Saturday, July 20, 2024
Home » ஐம்பதுக்கு மேற்பட்டோரை பலிகொண்ட குவைத் தீவிபத்துக்கான காரணம் என்ன?

ஐம்பதுக்கு மேற்பட்டோரை பலிகொண்ட குவைத் தீவிபத்துக்கான காரணம் என்ன?

உயிரிந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள்! தீவிர விசாரணை நடத்தி, தவறு செய்தோரை தண்டிக்குமாறு அரசு கண்டிப்பான உத்தரவு!

by Gayan Abeykoon
June 14, 2024 11:42 am 0 comment

குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்ைக நேற்று 50 ஐயும் தாண்டியுள்ளது. உயிரிழந்தோரில் 40 பேர் இந்தியர்களாவர்.

ஆறு மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் தங்கியிருந்தனர். இந்தக் கட்டடம் குவைத் நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமானது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்த போது அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் கட்டுமான விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எகிப்து நாட்டு காவலாளி தங்கியிருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததே தீவிபத்துக்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. கட்டடத்தின் கீழ்த்தளத்தில் அந்தக் காவலாளி தங்கியுள்ளார். அதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் மற்ைறய பகுதிகளுக்கும் தீ வேகமாகப் பரவியுள்ளது.

தீவிபத்து ஏற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் சுமார் 195 பேர் தங்கி இருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 150- இற்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள். தீவிபத்து ஏற்பட்ட நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கி இருந்தவர்களில் 92 பேர் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 பேர் இரவுக் கடமை என்பதால் பணிக்குச் சென்றுள்ளனர். அடுக்குமாடிக் குடியிருப்பில் அங்குள்ள என்.பி.டி.சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் தங்கி இருந்துள்ளனர்.

தீவிபத்து ஏற்பட்ட நேரம் அதிகாலை 4 மணி என்பதால் பெரும்பாலானவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அதுதான் உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம் எனத் தெரிகிறது. தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்த காரணத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெரும்பாலானவர்கள் உயிரிழந்துள்ளனர். சிலர் தீவிபத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதிக்க முயன்று உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி, சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு குவைத்தின் அமீர் ஷேக் அல்-சபா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

“உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாகக் குணம் பெற வேண்டுகிறேன். இந்த விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் துரிதமாக விசாரித்து அறிய வேண்டும். மேலும், இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பதை அந்த நாட்டின் தடயவியல் துறை உறுதி செய்துள்ளது. கேரளா, தமிழகம் மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக குவைத் தடயவியல் துறை தகவல் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஐவர் தமிழர்களாவர். குவைத் முடிக்குரிய இளவரசர் ஷேக் சபா, குவைத் பிரதமர் ஷேக் அகமது அப்துல்லா ஆகியோரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துக்கு என்.பி.டி.சி நிறுவனம் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளரின் பேராசைதான் காரணம் என பாதுகாப்பு துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான ஷேக் ஃபகத் அல் யூசுப் அல் சபா தெரிவித்துள்ளார். இந்த தீவிபத்து குறித்து பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “குவைத் நகரில் நிகழ்ந்த தீவிபத்து மிகுந்த துயரை தருகிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “குவைத் தீவிபத்து பற்றிய செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் தூதர் அங்கு விரைந்துள்ளார். மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் தூதரகம் முழு அளவில் உதவிகளை செய்யும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் குவைத்துக்கான இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா நிலைமையை மதிப்பிடுவதற்காக தீவிபத்து ஏற்பட்ட மங்கஃப் பகுதிக்கு விரைந்தார். அதன் பிறகு 30- இற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அல்-அதான் மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு பல நோயாளிகளை சந்தித்து, தூதரகம் சார்பில் முழு அளவில் உதவிகள் செய்யப்படும் என அவர்களுக்கு உறுதி அளித்தார்.

இதையடுத்து தீவிபத்தில் தொடர்புடைய இந்தியர்களின் குடும்பத்தினருக்காக 965-65505246 என்ற ஹெல்ப்லைன் இலக்கத்தை குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என தூதரகம் உறுதி அளித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT