Saturday, July 20, 2024
Home » ஹஜ்: ஒரு பார்வை

ஹஜ்: ஒரு பார்வை

by Gayan Abeykoon
June 14, 2024 10:30 am 0 comment

ல்லாஹ்தஆலா தன் இறைத்தூதர்களில் ஒருவரான இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு பலவிதமான சோதனைகளை வழங்கினான். குறிப்பாக இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட சோதனைகள், எந்த மனிதனும் நிறைவேற்ற தயங்கும் அளவிற்கு மிகவும் கடுமையானது.

இச்சோதனைகள் அனைத்தும் உள்ளுணர்வு மற்றும் கனவுகள் மூலம் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், இறைக்கட்டளையை எந்த சந்தேகமும் இன்றி அப்படியே அவர் ஏற்றுக்கொண்டார். ஏன், எதற்கு என்று எந்தக்கேள்வியும் கேட்காத இறைத்தூதராக விளங்கினார் இப்றாஹீம் (அலை) அவர்கள்.

அதன் பயனாக அல்லாஹ்தஆலா, இப்றாஹீம் (அலை) அவர்களை, ‘தன் உற்ற தோழன்’ என்று அழைத்து அவருக்கு பெருமை சேர்த்தான். அத்தனை சிறப்பு மிக்க இப்றாஹீம் (அலை) அவர்கள், இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்:

‘என் இறைவா! ஒரு மகனை எனக்கு நீ வழங்குவாயாக… அவர் உத்தமரில் ஒருவராக இருக்கவேண்டும்..’ (அல் குர்ஆன் 37:100)

இப்பிரார்த்தனையை அங்கீகரித்த அல்லாஹ் அவருக்கு ஒரு மகனை (இஸ்மாயில்) வாரிசாக வழங்கினான். வயது முதிர்ந்த நிலையில் பெரும் அருட்கொடையாக மகனைப் பெற்ற இப்றாஹீம் (அலை) மகிழ்ச்சியடைந்தார்கள்.

ஆனால் ‘பால்குடி மாறா அக்குழந்தையையும் அவரது மனைவி ஹாஜரா அம்மையாரையும் பாலைவனத்தில் விட்டுவிட்டு செல்லுங்கள்  என்று இறைக்கட்டளை வந்தது. அதற்கு இப்றாஹீம் (அலை) அவர்கள் உடனே அடிபணிந்தார்கள். இதன் ஊடாக ஸம்ஸம் ஊற்றும், சபா-மர்வா குன்றுகளிடையே ஓடும் ‘தொங்கோட்டம்’ என்ற சிறப்பு அமலும் கிடைக்கப்பெற்றது. பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் கூட ஹாஜிகள் அந்த கடமையை நிறைவேற்றி வருகிறார்கள். உலகம் இருக்கும் வரை இக்கடமையை இறை விசுவாசிகள் நிறைவேற்றுவார்கள்.

அதேநேரம் மக்கா பள்ளத்தாக்கில் மனைவியையும், மகனையும் விட்டுச் சென்ற இப்றாஹீம் (அலை) அவர்கள், பல ஆண்டுகள் கடந்த பின்னர் தன் குடும்பத்தினரை மீண்டும் காணச் சென்றார்கள். அங்கு அருமை பாலகன் இஸ்மாயிலோடு கொஞ்சிக் குலவி சிறிது காலம் வாழ்ந்தார்கள். மகனும் நடந்து திரிந்து விளையாடும் பருவத்தை அடையும் போது மற்றொரு அல்லாஹ்வின் கட்டளை இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது.

இதுபற்றி அவர், தன் மகனிடமே இவ்வாறு குறிப்பிட்டார். ‘என் அருமை மைந்தனே… நான் உன்னை என் கை கொண்டு அறுத்துப் பலியிடுவதாக மெய்யாகவே நான் கனவு கண்டேன். இதைப்பற்றி நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்…?’

(அல் குர்ஆன் 37:102).

அப்போது மகன், ‘தந்தையே! இது இறைவனின் கட்டளை என்று உறுதியாகத் தெரியுமா? என்று வினவுகிறார். அப்போது அவர், ‘ஆம் நான் மெய்யாகவே கனவு கண்டேன்’, என்றார் தந்தை. ‘அப்படியானால் நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். அல்லாஹ்வே எனக்கு போதுமானவன். எல்லா செயலாக்கங்களும் அவன் கட்டளைப்படியே நடக்கின்ற போது, இதுவும் அல்லாஹ்வின் எண்ணப்படியே நன்றாகவே நடக்கும்.

இதை அல் குர்ஆன் வசனம் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது, ‘என்னருமைத் தந்தையே! உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படியே நீங்கள் செய்யுங்கள். அல்லாஹ் அருள் புரிந்தால் அதை சகித்துக்கொண்டு உறுதியாய், இருப்பவனாகவே நீங்கள் என்னை காண்பீர்கள்’ என்று கூறினார். (அல் குர்ஆன் 37:102)

அதற்கேற்ப அவர்கள் இருவரும் நடந்து மினா என்ற இடத்தை அடைந்த போது, சைத்தான் இப்றாஹீம் (அலை) அவர்களிடம் வந்து, ‘இப்றாஹீமே…! ஏதோ நீங்கள் கனவு கண்டதாக சொல்கிறீர்கள். அல்லாஹ் எங்காவது தன் அடியார்களை உயிரோடு அறுத்து பலியிடச் சொல்வானா? உங்கள் சிதறிய சிந்தனையால் ஏற்பட்ட மனக் குழப்பமே இதற்கு காரணம். அருமைப் பிள்ளையை அறுத்து பலியிடாதீர்கள்’ என்று அவர்கள் மனதில் ஊசலாட்டத்தை விதைத்தான்.

அப்போது இப்றாஹீம் (அலை) அவர்கள், அல்லாஹ் எனக்கு அளித்த கட்டளையில் நான் தெளிவாக இருக்கிறேன்.

எனவே என்னை நீ வழிகெடுக்க முடியாது. என்னை விட்டு ஓடிவிடு என்று கூறியவர்களாக அவன் மீது கல்லால் எறிந்தார்கள்.

அந்த செயலை ஏற்றுக்கொண்ட அல்லாஹ், ஹஜ் கடமைகளில் ஒன்றாக சைத்தான் மீது மூன்று இடங்களில் கல் எறிவதையும் அங்கீகரித்தான்.

குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், இப்றாஹீம் (அலை) அவர்கள், தன் மகனை மண்ணில் கிடத்தினார்கள். அப்போது இஸ்மாயில் (அலை) அவர்கள், ‘அருமை தந்தையே என்னை முகங்குப்புற படுக்க வையுங்கள். ஏனெனில், நீங்கள் அறுப்பதற்காக கத்தியை கையில் எடுக்கும் போது என் முகத்தை பார்க்க நேரிட்டால் உங்கள் மனம் இளகி அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றாமல் விட்டு விடுவீர்களோ என்று நான் அஞ்சுகிறேன்’ என்றார்.

 

எப்படியான இறையச்சம் இது. அவர்கள் சொல்லியபடியே முகங்குப்புற படுக்க வைத்து கூரிய கத்தியால் அறுக்க முயற்சி செய்த போதிலும் கத்தி அறுக்க மறுக்கிறது. கோபத்தோடு அருகில் இருந்த பாறையில் அடிக்கிறார்கள். பாறை இரண்டாக பிளவு பட்டது. மீண்டும் அறுக்க முயற்சித்தும் முடியவில்லை. காரணம் அல்லாஹ்வின் உத்தரவு இருந்தால் மட்டுமே கத்தியால் அறுக்க முடியும். கத்தி அறுப்பதற்காகவே படைக்கப்பட்டது. இருந்தாலும் அறுப்பதற்கும், அல்லாஹ்வின் கட்டளை வேண்டும் என்பது இதன் ஊடாக எடுத்தியம்பப்பட்டுள்ளது. அப்போது இறைகட்டளை இறங்கியது. ‘இப்றாஹீமே நாம் உமது இறைபக்தியை ஏற்றுக்கொண்டோம். இஸ்மாயிலுக்கு பதிலாக ஒரு ஆடு அனுப்பியுள்ளோம். அதனை அறுத்து உங்கள் கனவை பூர்த்தி செய்யுங்கள்’ என்றான் அல்லாஹ். அதற்கேற்ப அன்று முதல் இறை விசுவாசிகள் அனைவரும் துல்ஹஜ் மாதத்தில் 10 ஆம் பிறையில் ஓர் ஆட்டை குர்பானி செய்து அந்நாளை தியாக திருநாளாக கொண்டாடுகின்றனர்.

அபூ முஷீரா…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT