Saturday, July 20, 2024
Home » உலகில் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டோர் எண்ணிக்கை 120 மில்லியனாக சாதனை உச்சம்

உலகில் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டோர் எண்ணிக்கை 120 மில்லியனாக சாதனை உச்சம்

by Gayan Abeykoon
June 14, 2024 1:18 pm 0 comment

உலகில் சாதனை எண்ணிக்கையாக 120 மில்லியன் மக்கள் போரினால் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை 12 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வந்திருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

உலகில் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை தற்போது ஜப்பான் மக்கள் தொகைக்கு சமமாக அதிகரித்திருப்பதாக ஐ.நா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சூடான் மற்றும் காசா போர்கள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாகி இருப்பதாக அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் தலைவர் பிலிப்போ கிராண்டி குறிப்பிட்டார்.

‘இவர்கள் அகதிகள், தஞ்சம் தேடுவோர், உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்கள், சச்சரவாலும் துன்புறுத்தலாலும், இன்னும் வேறு அதிகரிக்கும் சிக்கலுடைய வன்முறை வகைகளால் வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டவர்கள்’ என்று அவர் குறிப்பிட்டார்.

மக்களை இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளிய சூழல்களில் மிக மோசமானது சூடான் போர் என்று கிராண்டி சுட்டிக்காட்டினார்.

இதில் ஒன்பது மில்லியனுக்கும் மேற்பட்டோர் உள்நாட்டளவில் இடம்பெயர்ந்தனர் என்றும் மேலும் இரண்டு மில்லியன் பேர் அண்டை நாடுகளுக்குத் தப்பியோடினர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மக்கள் வந்து சேர்கிறார்கள்’ என்று சாட் நாட்டில் தஞ்சம் புகுவோரை அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

காசாவில் நிலவிவரும் நெருக்கடியால் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அவர்களில் பலர் பலமுறை இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றும் கூறப்பட்டது.

எனினும் உலகில் அதிக இடம்பெயர்ந்தோர் பிரச்சினையை எதிர்கொள்ளும் நாடாக சிரியா உள்ளது. அங்கு 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்த நிலையில் தொடர்ந்தும் சுமார் 14 மில்லியன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் வாழ்கின்றனர்.

‘சர்வதேச புவிசார் அரசியலில் மாற்றம் இல்லாவிட்டால், துரதிர்ஷ்டவசமாக, இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை காண முடியுமாக இருக்கும்’ என்று கிராண்டி குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT