Home » பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் மக்கள் பிரதிநிதிகள் முன்பான பொறுப்பு

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் மக்கள் பிரதிநிதிகள் முன்பான பொறுப்பு

by Gayan Abeykoon
June 14, 2024 1:00 am 0 comment

 நாட்டின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு அரசியல் கட்சியும் நகர்வுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ள கட்சிகளின் தலைவர்கள் அரசியல் மேடைகளில் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்குகின்றனர். பொருளாதார ரீதியான வங்குரோத்து நிலை குறித்து பலரும் பேசுகின்றனர்.

ஆனால் நாடு 2022 இல் அந்நியச் செலாவணி பற்றாக்குறையுடனான பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளான போது, இவர்களில் எவரும் நாட்டின் முன்னேற்றுத்துக்கான கொள்கைகளை முன்மொழியவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் இவர்கள் தங்கள் தங்கள் கட்சி நலன்களை முன்னிலைப்படுத்தி தீர்மானங்களை மேற்கொண்டார்களே ஒழிய, நாட்டின் நலன்களைக் கருத்தில் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ளப் பின்வாங்கினர்.

நாடு எதிர்கொண்ட பொருளாதார வீழ்ச்சியின் பாரதூரத்தைக் கருத்தில் கொண்ட இவர்கள், அந்தச் சமயத்தில் நாட்டை பொருளாதார ரீதியில் மீளக்கட்டியெழுப்பவோ, அதன் ஊடாக மக்களுக்கு நிவாரணங்கள் பெற்றுக்கொடுப்பதற்கோ நாட்டின் தலைமையை ஏற்க முன்வராது தயக்கம் காட்டினர்.

அந்த இக்கட்டான சூழலில் நாட்டின் நலன்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமையை ஏற்றதோடு, நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான பொருளாதார ரீதியிலான வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்தார். அதன் ஊடாக நாட்டின் பொருளாதாரம் குறுகிய காலப்பகுதிக்குள் கட்டம் கட்டமாக மீட்சிபெற்று மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து நம்பிக்கை தரும் வகையில் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருகின்றது.

ஆன போதிலும் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் வீழ்ச்சியடைந்தது போன்று மீண்டும் பொருளாதாரம் வீழ்ச்சியடைய இடமளிக்காத வகையில் அதனை உறுதியுடன் பேணவும் வேண்டும். அத்தோடு நாட்டின் பொருளாதாரத்தை நிலைபேறானதாகக் கட்டியெழுப்பவும் வேண்டும். அவையே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதனை நிறைவேற்றுவதே இன்றைய தேவையாகும்.

2022 இல் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய சரியான பொருளாதார முறைமை இன்மையே பிரதான காரணமாக அமைந்திருந்தது. இதுவரையிலும் நாட்டில் இறக்குமதியை மையப்படுத்திய பொருளாதார முறைமையே காணப்பட்டது. நாட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படும் முறைமையே காணப்பட்டது.

ஆனால் யுத்தத்திற்கு பின்னர் துரிதமாக பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்வதற்கான வாய்ப்பை நாடு பெற்றுக்கொண்டது. இருந்தும் கூட யுத்தம் முடிந்து 15 வருடங்களாகியும் அந்த முன்னேற்றம் அடைந்து கொள்ளப்படாதுள்ளது. இறக்குமதிக்கு தேவையான பணம் இல்லாத வேளையில் அதற்காக கடன் பெற்றுக்கொள்ளப்பட்டன. அவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் பெரிதும் அதிகரித்து மீளச்செலுத்த முடியாத நிலை உருவானது. இந்த உண்மையை எவரும் மக்களுக்கு சொல்ல முன்வரவில்லை.

இறுதியில் நாடு வங்குரோத்து அடைந்தது. ஆனால் அவ்வாறான நிலை நாட்டில் மீண்டும் ஏற்பட இடமளிக்கலாகாது. அந்த வகையில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு ஒத்துழைப்புடன் பொருளாதாரத்தை உறுதியாகக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து இருக்கின்றது.

அந்த வகையில் பத்தரமுல்ல, வோடர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பொருளாதார மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் பங்கேற்கும் இளைஞர், யுவதிகளுடனான கலந்துரையாடலில் உரையாற்றிய ஜனாதிபதி, ‘தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி பொருளாதார வேலைத்திட்டத்தை நாம் முன்வைத்துள்ளோம். அதை நடைமுறைப்படுத்தவே பொருளாதார நிலைமாற்றச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தத் திட்டம் வீழ்ச்சியடைந்தால் அந்நியச் செலாவணியை நாம் மீண்டும் இழக்க நேரிடும். மருந்து, பெற்றோல், எரிபொருள் இல்லாமல் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் அனைத்துக் கட்சி தலைவர்களும் இப்பொருளாதார நிலைமாற்றச் சட்டமூலத்தை ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்கவும் தடுக்கவும் உண்மையாகவே விரும்பும் மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் இத்திட்டத்திற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கவே செய்வர். அதுவே பொறுப்புமிக்க மக்கள் பிரதிநிதிகளின் பணியாக இருக்கும். தனிப்பட்ட மற்றும் அற்ப அரசியல் நலன்களுக்காக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய அவர்கள் ஒருபோதும் துணைபோகவே மாட்டார்கள். மக்களின் கருத்தும் அதுவேயாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT