Saturday, July 20, 2024
Home » இஸ்லாத்தில் அரபாவும் உழ்ஹிய்யாவும் பெற்றுள்ள முக்கியத்துவம்

இஸ்லாத்தில் அரபாவும் உழ்ஹிய்யாவும் பெற்றுள்ள முக்கியத்துவம்

by Gayan Abeykoon
June 14, 2024 11:57 am 0 comment

ுல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களும் இஸ்லாத்தின் பார்வையில் மிகச் சிறந்த தினங்களாகும். ரமழான் மாதத்தின் பிந்திய 10 தினங்களும் சிறப்பு பெறுவதற்கு லைலத்துல் கதர் இரவு காரணமாக இருப்பது போன்று துல்ஹஜ்ஜின் முதல் 10 இரவுகளும்  சிறப்பு பெறுவதற்கு அதில் ஒன்பதாம் தினத்தில் இடம்பெற்றுள்ள அரபா தினம் காரணமாக அமைந்துள்ளது. அதனால் தான் துல்ஹஜ்ஜின் முதல் பத்து தினங்களும் ரமழானின் பிந்திய பத்து இரவுகளுக்கு சமமானது என அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், மனிதர்கள் துல்ஹஜ் முதல் பத்தில் செய்யும் அமல்களை அல்லாஹ் விரும்புவது போன்று எந்தக் காலத்திலும் அவ்வளவு அதிகம் அமல்களை விரும்புவதில்லை என்ற போது இறைபாதையில் போரிடுவதை விடவும் இக்காலப்பகுதியில் இபாதத் செய்வது அல்லாஹ்வுக்கு விருப்பமானதா? என ஸஹாபாக்கள் வினவ, ‘ஆமாம் ஜிகாதை விடவும் நல்லமல்கள் அல்லாஹ்வுக்கு இக்காலப்பகுதியில் விருப்பமானவை தான். போருக்கு புறப்பட்டு போரிலேயே ஷஹீதாகிவிடும் உயிர்த்தியாகியைத் தவிர. எனவே அந்நாட்களில் அதிகம் தக்பீர், தஹ்லீல், திக்ர் ஆகியவற்றில் ஈடுபடுங்கள்’ என்று கூறியுள்ளார்கள்.  (ஆதாரம்: புஹாரி)

மற்றொரு தடவை நபியவர்கள், அரபா தினத்தன்று அல்லாஹுத்தஆலா கீழ் வானத்துக்கு இறங்கி வந்து அரபா மைதானத்தில் ஒன்று கூடியிருக்கும் மக்களைக் கண்டு பூரிப்படைந்து மலக்குகளிடம் இவர்கள் எதற்காக இங்கு ஒன்று கூடி இருக்கின்றார்கள் என்று பெருமை பாராட்டி பேசுகின்றான்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

ஆனால் ஹஜ்ஜுக்கு செல்லாத முஸ்லிம்கள் அரபா நாளான ஒன்பதாம் தினத்தன்று நோன்பு நோற்பது சுன்னத்தாகும். ‘நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பிறை ஒன்பதிலும் ஆஷூரா தினத்திலும் மற்றும் ஒவ்வொரு மாதத்தின் மூன்று தினங்களும் நோன்பு நோற்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள் என்று அபூதாவூதில் பதிவாகியுள்ளது.

அதேநேரம் நபில் தொழுகைகள் திகில், திலாவத், தஸ்பீர், இஸ்திஃபார் தக்பீர் போன்றவற்றில் இந்நாட்களில் நேரத்தை செலவிடுவது மிகச் சிறந்ததாகும்

உழ்ஹிய்யாவின் சட்டங்கள்

மேலும் ஹஜ் பெருநாளின் நிமித்தம் முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டிய இபாதத்களில் உழ்ஹிய்யாவும் முக்கியமானது. ஹஜ் பெருநாளன்றோ அல்லது அதற்கு அடுத்த மூன்று தினங்களிலோ அல்லாஹ்வுக்காக அறுத்து கொடுக்கப்படும் குர்பானி ஆடு, மாடு, ஒட்டகங்களுக்கு உழ்ஹிய்யா எனப்படும்.  நபியவர்கள் மதீனாவில் வாழ்ந்த பத்து வருடகாலத்தில் ஒரு தடவை கூட தவறாது நிறைவேற்றி வந்த முக்கியமான ஸுன்னாவே இது. இதனலேயே சில அறிஞர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது கட்டாய கடமை என்றும் கூறுகின்றனர். ஆனாலும் அது ஓர் வலியுறுத்தப்பட்ட சுன்னத் என்பதே ஏராளமான அறிஞர்களின் கருத்தாகும்.

என்றாலும் உழ்ஹிய்யா என்பது உயிரோடு இருப்பவர்களுக்காக நிறைவேற்றப்படும் ஓர் கிரியையாகும். நாம் நமக்காகவும் நமது குடும்பத்தினருக்காகவும் குர்பானி கொடுக்கும் போது மரணித்தவர்களான எமது உறவினர்களுக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என நிய்யத் வைத்துக் கொள்ளலாம். தவிர மரணித்தவர்களுக்கென பிரத்தியேக உழ்ஹிய்யா கொடுப்பதற்கு ஸுன்னாவில் எந்த ஆதாரமும் இல்லை. அது மரணித்தவருக்காக ஸதகா செய்ததாகவே ஆகும்.

அவ்வாறே உழ்ஹிய்யா ஒருவருக்கு ஆயுளில் ஒரு தடவை தான் என்று சிலர் கருதுகின்றனர். இதுவும் தவறானது. வசதியிருந்தால் ஒவ்வொரு வருடமும் இதனை நிறைவேற்றலாம்.

ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளையும் மாத்திரமே உழ்ஹிய்யாக் கொடுக்கலாம். ஒரு ஆட்டை ஒரு நபருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் கொடுக்கலாம். ஒரு மாட்டையோ, ஒட்டகத்தையோ ஒருவர் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் வழங்கலாம். விரும்பினால் ஏழு பேர் வரைக்கும் கூட்டு சேர்ந்தும் கொடுக்கலாம். அந்த ஏழு நபர்களுடன் அவர்களின் குடும்பங்களும் அடங்கும்.

நபியவர்கள் தனக்காகவும் தனது குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டை அறுத்து உழ்ஹிய்யாக் கொடுத்தார்கள். அதன் மாமிசத்தை அவர்களும் உண்டு ஏனையவர்களுக்கும் கொடுத்தார்கள்

(ஆதாரம்: திர்மிதி).

ஒட்டகம் மற்றும் மாட்டில் எங்களில் ஏழு பேர் கூட்டு சேர்ந்து கொள்ளலாம் என்றும் நபியவர்கள் கட்டளையிட்டார்கள்

(ஆதாரம்: முஸ்லிம்).

மேலும் நான்கு குறைபாடுள்ள பிராணியை உழ்ஹிய்யாக் கொடுக்க முடியாது. அதாவது தெளிவான குருடு, தெளிவான ஊனம், தெளிவான நோயற்றது, கடுமையாக மெலிந்தவை ஆகியவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்: ஸஹீஹுல் ஜாமிஉ).

அதேநேரம் உழ்ஹிய்யாவுக்காக அறுக்கப்படும் பிராணியின் எப்பகுதியையும் விற்பதோ கூலியாக கொடுப்பதோ கூடாது. அதனால் தான்  நபியவர்கள், குருபானி பிராணியின் தோலை யாராவது விற்றால் அவருக்கு குர்பானியே கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஆதாரம்: அல் ஜாமிஉ).

உழ்ஹிய்யாவை ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியது முதல் அன்றைய தினமும் அதற்கடுத்த அய்யாமுத்தஷ்ரீக்  தினங்களான துல்ஹஜ் 11,12,13 ஆம் தினங்களிலும் மாலை நேரம் வரை நிறைவேற்ற முடியும். ஆனாலும் முதல் தினத்தில் அறுத்து விடுவது சிறந்ததாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், பெருநாள் தொழுகைக்கு முன் யாராவது குர்பானி பிராணியை அறுத்து விட்டால் அவர் வேறொரு பிராணியை குர்பானி கொடுக்கட்டும் என்றுள்ளார்கள்.

(ஆதாரம்: புஹாரி)

ஒரு முறை அலி (ரழி) அவர்கள், அறுக்கும் தினங்களாக பெருநாள் அன்றும் அதற்கடுத்த மூன்று தினங்களும் விளங்குகின்றன. ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் உடனடியாக குர்பானி கொடுத்து அப்பிராணியின் மாமிசத்தில் இருந்து புசிப்பது நபியவர்கள் செய்து வந்த வழிமுறை என்றுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தன்று காலை உணவு அருந்தாமல் தொழச் செல்வதில்லை. ஹஜ் பெருநாளன்று காலை உணவு உண்ணாமல் தொழுகைக்குச் சென்று தொழுதுவிட்டு வந்து குர்பானி கொடுத்து பிராணியின் மாமிசத்திலிருந்து உண்பார்கள். (ஆதாரம்: மிஷ்காத்)

அதேவேளை குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பகுதிகளாக பிரித்து ஒன்றை தனக்கும் அடுத்ததை உறவினர்களுக்கும் மற்றையதை ஏழைகளுக்கும் பகிர்ந்தளிப்பது விரும்பத்தக்க வழிமுறையாகும்.

‘உங்களில் குர்பானி கொடுக்க நிய்யத்து வைத்தவர் தலைப்பிறை பிறந்ததிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை தனது உடலிலுள்ள முடிகள், ரோமங்களை அகற்றாமல் பார்த்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(ஆதாரம்: முஸ்லிம்)

குர்பானி பிராணியை உரியவரே தன் கையினால் அறுப்பது சிறந்தது. அவர் விரும்பினால் அறுப்பதற்கு வேறு ஒருவரையும் பொறுப்பாக்கலாம். அவ்வாறே தனது குர்பானி பிராணியை வாங்குவதற்கும் அறுத்து விநியோகிப்பதற்கும் ஒருவரை நியமிப்பதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. நபியவர்கள் ஹக்கீம் பின் ஹிஸ்ஸாம் எனும் நபித்தோழரிடம் ஒரு தீனாரை கொடுத்து தனக்காக ஒரு குர்பானி பிராணியை வாங்குமாறு பணித்தார்கள். (ஆதாரம்: அஹமத்)

அவ்வாறே நபியவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது குர்பானிக்காக வந்திருந்த பிராணிகளில் 63 பிராணிகளை தனது கைகளினாலேயே அறுத்தார்கள். அதன் பின்பு கத்தியை அலி (ரழி) அவர்களிடம் கொடுத்து மீதி பிராணிகளை அறுக்குமாறு பணித்தார்கள்.

(ஆதாரம்: முஸ்லிம்)

எனவே துல்ஹஜ் மாதத்தின் ஆரம்பப்பகுதியில் நிறைந்துள்ள இறையருள் நன்மைகளை அடைந்து கொள்ள உச்சளவில் முயற்சிப்போம்.

 

மௌலவி ஏ.ஜி.எம்.ஜெலீல்…

(மதனி) மஃஹதுஸ் ஸுன்னா அரபுக்

கல்லூரி, காத்தான்குடி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT