Saturday, July 20, 2024
Home » இலங்கையில் தேர்தல் நடத்துவதில் பிரச்சினை இல்லை – IMF
ஜனநாயக கட்டமைப்பில்

இலங்கையில் தேர்தல் நடத்துவதில் பிரச்சினை இல்லை – IMF

by gayan
June 15, 2024 6:45 am 0 comment

ஜனநாயக கட்டமைப்பில் இலங்கையில் தேர்தலை நடத்துவதில் பிரச்சினை இல்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவிக்கையில், எந்தவொரு நாட்டிலும் தேர்தலை நடத்துவது ஒரு ஜனநாயக செயல்முறை. சர்வதேச நாணய நிதியம் அதை முழுமையாக மதித்து அந்த செயல்முறையை கடைப்பிடிக்கிறது என்றும் தெரிவித்தார்.

தேர்தல் என்று வரும்போது இலங்கை மக்கள் ஜனநாயக ரீதியில் செயற்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கான

விஸ்தரிக்கப்பட்ட கடன் வசதிக்கான இரண்டாவது மதிப்பீடு மற்றும் ‘ பிரிவுக்கூறு IV ஆலோசனை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் வொஷிங்டனில் நேற்று முன்தினம் (14) நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதிநிதிகள் குழுவின் சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையில் இந்த ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.

இலங்கையில் தேர்தலை நடத்துவதில் சர்வதேச நாணய நிதியத்துக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென குறிப்பிட்ட அவர், சர்வதேச நாணய நிதியம் அனைத்து நாடுகளினதும் ஜனநாயகத்தை மதிப்பதாகவும் , இதுவரை தேர்தல் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இலங்கையில் தேர்தல் அறிவிப்பு இடம்பெற்ற பின்னர் அதற்கு ஏற்ப விரிவாக்கப்பட்ட கடன் திட்டத்தின் அட்டவணையை மாற்றுவது குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட காலத்துக்கும் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்துவதை வரவேற்பதாக குறிப்பிட்ட அவர், தேர்தலை நடத்தும் செயல்முறையை முழுமையாக மதித்து, அதற்குரிய செயல்முறையை கடைபிடிப்பதாகவும் கூறினார்.

இதேவேளை இலங்கையில் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான விடயத்தில் போதுமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையின் பொருளாதாரம் இன்னமும் அனர்த்த நிலையில் உள்ளது. எனவே சீர்திருத்தங்களின் வேகம் தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்தார்.

ஸ்திரத்தன்மையை அடைவதிலிருந்து அரசாங்கத்தின் முழுப் பங்கேற்புடன் முழுமையான பொருளாதார மீட்சியை அடைவது வரை மற்றும் பொதுமக்களுடன் சீர்திருத்த செயல்முறையை தொடர்வதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிரமத்துடன் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லுமாறும், உரிய சீர்திருத்தங்களுக்கு கடுமையாக உழைக்குமாறும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும், கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இலங்கை வினைத்திறனான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழுவின் தலைவர், இங்கிருந்து முன்னோக்கி நகர்ந்து நிலையான தன்மையை அடைவதே முக்கியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இரண்டு ஒப்பந்தங்களும் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அடிப்படை நிதி மற்றும் சட்ட விவகாரங்கள் தொடர்பாக உத்தியோகபூர்வ கடனாளிகளின் இரு குழுக்களுடனும் அடிப்படை நிதி மற்றும் சட்ட விடயங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு திட்டத்தின் இலக்குகளை அடைவதே முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதுடன், அந்த இலக்குகளை அடைவது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம் எனவும், அந்த இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது தொடர்பான யோசனைகளை கேட்க சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT