மத்திய மாகாண சபையின் உப தவிசாளராக இரண்டு தடவைகளும், அவைத் தலைவராக பதவி வகித்தவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினருமான துரை மதியுகராஜா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
25 வருடங்களுக்கும் மேலாக கண்டி மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ள அவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் நேற்றையதினம் (14) அக்கட்சியில் இணைந்துள்ளதாக, ஐ.ம.ச. ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
30 வருடங்களுக்கும் மேலான பலதரப்பட்ட அரசியல் மற்றும் தொழிற்சங்க அனுபவத்துடன் கூடிய முன்னணி தொழிற்சங்கத் தலைவரும் அரசியல்வாதியுமான இவர், அரசியல் மற்றும் தொழிற்சங்கங்கள் குறித்த பரந்த அறிவைக் கொண்ட ஒருவராவார். ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் பன்மொழிப் பேச்சாளரான இவர், ஓர் எழுத்தாளரும் ஆவார்.
1991 இல் கண்டி மாநகர சபைக்கு அதிகூடிய வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட இவர், 1994 ஆம் ஆண்டும் 1997 ஆம் ஆண்டு மத்திய மாகாண சபை உறுப்பினராகவும், 2001 இல் உப தவிசாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், 2002 ஆம் ஆண்டு மத்திய மாகாண சபையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 40,000 வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற ஆசனத்தை இழந்தாலும், மீண்டும் 2004 இல் மத்திய மாகாண சபையின் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன், 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை மத்திய மாகாண சபைக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டு அதன் தவிசாளராகவும் பதவி வகித்தார். மேலும், 3 பாராளுமன்றத் தேர்தல்களில் தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதானி, தொழிலாளர் கல்விப் பொறுப்பாளர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் யாப்புத் திருத்தக் குழுவின் உறுப்பினர், மாகாண எல்லை நிர்ணயக் குழுவின் உறுப்பினர் எனப் பல பதவிகளை வகித்து, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாகவும் விளங்குகிறார்.