Monday, July 22, 2024
Home » நியூசிலாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அடுத்த சுற்றில்: இந்தியாவும் முன்னேறியது

நியூசிலாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அடுத்த சுற்றில்: இந்தியாவும் முன்னேறியது

by Gayan Abeykoon
June 14, 2024 7:12 am 0 comment

நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கிண்ண சி குழுவுக்கான போட்டியில் 13 ஓட்டங்களால் வெற்றியீட்டிய போட்டியை இணைந்து நடத்தும் நாடான மேற்கிந்திய தீவுகள் அணி சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் தோல்வியை சந்தித்த நியூசிலாந்து அணி ஆரம்ப சுற்றுடன் வெளியேறும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

டிரினிடாட்டில் இலங்கை நேரப்படி நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் மத்திய வரிசையில் வந்த ஷெர்பான் ரதர்போட் அதிரடியாக 39 பந்துகளில் 2 பௌண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களை விளாசினார்.

இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களை குவித்தது.

இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த நியூசிலாந்து ஓட்ட வேகத்தை தக்கவைக்க போராடியது. வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிலையில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களையே பெற்றது.

கிளன் பிலிப் 40 ஓட்டங்களை பெற்றதோடு மிட்சல் சான்ட்னர் கடைசி நேரத்தில் 12 பந்துகளில் ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களை பெற்றபோதும் அது இலக்கை எட்டுவதற்கு உதவவில்லை.

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி சி குழுவில் இருந்து முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மறுபுறம் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்திருக்கும் நியூசிலாந்து அணி தொடரில் ஆரம்ப சுற்றுடனேயே வெளியேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது. நியூசிலாந்து அடுத்துள்ள தனது கடைசி இரு குழுநிலைப் போட்டிகளான உகண்டா மற்றும் பப்புவா நியூகினி அணிகளுக்கு இடையிலான ஆட்டங்களை கட்டாயம் வெல்ல வேண்டும். எனினும் அந்த அணி சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதற்கு மற்ற போட்டிகளின் முடிவுகள் தமக்கு சாதகமாக அமைய வேண்டும்.

எனினும் இந்தக் குழுவில் ஆப்கான் அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் அந்த அணி இன்று பப்புவா நியூகினியை எதிர்கொள்ளவுள்ளது. அந்தப் போட்டியில் வெற்றியீட்டினால் நியூசிலாந்து அணி முதல் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று முன்தினம் (12) ஏ குழுவுக்காக நடந்த போட்டியில் இந்திய அணி அமெரிக்காவை கடுமையாக போராடி தோற்கடித்ததன் மூலம் அந்தக் குழுவில் முதல் அணியாக சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.

நியூயோர்க்கில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட அமெரிக்க அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ஓட்டங்களையே பெற்றது. பதிலெடுத்தாடிய இந்திய அணி 15 ஓவர்களுக்கே முதல் இரு விக்கெட்டுகளையும் பறிகொடுத்ததோடு வெற்றி இலக்கை எட்டுவதற்கு 19 ஆவது ஓவர் வரை ஆட வேண்டி இருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT