Saturday, July 20, 2024
Home » ஹஜ்ஜாஜிகளுக்கு அனைத்து வசதிகளையும் வழங்கும் நடவடிக்கையில் சவூதி அரசாங்கம்

ஹஜ்ஜாஜிகளுக்கு அனைத்து வசதிகளையும் வழங்கும் நடவடிக்கையில் சவூதி அரசாங்கம்

by Gayan Abeykoon
June 14, 2024 8:16 am 0 comment

வ்வருடத்திற்கான புனித ஹஜ் கிரியைகளுக்கான பிரமாண்டமான ஏற்பாடுகளை சவூதி அரேபிய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இரு புனித தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல சஊத் அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த ஏற்பாடுகள் யாவும் மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கின்றன. 

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 2.5 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இம்முறை புனித ஹஜ் கடமையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் தமது கடமைகளை எந்த விதமான இடர்கள் மற்றும் அசெளகரியங்களுக்கும் முகம்கொடுக்காமல் நிறைவேற்றத் தேவையான அனைத்து வசதிகளையும் சேவைகளையும் வழங்குவதில் சவூதி அரசு உறுதி பூண்டுள்ளது.

ஹாஜிகளின் பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து, உணவு மற்றும் தங்குமிட வசதி போன்றவற்றில் அதிக அக்கறை  செலுத்தியுள்ளது. விஷேட பாதுகாப்பு எற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இம்முறை ஹஜ் கடமைகளின் போது 2 இலட்சத்து 50 ஆயிரம் படைவீரர்கள் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

80 சிறியரக அம்புலன்ஸ் வண்டிகளும் 75 பெரியரக அம்புலன்ஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இவற்றுக்கு மேலதிகமாக 33 உதவி அம்புலன்ஸ் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை போக்குவரத்து சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 35 ஆயிரம் சொகுசு பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.    இதேவேளை புனித ஹஜ் கடமை நேரங்களின் போது கடமையாற்றவென 1 இலட்சத்து 20ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டு தொண்டர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

35 கம்பனிகள் ஹாஜிகளுக்கான தங்களது சேவைகளை வழங்க முன்வந்துள்ளன. தொழில்நுட்ப ரீதியில் இக்காலத்தில் சேவைகளை வழங்கவென 120 அப்ஸ்கள் (apps) உருவாக்கப்பட்டுள்ளன. பொறியியலாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களாக 53 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

264 முதலுதவி சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 28 வைத்தியசாலைகளும்,  203 நடமாடும் சிகிச்சை குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை இப்புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் பொருட்டு இம்முறை உலகலாவிய ரீதியில் 2400 பேர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல சஊத் அவர்களின் உத்தரவுக்கமைய விஷேட விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

காஸா தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமுற்ற 1000 குடும்பங்களின் பிரதிநிதிகளுக்கு இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான விஷேட சந்தர்ப்பத்தை மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் வழங்கியுள்ளார்.

இலங்கையிலிருந்து இம்முறை 3500 பேர் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றுள்ளனர்.

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி அவர்களின் முயற்சியின் பயனாக மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் விருந்தாளிகளாக இம்முறை 20 பேருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானியிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க முப்படையில் சேவையாற்றும் 05 பேருக்கும் இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அஸ்ஹர் ஆதம்…

(கல்முனை குறூப் நிருபர்)

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT