Saturday, July 13, 2024
Home » இலங்கைக்கு பொருளாதார நன்மைகளை கொண்டுவரும் ஜனாதிபதியின் இந்திய விஜயம்

இலங்கைக்கு பொருளாதார நன்மைகளை கொண்டுவரும் ஜனாதிபதியின் இந்திய விஜயம்

by Gayan Abeykoon
June 12, 2024 1:00 am 0 comment

ந்தியாவில் அண்மையில் நடைபெற்ற 2024 லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணி வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகப் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். பிரதமர் மோடி இம்முறை மூன்றாவது தடவையாக இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேரு அந்நாட்டின் பிரதமர் பதவியை மூன்று தடவைகள் ஏற்கனவே வகித்துள்ளார். அவருக்கு பின்னர் அப்பதவியை மூன்றாவது தடவையாக ஏற்றுள்ள பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுக்கொண்டுள்ளார்.

இப்பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ வைபவம் புதுடில்லி ராஷ்டிரபதி பவனில் கடந்த 09 ஆம் திகதி பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் இடம்பெற்றது. பிரதமர் மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பிராந்தியத்திலுள்ள மாலைதீவு, பங்களாதேசம், பூட்டான், நேபாளம், மொரீஷியஸ், ஷீசியல்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

என்றாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுக்கு இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்திருந்தன.  புதுடில்லியின் பிரதான சுற்றுவட்டங்களைச் சுற்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவினதும் பிரதமர் மோடியினதும் உருவம் பொறிக்கப்பட்ட பதாதைகள் பரவலாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இவ்வைபவத்தின் போது, பிரதமர் மோடிக்கு தமது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை ஜனாதிபதி தெரிவித்துக் கொண்டார். அத்தோடு இரு நாடுகளது தலைவர்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுவுடன் முன்னெடுப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.

இவ்வைபவத்தில் பங்குபற்றியதன் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுவடைய வழிவகை செய்துள்ளது. இலங்கை இந்தியாவின் அயல்நாடாகும். ‘அயல் நாடு முதலில்’ என்ற இந்தியாவின் கொள்கை இந்நாட்டுக்கு பல்வேறு நன்மைகளையும் பெற்றுக்கொடுத்து வருகின்றது. இந்நாட்டின் மேம்பாட்டுக்காக பல்வேறுவிதமான உதவி ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெற இக்கொள்கை பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இருநாடுகளும் ஆரம்ப காலம் முதல் சினேகபூர்வ நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. இருநாடுகளுக்கும் இடையில் சமய, கலாசார, பொருளாதார உறவுகள் நீண்ட காலமாக நிலவுகின்றன. அதனால் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் இலங்கை நெருக்கடிகளுக்கு உள்ளாகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உதவி ஒத்துழைப்புக்களை நல்க முதலில் வரும் நாடாக இந்தியா விளங்குகிறது. அதற்கு பிரதமர் மோடியின் அயல் நாடு முதலில் என்ற கொள்கை பெரிதும் உதவியாக அமைந்துள்ளது..

அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் இந்நாடு அந்நியச் செலாவணி பற்றாக்குறையுடன் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளானது. அச்சமயமும் இந்நாட்டுக்கு உதவ முதலில் இந்தியாவே வந்தது. அத்தோடு அந்த பொருளாதார நெருக்கடியினால் நாடும் மக்களும் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் பாரிய உதவி ஒத்துழைப்புகளை இந்தியா வழங்கியது. குறிப்பாக முதல் மூன்று மாதங்களுக்குள் 4  பில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட நிதியுதவியை வழங்கி உதவியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் அழுத்தங்களும் மக்களுக்கு பாதிப்பாகவும் சுமையாகவும் அமைவதைத் தவிர்ப்பதே அந்த உதவி, ஒத்துழைப்புக்களின் பிரதான இலக்காக அமைந்திருந்தது.

அந்த வகையில் இலங்கை என்றும் இந்தியாவுக்கு நன்றிக்கடன் உள்ள நாடாக விளங்குகிறது. அதனால் பிரதமர் மோடியின் பதவி ஏற்பு வைபவத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்குபற்றியதன் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவில் புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது என உறுதிபடக்கூறலாம்.

அதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வைபவத்தின் போது இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள பிரதமர் மோடி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவும் உத்தேசித்திருக்கிறார்.

ஆனால் பிரதமரின் விஜயத்திற்கு முன்னர் தாம் இலங்கைக்கு வருகை தரவிருப்பதாக குறிப்பிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தடைபட்டுள்ள இந்திய முதலீட்டு திட்டங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும். திருகோணமலையைக் கேந்திர மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட உள்ள கைத்தொழில் வலயத்தில் இந்திய முதலீட்டாளர்கள் பலர் முதலீடுகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்படி தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்.

ஆகவே பிரதமர் மோடியின் பதவியேற்பு வைபவத்தில் ஜனாதிபதி பங்குபற்றியதன் பயனாக இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவில் புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளதோடு இலங்கைக்கு பல பொருளாதார நன்மைகள் கிடைக்கப்பெறவும் வழிவகை செய்துள்ளது என உறுதிப்படக்கூறலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT