Saturday, July 13, 2024
Home » துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்

துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்

by Gayan Abeykoon
June 14, 2024 9:00 am 0 comment

ல்லாஹுதஆலா பன்னிரெண்டு மாதங்களை விதியாக்கி அதில் நான்கு மாதங்களை கண்ணியப்படுத்தியுள்ளான். இதனை அல் குர்ஆனின், ‘வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் மாதங்கள் பன்னிரெண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை யாகும். ‘(9:36) என்ற வசனம் தெளிவுபடுத்துகிறது.

அதுபோன்று இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறந்த நான்கு மாதங்கள் எவை என்பதையும் குர்ஆன் குறிப்பிட்டுள்ளது.

அந்த புனிதமான நான்கு மாதங்கள் துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகும். அந்த மாதங்களில் போர் செய்யக் கூடாது, வீணானதும் பாவமானதுமான காரியங்களிலும் சண்டை சச்சரவுகளிலும் ஈடுபடக் கூடாது என்ற மேலான தத்துவங்களை உபதேசமாக இஸ்லாம் கூறுகிறது.

சிறப்பிக்கப்பட்ட அந்த நான்கு மாதங்களில் ஒன்று தான் இந்த துல்ஹஜ் மாதமாகும். இது தியாகத்தை பறைசாட்டும் மாதமாகும். இம்மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிகவும் சிறப்பு பொருந்திய தினங்களாக விளங்குகின்றன. இத்தினங்கள் மீது அல்லாஹ்  சத்தியம் செய்து இவை சிறப்புப் பொருந்திய தினங்கள் என்பதை அல் குர்ஆனில் எமக்கு உணர்த்தியுள்ளான்.

‘விடியற்காலையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக’                         (அல்பஜ்ர் 1-2)

இவ்வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும் ஏனைய அறிஞர்களும், இங்கு குறிப்பிடப்படும் இரவுகள் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகள் என விளக்கமளித்துள்ளார்கள். ஆகவே இத்தினங்களை பாரமாகக் கருதாமல் பாக்கியமாகக் கருதி நல்லமல்களில் இயலுமான வரை நிலைத்திருக்க முயற்சிக்க வேண்டும்.

குறிப்பாக இம்மாதத்தின் முதல் பத்து தினங்களிலும் புரியப்படும் நல்லமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களிலும் ஆற்றப்படும் நல்லமல்கள் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதாக இல்லை. ஸஹீஹுல் புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸின் அடிப்படையில் பிறை  ஒன்றிலிருந்து நோன்பு நோற்க முடியும். எனினும் துல்ஹஜ் பிறை பத்து, பெருநாள் தினமாகையால் அத்தினத்தில் நோன்பு நோற்கக் கூடாது.

துல் ஹஜ் மாதத்தின் பிறை ஒன்பதாவது தினம் அறபா தினமாகும். அத்தினத்தில் நோன்பு நோற்பது விசேட ஸுன்னாவாக உள்ளது.

அபூ கதாதா (ரழி) அவர்கள், அரபா தின நோன்பு பற்றி நபியவர்களிடம் வினவப்பட்ட போது, சென்ற வருடத்திற்கும் தற்போதைய வருடத்திற்கும் (அவற்றில் செய்யப்பட்ட சிறு பாவங்களுக்கு) குற்றப்பரிகாரமாக அது அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஆதாரம்: ஸஹீஹு முஸ்லிம்)

மேலும் இப்னு உமர், அபூ ஹுறைரா  றழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் (துல்ஹஜ் மாத முதல்) பத்து நாட்களில் சந்தை பகுதிகளுக்கு செல்லும் போது தக்பீர் கூறுவார்கள். (ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி)

துல்ஹஜ்ஜாவின் முதல் பத்து நாட்களில் மேற்கோள்ளப்படும் அமல்களை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதும் மகத்தானதும் வேறு ஏதும் இல்லை. எனவே, அந்நாட்களில் லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ் அதிமதிகம்கூறுங்கள் என நபி (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

(ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்)

அதேநேரம் பெருநாள் தினத்தில் விசேடமாக பெருநாளுக்காக குளிப்பது ஒரு முக்கியமான ஸுன்னா விளங்குகிறது. நறுமணம் பூசிக் கொள்வதும் இருக்கின்ற ஆடைகளுள் அழகான ஆடைகளை அணிந்து கொள்வதும் தக்பீர் சொல்லுவதும் பெருநாள் தினத்திலே நாம் கடைபிடிக்க வேண்டிய ஸுன்னாக்களாக உள்ளன. ஆடை அணிகலன்கள் புத்தம் புதியதாக இருக்க வேண்டும் என்பதில்லை. சிறந்த ஆடையாக இருந்தால் போதுமானது.

ஈதுல் அழ்ஹா- ஹஜ்ஜுப் பெருநாளைப் பொறுத்தவரை நேரகாலத்தோடு பெருநாள் தொழுகையை நிறைவேற்றி விட்டு வீடு திரும்பியதன் பின்னரே காலை உணவை உட்கொள்ள வேண்டும். அதுதான் ஸுன்னா. இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் எமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

பெருநாள் தொழுகை எந்த இடத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனும் விடயத்தில் ஷாஃபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்களைப் பொறுத்தவரையில் ஓர் ஊரின் மஸ்ஜித் மக்களுக்குப் போதுமானதாக இருக்குமாயின் மற்றைய இடங்களில் தொழுவதைவிட மஸ்ஜிதில் தொழுவதே மிகச் சிறப்பானதாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் முற்றவெளியை நாடிச் சென்றது ஊர்மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று சேர வேண்டுமென்ற நோக்கத்தினாலாகும். அந்நோக்கம் மஸ்ஜிதில் கைகூடிவிட்டால் அங்கு தொழுவதே சாலச் சிறந்தது என குறிப்பிடுகின்றனர்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் தனது மஸ்ஜிதில் இடவசதி போதாமை காரணமாகவே முற்றவெளிக்குச் சென்றார்கள் என்று ஸுனன் அல்-பைஹகீ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உமர் (ரழி) அவர்களின் கூற்றை இக்கருத்துக்கு வலுவாக எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பான தெளிவுகளை இமாம் நவவி (ரஹி) அவர்களின் ‘அல்-மஜ்மூஃ’ வின் பெருநாளுடைய பாடத்தில் காண முடியும்.

எனவே துல்ஹிஜ்ஜாவின் ஆரம்ப பத்து நாட்களை மிகப் பேணுதலாகப் பயன்படுத்தி நன்மைகளை அடைந்து கொள்ள முயற்சிப்போம்.  நபியவர்கள் காட்டிய பிரகாரம் பெருநாள் தினத்திற்காக தயாராகுவோம்.

அஷ்ஷைக் அப்துல் காலித் முப்தி மின்ஹாஜ்…

(பி.ஏ) நிந்தவூர்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT