 ஆகஸ்ட் 11) இடம் பிடித்த, “நீரோ சக்கரவர்த்தி கல்லறை மீது ஓர் புஷ்பம்” என்ற தலைப்பில் அமைந்த பின்வரும் வரிகள் இங்கு கவனிக்கத்தக்கது. “இந்தியா” ஹிந்துவுக்கு மட்டிலும் சொந்தமில்லை. மகமதியனுக்கும் சொந்தமே. அநாகரிக இடைக் காலங்களில் நமது மூதாதையர்கள் சண்டையிட்டுக் கொண்டதாக அந்நிய தேசத்துப் பொய் சரித்திரக்காரர் கூறும் கதைகளை நாம் கருத வேண்டியதில்லை. பொது மாதாவாகிய பாரத தேவியின் பொது நன்மையை கவனிக்க வேண்டுமேயல்லாமல் ஜாதி, மத, குல, பேதங்களைப் பாராட்டி தேசத்தை மறக்கும் மனிதனை பாரத தேவி சர்வ சண்டாளராகவே கருதுவாள்.

முண்டாசுக் கவிஞரின் “இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை” என்ற தலைப்பில் அமைந்த சொற்பொழிவின் சாராம்சம் இந்த நூலின் 20 ஆம் பக்கம் 30 ஆம் பக்கம் வரை இடம் பிடித்துள்ளது. அந்த சொற்பொழிவில் ஒப்புவிக்கப்பட்ட கருத்துக்களை அவதானிக்கும் போது முண்டாசுக் கவிஞருக்கு முகமது நபி (ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது மிகுந்த பற்றிருந்ததை அறிய முடிகிறது. இதன் முழுமையான சொற்பொழிவு இன்னும் அற்புதமாக இருந்திருக்கும் என்று குறிப்பிடுக்கின்றார் நம் நூலாசிரியர்.

முண்டாசுக் கவிஞர் பாரதியார் தமது துணைவியாரின் ஊராகிய கடையத்தில் தங்கிய காலத்தில் நெல்லை மாவட்டத்து பொட்டல் புதூரிலே முஸ்லிம்களின் ஏக இறைவன் அல்லாஹ்வைப் பற்றிய அருமையான பாடல் ஒன்றைப் பாடிய பின்னர் நிகழ்த்திய சொற்பொழிவின் சாராம்சம் அன்றைய சுதேசமித்திரனில் இடம்பெற்றிருந்தது.

பிற்காலத்தில் பலராலும் தொகுக்கப்பட்ட பாரதியாரின் கவிதை நூல்களில் மூன்று சரணங்களைக் கொண்ட இந்தப் பாடல் முழுமையாக இடம்பெறவில்லை. 1920.06.24 இல் வெளிவந்த சுதேசமித்திரன் இதழில் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் “கதாரத்னாகரம்” 1920 ஜுலை இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

“இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன” (அல்குர்ஆன் – 21 : 33)

மேலுள்ள அல்குர்ஆன் வசனக் கருத்தையே பாரதியாரின் அல்லா என்ற பாடலில் உள்ள முதலாவது சரணம் வெளிப்படுத்துவதாக அமைகின்றது. இந்தப் பாடல் மூலம் பாரதியார் பல்லாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழக முஸ்லிம் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார்.

நூலின் 39 முதல் 51 ஆம் வரையான பக்கங்களை பாரதியாரின் முஸ்லிம் கதாபாத்திரங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட “ரயில்வே ஸ்தானம்” என்ற சிறுகதை அலங்கரித்துள்ளது. இந்தச் சிறுகதையானது 1920.05.22 ஆம் திகதியில் பிரசுரமான சுதேசமித்திரன் இதழில் பிரசுரம் கண்டுள்ளது.

இந்தக் கதையில் கதாநாயகன் ஏக காலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகளைத் திருமணம் செய்வதனால் வரும் பிரச்சினைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய கொள்கைக்கு முற்றிலும் முரணான ஒரு விடயமாகும். அதாவது சட்டப்படியாக மணம் புரிந்த மனைவி உயிருடன் இருக்கையில் அவளது சகோதரிகளை ஏக காலத்தில் திருமணம் செய்வது இஸ்லாத்தில் ஹராமான (கூடாத) விடயமாகும். இஸ்லாமிய நண்பர் ஒருவர் மூலம் பின்னர் அதுபற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்ட பாரதியார், தான் எழுதிய கதையில் கருத்துப் பிழையொன்று இருப்பதாக சுதேசமித்திரனில் குறிப்பொன்றை எழுதி, ஒரே குடும்பத்துப் பெண்கள் என்ற விபரத்தை மாற்றி தன் இனத்தைச் சேர்ந்த மூன்று பெண்களைத் திருமணம் செய்ததாகத் திருத்தி வாசிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொண்டார்.

அதேபோல் பாரத நாட்டில் ஹிந்துக்களும் மகமதியர்களும் பகைமைகளற்று சினேகபூர்வமாக சகோதர மனப்பான்மையுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதையும் பாரதியார் தனது எழுத்துக்களின் மூலம் மிகவும் உறுதியாக முன்வைத்தார். அத்துடன் முகமதியர்களுக்கு இது அந்நிய தேசமன்று. அவர்கள் இங்கே இன்று நேற்று வந்து குடியிருக்கும் ஜனங்கள் இல்லை. இந்நாடு இந்துக்களுக்கு எவ்வளவு சொந்தமோ, அவ்வளவுக்கு மகமதியர்களுக்கும் சொந்தம் என்று குறிப்பிட்டுள்ளார். “இந்தியா”இதழில் ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமை பற்றி மேலும் வலியுறுத்த விரும்பிய பாரதியார், தமிழ் ஆண்டு – மாதம் – நாள் ஆகியவற்றுடன் முஸ்லிம் ஆண்டு – மாதம் – நாள் முதலியவற்றையும் முதன் முதலாக “இந்தியா” இதழில் பொறித்து இதழியல் துறையில் அதிசயம் புரிந்தார். எனவே இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமை எனும் கயிற்றைப் பிடித்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் பெரும் விருப்புடையவராகவே முண்டாசுக் கவிஞர் திகழ்ந்துள்ளார்.

இன்றைய பரந்த பாரதத்திலும் இலங்கையிலும் வாழுகின்ற இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரு தாய் மக்களாக இணைந்து வாழ கரம் கோர்த்து விடுவார்களேயானால், அதுவே நம் நூலாசிரியரின் பேனாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று குறிப்பிட்டு இந்த நூலை நிறைவு செய்கின்றார் மானா மக்கீன்.

இதுவரை நான் வாசித்த இலக்கிய நூல்கள் பலவற்றில் மானா மக்கீனின் “ஒரு முண்டாசுக் கவிஞரின் முஸ்லிம் நேசம்” என்ற இந்த நூல் என்னை பிரமிக்கச் செய்த ஒரு நூல் என்றுதான் குறிப்பிட வேண்டும். இவ்வகையான நூல்கள் இக்காலத்தில் இன ஒற்றுமையை வலுப்படுத்தத் தேவையான ஒரு நூலாகவே அமைந்துள்ளது. மறுபதிப்புச் செய்ய வேண்டிய தேவையையும் இந்த நூலுக்கு இருக்கிறது. நூலாசிரியர் அதனையும் கருத்திற்கொள்வார் என்று நினைக்கின்றேன். நூலாசிரியர் நீடூழி வாழ்ந்து, இன்னும் பல காத்திரமான இலக்கிய நூல்களைத் தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்!!!

வெலிகம ரிம்ஸா முஹம்மத்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT