Thursday, July 18, 2024
Home » கல்லடி இராமகிருஷ்ணமிஷனில் கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு பெருவரவேற்பு

கல்லடி இராமகிருஷ்ணமிஷனில் கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு பெருவரவேற்பு

- பாதயாத்திரை ஒரு மாதகாலம் நிறைவு

by Prashahini
June 12, 2024 11:23 am 0 comment

வரலாற்றில் மூன்றாவது தடவையாக யாழ். கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் குருகுலத்தில் நேற்று (11) பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த மாதம் 11 ஆம் திகதி யாழ். செல்வச் சன்னதி ஆலயத்திலிருந்து சிங்கராஜா ஜெயராஜா (ஜெயா வேல்சாமி) தலைமையிலே ஆரம்பமான பாதயாத்திரை யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு நேற்றுடன் ஒரு மாத காலத்தை பூர்த்தி செய்கின்றது.

குழுவினர் நேற்று காலை மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் குருகுலத்தை வந்தடைந்தார்கள்.

இராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு மாநில பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி மகராஜ் விடுத்த அழைப்பை ஏற்று நேற்று அங்கு அவர்கள் விஜயம் செய்தார்கள்.

யாழ். கதிர்காம பாதயாத்திரை குழுவினர் நேற்று பகல் கல்லடி இ.கி.மிஷனில் வரவேற்கப்பட்டு, அங்கு பகல் அவர்களுக்கு மதியபோசன விருந்து உபசாரம் பாயாசம் மோருடன் வழங்கப்பட்டது.

முன்னதாக இராமகிருஷ்ண ஆலயத்தில் பஜனையும், விசேட பூஜையும் இடம்பெற்றன. இல்ல மாணவர்கள், பாதயாத்திரீகர்கள் இணைந்து சுவாமி நீலமாதவானந்தா ஜீ யின் வழிகாட்டலில் உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தா ஜீ மகராஜ் தலைமையில் இல்ல மாணவர்களும், அடியார்களும் ஒரு மணி நேரம் பஜனை செய்தனர்.

இதில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ,முன்னாள் பட்டிப்பளை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சிவஞானம் அகிலேஸ்வரன் ,உதவி கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, ஓய்வு நிலை ஆசிரியர் கவிமாமணி சாமி.புண்ணியமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பாதயாத்திரை- மிஷன் ஒருங்கிணைப்பாளர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் சுவாமி சுரர்ச்சிதானந்தா ஜீ மகராஜ் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பாதயாத்திரீகர் சபாரெத்தினம் ஆகியோர் உரையாற்றினர்.

பாதயாத்திரீகர்கள் இ.கி.மி. விபுலானந்த மணிமண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
பிற்பகலில் அங்கு அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையிலான குழுவினர் இம் மருத்துவ முகாமை நடாத்தினர்.

முடிவில் பாதயாத்திரை குழுத்தலைவர் சி.ஜெயராசா தெரிவிக்கையில்..

வரலாற்றில் மூன்றாவது தடவையாக மிஷனுக்கு வந்தது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எங்களில் 99 வீதமானவருக்கு மிஷின் பற்றி தெரியாது. இங்கு வந்த பின்பே சுவாமிகளது அன்பான வரவேற்பையும், உபசரிப்பையும் உணரமுடிந்தது.குருகுல மாணவர்கள் நேரத்திற்கு ஒழுங்கு டன் நடப்பதை அவதானிக்க முடிந்தது.
அதுமட்டுமின்றி மருத்துவ முகாமையும் நடாத்தினர்.

ஆகவே ,எங்களை அன்புடன் அழைத்த சுவாமிகளுக்கு நன்றி கூறுகின்றோம். அதற்காக ஒருங்கிணைப்பைச் செய்த எமது ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா ஜயாவுக்கும் நன்றிகள்.

இன்னும் 2 தினங்களில் நாங்கள் அம்பாறை மாவட்டத்தை அடைவோம். 30 ஆம் தேதி உகந்தைமலை முருகன் அருகில் உள்ள காட்டுப்பாதை திறக்கப்பட்டதும் அதன் ஊடாக காட்டுக்குள் பிரவேசிக்க இருக்கின்றோம். முருகன் அருளால் எதிர்வரும் ஜுலை மாதம் 06ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடைய இருக்கின்றோம். என்றார்.

காரைதீவு குறூப் நிருபர் – வி.ரி.சகாதேவராஜா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT