Saturday, July 13, 2024
Home » அட்டாளைச்சேனை றஹூமானியா மாணவி அனபா தேசிய மாணவர் பாராளுமன்ற அமைச்சராக நியமனம்

அட்டாளைச்சேனை றஹூமானியா மாணவி அனபா தேசிய மாணவர் பாராளுமன்ற அமைச்சராக நியமனம்

by Gayan Abeykoon
June 14, 2024 6:14 am 0 comment

ட்டாளைச்சேனை, ஆலம்குளம் றஹூமானியா வித்தியாலய மாணவி செல்வி எம். அனபா, தேசிய மாணவர் பாராளுமன்றத்தில் பௌதிகவள அபிவிருத்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக நியமனம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்நியமனம், மாணவி கல்வி கற்கும் றஹூமானியா வித்தியாலயம், அட்டாளைச்சேனை கல்விக் கோட்டம், அக்கரைப்பற்று கல்வி வலயம், கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம், மாகாண கல்வி அமைச்சு என்பனவற்றுக்கு நிச்சயம் பெருமையையும், புகழையும் பெற்றுத்தருகின்றது.

றஹூமானியா வித்தியாலயத்தில் தற்பொழுது தரம்-11 வகுப்பில் கல்விகற்கும் மாணவி எம்.அனபா, சுமார் 30 அங்கத்தினர்களைக் கொண்ட, அக்கரைப்பற்று கல்வி வலய மட்ட மாணவர் பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகராக நியமனம் பெற்று தனது பணியை முன்னெடுத்து வந்தார். இந்நிலையில் அவர் தேசிய மாணவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி அமைச்சரவையில் அங்கம் வகித்துள்ளார்.

பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள், இலங்கை நாட்டின் பாராளுமன்ற நடைமுறையை தெளிவாக அறிந்து, தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தும் விஷேட தேசிய வேலைத்திட்டம் இதுவாகும். பாடசாலை மட்டத்தில் ஆரம்பமாகும் மாணவர் பாராளுமன்றம், தேசிய பாராளுமன்றத்தில் நிறைவுபெறுகின்றது.

இது கல்வி அமைச்சு, நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கியுள்ள நல்லதொரு சந்தர்ப்பமாகும்.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக, சமூகவிஞ்ஞானப் பிரிவு இம்மாணவர்களுக்கு தேர்தல்கள் நடாத்தப்படும் விதம், பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுமுறை, அமைச்சரவை நியமனம், பாராளுமன்ற நடைமுறைகள் என்பன தொடர்பில் விளக்கமளிப்பதுடன், பாடசாலை ரீதியாக மாணவர் பாராளுமன்றத் தேர்தல்களை நடாத்தி உறுப்பினர்கள் தெரிவை மேற்கொண்டு வருகின்றது. பின்னர் அவர்களிலிருந்து வலய மட்ட மாணவர் பாராளுமன்றம், தேசியமட்ட பாராளுமன்றம் என்பன அமைக்கப்படுகின்றன.

தேசிய மாணவர் பாராளுமன்ற அமைச்சரவையில் நியமனம் பெற்றுள்ள, மாணவி செல்வி அனபாவை பாராட்டி கௌரவிக்கும் விழா றஹூமானிய வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் கே.எல்.எம்.முனாஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் (நழீமி) பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) எம்.எம்.சித்தி பாத்திமா, உதவிக் கல்விப் பணிப்பாளர் (முன்பிள்ளைப் பருவம்) ஏ.எல்.பாயிஸ், சமாதானக் கல்வி இணைப்பாளர் ஏ.றியாஸ் முகம்மட், வழிகாட்டல் ஆலோசனை ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.தாஹிர் உள்ளிட்ட பிரதேச முக்கியஸ்தர்கள் ஏனைய அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

றஹூமானிய வித்தியாலய பிரதி அதிபர் ஏ.அன்ஸார், பொறுப்பாசிரியர் ஏ.எச்.இம்றான் ஹூஸைன் உள்ளிட்ட ஆசிரியர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழவுக்கு ஆலம்குளம் ஜூம்மாப் பள்ளிவாயல், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள், பொது அமைப்புக்கள் என்பன அனுசரணை, ஒத்துழைப்பு நல்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், சாதனை மாணவி எம்.அனபா மாலை அணிவித்து, அதிதிகள் சகிதம் ஊர்வலமாக விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டு, பொன்னடை போர்த்தி, பதக்கம் அணிவித்து, பொற்கிளி மற்றும் பரிசில் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வில் பெற்றார்கள், பொதுமக்கள் என அதிகமானோர் கலந்து சிறப்பித்தனர்.

விழாவில் உரையாற்றிய, பிரதம அதிதி அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் கூறுகையில்,  மாணவி அனபா அடைந்துள்ள வெற்றியை எவரும் சாதாரணமாக மதிப்பிட முடியாது. மாணவியின் உள்ளார்ந்த திறமையினால் கிடைக்கப்பெற்றுள்ள இம்மகத்தான அடைவுகுறித்து, கல்வி அதிகாரிகளான நாம் பெருமைப்படுகின்றோம் என்றார்.

முகம்மட் றிஸான்…

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT