Saturday, July 20, 2024
Home » போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் காசாவின் ரபாவில் மோதல் உக்கிரம்

போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் காசாவின் ரபாவில் மோதல் உக்கிரம்

வான், தரை மற்றும் கடல் வழியாக கடும் தாக்குதல்

by Gayan Abeykoon
June 14, 2024 10:04 am 0 comment

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான சாத்தியம் இன்னும் இருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்திருக்கும் நிலையில் காசாவின் ரபா நகரில் இஸ்ரேலிய ஹெலிகொப்டர்கள் நேற்று (13) தாக்குதல் நடத்தியதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டிருப்பதோடு அங்கு ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேலிய படைகள் இடையே வீதிகளில் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

எகிப்து எல்லையை ஒட்டிய ரபாவில் கடந்த மே ஆரம்பம் தொடக்கம் இஸ்ரேலியத் தரைப்படை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இடம்பெயர்ந்த மக்கள் நிரம்பி வழியும் இந்த நகர் மீதான படை நடவடிக்கைக்கு சர்வதேச அளவில் எச்சரிக்கை விடுத்த போதும் அங்கு உக்கிர தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

ரபாவின் மேற்குப் பக்கமாக இஸ்ரேல் வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக தாக்கி வருகிறது.

போர் விமானங்கள், அபச்சேக்கள் (ஹெலி) மற்றும் ஆளில்லா விமானங்கள், தவிர இஸ்ரேலிய பீராங்களிகள் மற்றும் இராணுவ போர்க் கப்பல்கள் அனைத்தும் ரபாவின் மேற்கு பக்கமாக கடுமையாக தாக்கதல்களை நடத்தி வருகின்றன’ என்று அங்குள்ள குடியிருப்பாளர் ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதி வீதிகளில் தமது போராளிகள் இஸ்ரேலிய படையுடன் சண்டையிட்டு வருவதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவான இஸதீன் அல் கஸ்ஸாம் படை தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு தொடக்கம் மேற்கு ரபாவை நோக்கி இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறி வருவதால் அங்குள்ள மக்கள் வெளியேறி வருகின்றனர்.

அங்கு குடியிருப்புப் பகுதிகள் வெடி வைத்து தகர்க்கப்படுவதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாமில் உள்ள அல் லுஹ் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அங்கிருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் பெரும்பாலும் சிறுவர்கள் உட்பட பலர் காயமடைந்திருப்பதாகவும் அங்குள்ள வபா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் கொல்லப்பட்டு மேலும் 105 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 250 நாட்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 37,232 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 85,037 பேர் காயமடைந்துள்ளனர்.

பிளிங்கன் நம்பிக்கை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டு, பாதுகாப்புச் சபையால் உறுதி செய்யப்பட்ட மூன்று கட்ட போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு கடந்த செவ்வாயன்று பதில் அளித்திருந்தது.

இதில் ஹமாஸ் செய்திருக்கும் திருத்தங்கள் ‘சிலது சாத்தியமானது என்றும் மேலும் சிலது சாத்தியமில்லை’ என்றும் பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்த முயற்சியாக மீண்டும் ஒருமுறை பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிளிங்கன், தனது கடைசி நிறுத்தமாக நேற்று முன்தினம் கட்டார் பயணித்தார்.

‘உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு பிராந்திய தலைவர்களுடன் அமெரிக்கா தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றும்’ என்று அங்கு அவர் குறிப்பிட்டிருந்தார்.

காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் அங்கிருந்து இஸ்ரேலிய துருப்புகள் முழுமையாக வாபஸ் பெறுவதையே ஹமாஸ் கோருகிறது என்று அதன் மூத்த அதிகாரியான ஒசாமா ஹம்தான் குறிப்பிட்டிருந்தார். எனினும் இதனை இஸ்ரேல் நிராகரித்து வருகிறது.

முன்மொழியப்பட்டிருக்கும் போர் நிறுத்தத் திட்டத்தில் ஆறு வார போர் நிறுத்தம், பணயக்கைதிகள் – கைதிகள் பரிமாற்றம் மற்றும் காசாவில் மீள்கட்டுப்பமானம் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றிருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டபோதும் இஸ்ரேல் தரப்பில் இருந்து இன்னும் உறுதியான பதில் கிடைக்கவில்லை. இந்தத் திட்டத்திற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசின் தீவிர வலதுசாரிகள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், இஸ்ரேல் மீது நேரடி அழுத்தம் கொடுக்கும்படி பிளிங்கனை கேட்டுள்ளது.

‘புதிய (போர் நிறுத்த) முன்மொழிவு தொடர்பில் இஸ்ரேலின் இணக்கம் பற்றி அவர் தொடர்ந்து கூறுகின்றபோதும், இது பற்றி இஸ்ரேலின் எந்த ஒரு அதிகாரியும் பேசியதாக நாம் கேட்கவில்லை’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் போரை முடிப்பது தொடர்பில் இரு தரப்பினதும் நிலைப்பாட்டிலேயே முட்டுக்கட்டை நீடிப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

போர் நிறுத்தத் திட்டம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதை இஸ்ரேல் எழுத்து மூலம் உறுதி செய்ய வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்துகிறது.

ஆனால் ஹமாஸின் ஆட்சி மற்றும் இராணுவ பலம் முடிவுக்கு வரும் வரை போர் முடியாது என்று நெதன்யாகு குறிப்பிட்டு வருகிறார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT