Saturday, July 20, 2024
Home » T20 WC 2024: 19 பந்துகளில் ஓமன் அணியை வீழ்த்திய இங்கிலாந்து

T20 WC 2024: 19 பந்துகளில் ஓமன் அணியை வீழ்த்திய இங்கிலாந்து

- அதிக பந்துகள் மீதமுள்ள வகையில் வரலாற்று வெற்றி

by Prashahini
June 14, 2024 3:54 pm 0 comment

ஓமன் அணியை வெறும் 19 பந்துகளில் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது இங்கிலாந்து அணி. 2024 T20 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான குரூப் B பிரிவு போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது நெட் ரன் ரேட்டை முன்னேற்றிக் கொண்டால் மட்டுமே இங்கிலாந்து அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலை இருந்தது.

2022 T20 உலகக் கிண்ண சாம்பியன் அணியான இங்கிலாந்து 19 பந்துகளில் சேஸிங் செய்து அதை கச்சிதமாக செய்து முடித்துள்ளது.

இந்தப் போட்டியில் ஓமன் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி வெறும் 47 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. 13.2 ஓவர்களில் அந்த அணி 47 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் மொத்தமே நான்கு பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்து வீசினார்கள். சுழற் பந்துவீச்சாளர் அதில் ரஷீத் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.

வேகப் பந்துவீச்சாளர்கள் மார்க் வுட் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர். அடுத்து இங்கிலாந்து அணி 48 ஓட்டங்கள் என்று மிகச் சிறிய இலக்கை சேஸிங் செய்தது. விக்கெட்கள் போனாலும் அதிவிரைவாக இந்த இலக்கை எட்ட வேண்டும் என்ற உறுதியுடன் அந்த அணி களம் இறங்கியது.

துவக்க வீரர் ஃபிலிப் சால்ட் 3 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 12 ஓட்டங்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 400 ஆக இருந்தது. அடுத்து வந்த வில் ஜாக்ஸ் நிதானமாக ஆடினார். ஏழு பந்துகளில் ஐந்து ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரர் ஜோஸ் பட்லர் 8 பந்துகளில் 4 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து 24 ஓட்டங்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 300 ஆக இருந்தது. பேர்ஸ்டோ இரண்டு பந்துகளில் 2 ஃபோர் அடித்து 8 ஓட்டங்கள் சேர்த்தார்.

சரியாக 3.1 ஓவரில் இங்கிலாந்து அணி 50 ஓட்டங்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில் ஜாக்ஸ் பந்துகளை வீணடிக்காமல் இருந்திருந்தால் இன்னும் கூட குறைவான பந்துகளில் இங்கிலாந்து அணி சேஸிங்கை முடித்து வெற்றி பெற்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் T20 உலகக் கிண்ண வரலாற்றிலேயே மிக அதிக பந்துகள் மீதமுள்ள வகையில் சேஸிங் செய்து வெற்றி பெற்ற அணி என்ற வரலாற்று சாதனையை இங்கிலாந்து நிகழ்த்தியது. முன்னதாக இலங்கை அணி, 2014 T20 உலகக் கிண்ணத் தொடரில் நெதர்லாந்து அணியை 90 பந்துகள் மீதமிருக்கும் வகையில் வீழ்த்தி இருந்தது. அந்த சாதனையை முறியடித்து உள்ளது இங்கிலாந்து.

மேலும், இந்த வெற்றியால் இங்கிலாந்தின் நெட் ரன் ரேட் தற்போது 3.081 ஆக உள்ளது. ஸ்காட்லாந்து அணியின் நெட் ரன் ரேட் 2.164 ஆகும். இங்கிலாந்து தனது கடைசி குரூப் போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும். மேலும், ஸ்கொட்லாந்து அணி அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைய வேண்டும். இது இரண்டும் நடந்தால் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT