Saturday, July 13, 2024
Home » புனித ஹஜ் யாத்திரை செல்வதற்கு 20 இலங்கையருக்கு இம்முறை வாய்ப்புக் கிடைத்தமை பெரும் பாக்கியம்

புனித ஹஜ் யாத்திரை செல்வதற்கு 20 இலங்கையருக்கு இம்முறை வாய்ப்புக் கிடைத்தமை பெரும் பாக்கியம்

by Gayan Abeykoon
June 14, 2024 9:34 am 0 comment

ம்முறை புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக சவூதி மன்னர் சல்மானின் விசேட விருந்தினர்களாக இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 20 ஹஜ் யாத்திரிகர்களை கௌரவித்து வழியனுப்பி வைக்கின்ற விசேட வைபவம் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய உயர்ஸ்தானிகராலயத்தில் உயர்ஸ்தானிகர் காலித் பின் ஹமூத்அல் கஹ்தானி தலைமையில் சமீபத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புதுடில்லியில் உள்ள சவூதி அரேபியாவின் அரச தூதரகத்தின் மத விவகார இணைப்பாளர் அஷ்​ெஷய்க் பத்ர் பின் நாசர் அல் – அனாசி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதில் ஹஜ் கிரியை மேற்கொள்ள உள்ள மன்னரின் விசேட விருந்தாளிகளுக்கான வரவேற்பு வைபவம் காலை 9.15 மணிக்கு உத்தியோகபூர்வமாக குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. விசேட விருந்தினர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வருகை தந்த உயர்ஸ்தானிகர் ஒவ்வொருவராகச் சந்தித்து கைகொடுத்து சலாம் கொடுத்தார். அதன் பின்னர்ஒவ்வொருவர் பற்றிய அறிமுகம் இடம்பெற்றது. பிரதம விருந்தினரும். உயர்ஸ்தானிகரும் இணைந்து ஒவ்வொருவரையும் பாராட்டி நல்லாசி வழங்கியதுடன் விசா, பரிசுப் பொதிகள் வழங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் ஹஜ் கிரியை மேற்கொள்ளவுள்ள தெரிவு செய்யப்பட்ட இஸ்லாமிய அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள், மற்றும் புகழ்பெற்ற சிரேஷ்ட அரச அதிகாரிகள் 20 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் இதன்போது இலங்கை முப்படை வீரர்களுக்கும் புலனாய்வுத் துறையினருக்கும் இந்த இலவச ஹஜ் வாய்ப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில்  தலைமையுரை நிகழ்த்திய கொழும்பிலுள்ள சவூதி அரேபியா உயர்ஸ்தானிகராலத்தின்  உயர்ஸ்தானிகர் காலித் பின் ஹமூத்  அல் கஹ்தானி தெரிவித்ததாவது:

“இலங்கை நாட்டில் இருந்து இம்முறை புனித ஹஜ் யாத்திரைக்கு 3500 பேர் சென்றுள்ளனர். மேலும் அவர்களுடன் 1500 பேரை அனுப்புவதற்கு முயற்சிகள் மேற்கொண்டோம். இருந்த  போதிலும் அவை பயனிக்கவில்லை. இம்முறை 25 இலட்சத்துக்கும்  மேற்பட்ட ஹஜ் யாத்திரையாளர்கள்  வருகை தருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எனவே நாம் மேலதிகமாக 1500 பெற்றுக் கொள்ள எடுத்த முயற்சிகள் பயனிக்கவில்லை. இந்த  ஹஜ் யாத்திரிகர்கள் 3500 பேரும் இலங்கையிலுள்ள பல தரப்பட்ட முகவர்களின் மூலம் பயணம் சென்றுள்ளார்கள்.  ஆனாலும் மன்னரின் விருந்தாளிகளாக இந்நாட்டில் இருந்து 20 பேர்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  இந்த 20  நபர்களும்  ஒவ்வொரு துறை சார்ந்தவர்கள்  அங்கம் வகிக்கின்றனர்.

இதில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள், மற்றும் புகழ்பெற்ற சிரேஷ்ட அரச அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்புக்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினர் இரண்டு புனித தலங்களின் பாதுகாவலரின் விருந்தினராக 2024 ஜுன் 8 ஆம் திகதி இலங்கையில் இருந்து மக்காவிற்கு யாத்திரை மேற்கொள்ள சகல விதமான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் 20 பேர் இம்முறை புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அனைவரும் தகுதிவாய்ந்தவர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் நீங்கள் அனைவரும் ஏதோ வகையில் பாக்கியசாலிகளே. இதில் அநேகமானவர்கள் முதல் முறையாக ஹஜ் யாத்திரை செல்லக் கூடியவர்களும் இருக்கிறார்கள். முதலாவது முறை சென்றவர்கள் எனும் போது அவர்களுக்காக புனித ஹஜ் யாத்திரை சென்றார்கள் என்று குறிப்பிட முடியும். ஆனால் இரண்டாவது முறை செல்பவர்களை நாங்கள் எவ்வாறு பார்க்கின்றோம் என்றால் இந்த நாட்டுக்காகவும் இந்த நாட்டிலுள்ள சகல முஸ்லிம்கள் சார்பாகவும் இந்த ஹஜ் யாத்திரை வழங்கப்படுகின்றது. அவர்கள் இந்த நாட்டுக்காக முஸ்லிம் சமூகத்திற்காகவும் அவர்கள் தங்களுடைய பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் அழைப்பின் பேரில் புனித இரண்டு பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் முஹம்மது பின் சல்மான் அவர்கள் இதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார். உலகிலுள்ள நாடுகளில் இருந்து 2300 பேர் இந்த விசேட அழைப்பின் பேரில் புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளார்கள். இந்த 2300 பேர் என்பது பெரியதொரு தொகை அல்ல. அதில் இங்கே இலங்கையில் இருந்து 20 பேர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் அதிகமானவர்கள் ஹஜ் யாத்திரைக்காக சென்று இருந்தாலும் கூட கடந்த வருடம் மன்னரின் விசேட விருந்தினர்களாக 10 பேர்தான் விஜயம் செய்தார்கள். இம்முறை அதில் இருந்து 10 பேரை அதிகரிக்க முடியுமாக இருந்தது. இது நான் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக கிடைக்கப் பெற்றதாகும். இந்தக் குழுவின் வழிகாட்டியாக மௌலவி சேகுதீன் அவர்கள் கடமையாற்றுவார் .

எனது தொலைபேசி இலக்கம் எல்லோருரிடத்திலும் இருக்கிறது. எந்தச் சந்தர்ப்பத்திலும் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். ஹஜ் யாத்திரை சென்று வந்தாலும் நீங்கள் அனைவரும் வந்து என்னைச் சந்திக்க வேண்டும். குழுவாக வந்து சந்திக்கவும் முடியும். அல்லது தனித்தனியாகவும் வந்து சந்திக்கலாம். இதில் துறைசார்ந்தவர்களும் இளைஞர்களும் இப்பயணத்தில் அங்கம் வகிக்கின்றனர். எல்லோரும் எங்களோடு இணைந்து செயலாற்ற வேண்டும். இப்பயணத்தில் செல்லவுள்ள அனைவருக்கும் சகல ஏற்பாடுகளையும் சவூதி அரேபியா நாட்டு அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது. சவூதி அரசாங்க மன்னரின் ஒரு விருந்தாளியாகத்தான் நீங்கள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளீர்கள்.

நீங்கள் இங்கு இருந்து சென்று மக்காவில் உம்மாராவை முடித்துக் கொண்டு மதீனா செல்ல சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சில இடங்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சவூதி அரேபியாவில் உங்களுடைய பயண ஏற்பாடுகள் இடம்பெறுவதற்காக பங்காற்றிய இங்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட புதுடில்லியில் உள்ள சவூதி அரேபியாவின் அரச தூதரகத்தின் மத விவகார இணைப்பாளர் அஷ்​ெஷய்க் பத்ர் பின் நாசர் அல் – அனாசி பத்ர் அவர்களுடைய பங்களிப்பு முக்கியமானது. அவருக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு அல்லாஹ்விடமும் பிரார்த்தனை மேற்கொள்வோம். அதேவேளையில் உங்களது சமய கிரியைகளை அனைத்தையும் எளிதாகவும் சிரமமின்றியும் கடமையை முடிக்க சகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட புதுடில்லியில் உள்ள சவூதி அரேபியாவின் அரச தூதரகத்தின் மத விவகார இணைப்பாளர் அஷ்​ெஷய்க் பத்ர் பின் நாசர் அல் – அனாசி அவர்கள் உரையாற்றும் போது குறிப்பிட்டதாவது:

“இந்தப் புனித பயணம் அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உங்கள் எல்லோருக்கும் கிடைத்தமை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன். நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் விருப்பத்தின் பேரில் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். இதற்காக பல பேர் விண்ணப்பம் கோரி இருந்தார்கள். இருப்பினும் இதில் மிக முக்கியமானவர்கள்தான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இந்தத் தெரிவு முறைக்கு நூற்றுக்கு நூறு வீதம் பங்களிப்பு நல்கிய உங்கள் தூதுவர் உட்பட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு அவருக்காக துஆப் பிரார்த்தனை செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

அதேபோல் இதில் நீங்கள் 20 பேரும் தெரிவு செய்யப்பட்டமையானது அது அல்லாஹ்வின் அழைப்பாகும். கடந்த வருடம் சவூதி அரசாங்க மன்னரின் விருந்தினர்களாக 10 பேர்தான் விஜயம் செய்தார்கள். இம்முறை 20 பேர் பயணம் செய்வது என்றால் அதற்குக் காரணம் இலங்கையிலுள்ள சவூதி ஆரேபிய உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் ஸ்தானிகர் அவர்களுடைய உன்னதமான சேவையாகும். உயர்ஸ்தானிகருக்கு நாம் எல்லோரும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளதோடு அவருடைய சேவைக்காகவும் நாம் அனைவரும் துஆப் பிரார்த்தனை செய்யக் கட்மைப்பட்டுள்ளோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கு மிகவும் நெருக்கமான உறவை வலுப்படுத்திக் கொள்வதற்காக குறிப்பாக ஒவ்வொரு வருடமும் சவூதி அரேபியா மன்னர் சல்மான் அவர்களின் செயல் திட்டத்திற்கு இணங்க அவருடைய விசேட விருந்தாளிகளாக கடந்த காலங்களிலும் இலங்கையில் இருந்து பலர் புனித ஹஜ் கிரியை மேற்கொண்டுள்ளார்கள்.

இத்துறையில் மட்டுமல்ல இலங்கை, சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நல்லலுறவு பல்வேறுபட்ட அபிவிருத்தி நடடிக்கைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பாதை அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி என்று நாட்டின் மேம்பாட்டுக்கான பல்வேறுபட்ட உதவிகளை சவூதி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றன. அதேவேளை சமயம் சார்ந்த விடயங்களிலும் ஒரு வலுவான உறவை இலங்கையுடன் சவூதி அரேபியா மேற்கொண்டு வருகின்றது.

ஹஜ்ஜின் மகிமையையும், அதன் தாற்பரியத்தையும், சவூதி அரசாங்கத்தினால் ஹஜ் யாத்திரையாளர்களுக்கு முன்னெடுக்கப்படும் நன்மைகளையும் பங்களிப்புக்களையும் வார்த்தைகளால் சொல்லி எழுத முடியாது.

எமக்கு இந்த புனித ஹஜ் கிரியை மேற்கொள்வதற்காக சந்தர்ப்பம் வழங்கிய சவூதி அரேபியா மன்னர் மற்றும் சவூதி அரேபியா உயர் ஸ்தானிகராலயத்தின் உயர்ஸ்தானிகர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி மற்றும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட புதுடில்லியில் உள்ள சவூதி அரேபியாவின் அரச தூதரகத்தின் மத விவகார இணைப்பாளர் அஷ்​ெஷய்க் பத்ர் பின் நாசர் அல் – அனாசி அவர்களுக்கும் எனது உள்ளார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கை நாட்டின் மக்களுடைய சுவிட்சமான நல்வாழ்வுக்கும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கும் மற்றும் எமது நாட்டு முஸ்லிம் மக்களுடைய விடிவுக்காகவும் விசேடமான பிரார்த்தனைகளை இந்தப் புனித பயணத்தை மேற்கொண்டுள்ள நாங்கள் நிச்சயமாக அல்லாஹ் விடம் துஆப் பிரார்த்தனை புரிவோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அங்கு பகை இல்லை, வஞ்சகமுமில்லை, விரோதங்கள் இல்லை, உயர்வு தாழ்வு இல்லை. அங்கு எல்லோரும் இஸ்லாம் என்ற கயிற்றைப் பற்றிப் பிடித்து, எல்லாம் கடந்த ஏகநாயகனின் கட்டளைக்கு அடிபணிந்த சகோதரர்கள். உலகத்தில் வேறெங்கும் காணாத ஓர் அரிய காட்சி வாழ்க்கைக்கோர் முன்மாதிரியான காட்சி. அங்கு ஆண்டி இல்லை. அரசன் இல்லை. முதலாளி பாட்டாளி என்ற வேற்றுமை இல்லை. எல்லோரும் ஒரே வித ஆடம்பரமற்ற வெண்ணுடை தரித்து உலகத்தை முற்றும் மறந்து உலக சிந்தனைகளை எல்லாம் ஒழித்து ஆண்டவனின் அழைப்பிற்கு இணங்க இணைற்ற அவன் சந்நிதானத்தை தரிசிக்கக் கிடைத்த வாய்ப்பை பெரும் பாக்கியமாக நாங்கள் கருதுகின்றோம்.

அவை மட்டுமல்ல சமுதாயத் தலைமைகளுக்கு அநேகமாக ஒதுக்கப்படும் இந்த சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி. எதிர்காலத்தில் மென்மேலும் சமூகத் தொண்டுகளில் ஈடுபட இதுபோன்ற அவகாசங்கள் உந்துசக்தியாக அமையும். இன்ஷா அல்லாஹ்.

குறிப்பாக இரு புனிதஸ்தலங்களின் சேவகர் சவூதி மன்னரின் ஹஜ்ஜுக்கான விருந்தினர்கள் என்ற நிகழ்ச்சி நிரல் பல வருடங்களாக சவூதி அரேபியா உலக முஸ்லிம்களுக்கு வழங்கும் இலவச நிகழ்ச்சித் திட்டங்களில் ஒன்று. இது சுமார் 26 வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு அதனூடாக சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் தமது ஹஜ் கடமையினை இலவசமாகவும் இலகுவாகவும் நிறைவேற்றியுள்ளார் என்ற செய்தியை எனக்கு அறியக் கிடைத்தது. இந்நிகழ்ச்சித் திட்டத்தினை மேற்பார்வை செய்யும் சவூதி இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் இது விடயமாக தமது அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தில் தெரிவித்திருந்தார்.

இவ்வருடம் மாத்திரம் வழமைபோன்று 2000 ஆயிரம் பாலஸ்தீனர்கள் உள்ளடங்களாக 88 நாடுகளைச் சேர்ந்த 3322 யாத்திரீகர்களுக்கு இவ்வாய்ப்புக் கிட்டியுள்ளது.

அதேவேளை இலங்கையர்களாகிய எமக்கு இவ்வருடம் முதன்முதலாக 20 பேருக்கான வாய்ப்புக் கிடைத்தமையை இட்டு நான் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் கௌரவ காலித் அல் கஹ்தானி அவர்களுக்கும், சவூதி இஸ்லாமிய விவகார அமைச்சின் பொறுப்பாளிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். சவூதி அரேபியாக இஸ்லாமிய கலாசார அமைச்சும் இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் எனது உள்ளார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT