Saturday, July 13, 2024
Home » இந்தியாவின் ஸ்திரமான ஆட்சி இலங்கைக்கு அனுகூலம் தரும்

இந்தியாவின் ஸ்திரமான ஆட்சி இலங்கைக்கு அனுகூலம் தரும்

by gayan
June 15, 2024 6:00 am 0 comment

இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கமைய, புதிய அரசாங்கத்தில் பிரதமராக நரேந்திரமோடி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு பதவிப்பிரமாணம் செய்துள்ளார். மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையைப் பெற்றிருக்காத போதிலும், தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சியமைத்திருக்கின்றது. அதன்படி பா.ஜ.க கூட்டணியின் தலைவரான நரேந்திர மோடி பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

நரேந்திர மோடி தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக பிரதமராகியுள்ளார். இதுவரை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மாத்திரமே அத்தகைய சாதனையை நிலைநாட்டியிருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.

ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர் அத்தகைய சாதனையைப் படைத்த அரசியல் தலைவராக இந்திய வரலாற்றில் பதியப்படுகின்றார் நரேந்திர மோடி. அவரது ஆளுமைக்கும் அரசியல் சாணக்கியத்துக்கும் கிடைத்த பலனாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.

பா.ஜ.க ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் தனியாக தேர்தலில் இறங்கியிருக்குமானால் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகியிருக்க முடியாது. எதிரணியான ‘இந்தியா’ கூட்டணியே ஏனைய கட்சிகளை இணைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடித்திருக்கும்.

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோரின் கட்சிகளுடனும் ஏனைய சிறுகட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொண்டதனாலேயே பா.ஜ.க கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.இம்முறை தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போகவே, தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.

இந்தத் தேர்தலில் 543 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க, 240 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில், எதிரணியான ‘இந்தியா’ கூட்டணியைப் பார்க்கிலும் கூடுதல் பெரும்பான்மை ஆசனங்களை தம்வசம் வைத்திருந்த பா.ஜ.க கூட்டணி ஆட்சியமைத்திருக்கின்றது.

பா.ஜ.க ஆட்சி அரியணையில் அமர்வதற்கு முக்கிய பங்காற்றிய கட்சிகளாக டி.டி.பி, ஜே.டி.யூ ஆகிய இரண்டையுமே பிரதானமாகக் குறிப்பிட முடியும். அதேசமயம் இதர சிறிய கட்சிகளும் பங்களிப்பு வழங்கியுள்ளன. இதற்கமைய பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறுகின்ற தோழமைக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்திய தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் நிலைமை மிகவும் இக்கட்டானது ஆகும். தமிழகத்தின் அத்தனை ஆசனங்களையும் வாரிச்சுருட்டி எடுத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். காங்கிரஸின் தோழமைக் கட்சியே தி.மு.க ஆகும். மக்களவைத் தேர்தலில் 40 ஆசனங்களை அள்ளியெடுத்துக் கொண்ட போதிலும், தி.மு.கவினால் எதனையும் சாதிக்க முடியாத நிலைமையே உள்ளது.

மத்தியில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியமைத்திருக்கின்றது. அதேவேளை பா.ஜ.கவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சியாக தி.மு.க உள்ளது. தனக்கு எதிராக கட்சி மத்தியில் ஆட்சியமைத்திருக்ைகயில், அரசுக்கு அழுத்தம் பிரயோகித்து அனுகூலங்களைப் பெற்றெடுப்பதென்பது தி.மு.கவினால் இயலாத காரியம் ஆகும். ஆகவே 40 ஆசனங்களைக் கொண்டிருந்தும், கையாலாகாத கட்சியாகவே காலத்தைக் கடத்தப் போகின்றது தி.மு.க என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

நிலைமை இவ்வாறிருக்ைகயில், மத்தியில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி இறுதிவரை இடையூறின்றித் தொடருமா அல்லது இடைநடுவில் கலைந்து விடுமா என்ற வாதப்பிரதிவாதங்கள் தற்போது முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சந்தேகங்களுக்குக் காரணம் இல்லாமலில்லை.

கோட்பாட்டு ரீதியில் நோக்கும் போது பா.ஜ.கவுக்கும் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கும் இடையில் நெருக்கம் கிடையாது. முரண்பட்ட சித்தாத்தங்கள் கொண்ட கட்சிகளாகவே பா.ஜ.கவும் மற்றைய கூட்டணிக் கட்சிகளும் உள்ளன.

எனவே ஆட்சியின் இடைநடுவில் அவ்விரு கட்சிகளும் பா.ஜ.கவிலிருந்து பிரிந்து சென்று விடுமோ என்ற ஐயம் தவிர்க்க முடியாததாகும். அதுவும் கட்சி மாறுவதில் நிதிஷ்குமார் மிகவும் கைதேர்ந்தவரென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் இதுவரை 8 இற்கும் மேற்பட்ட தடவை கட்சி மாறியுள்ளாரென்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே நரேந்திர மோடியின் அரசாங்கத்திலிருந்து நிதிஷ்குமார் பிரிந்து செல்லக் கூடுமென்ற சந்தேகத்தை மறுப்பதற்கில்லை என்கிறார்கள் இந்திய அரசியல் ஆய்வாளர்கள்.

ஆனால் மறுபுறத்தில் வேறுவிதமாக அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன. நரேந்திர மோடி மிகவும் ஆளுமையும், அரசியல் சாணக்கியமும், இராஜதந்திரமும் கொண்ட தலைவராவார். கூட்டணிக் கட்சிகளை தம்முடன் எவ்வாறு தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்ற விவேகம் அவருக்கு உள்ளது. எனவே இன்றும் ஐந்து வருடங்களுக்கு பா.ஜ.க தலைமையிலான கூட்டணியின் ஆட்சி தொடரும் என்கிறார்கள் அவர்கள்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இலங்கையும் இந்தியாவும் வரலாற்று ரீதியாக நெருக்கமான நட்புறவு கொண்ட நாடுகளாகும். பொருளாதார ரீதியில் இருநாடுகளும் பின்னிப்பிணைந்துள்ளன. இந்தியாவில் அரசியல் நிலைமை ஸ்திரமாக இருந்தாலேயே இலங்கைக்கும் அனுகூலங்கள் இருக்குமென்பதை மறந்துவிடலாகாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT