ஈச்சிலம்பற்று முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை ஏற்றிவந்த அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு 38 வருடங்களாகியும் நீதி கிடைக்கவில்லையென படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி எடுத்து வரும்போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்ட சேருவில படுகொலையின் 38வது நினைவுதினம் இன்றாகும்.
அன்று நாட்டில் நிலவிய யுத்தசூழலின் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்கள் ஈச்சிலம்பற்று, பூமரத்தடிச்சேனை மற்றும் மாவடிச்சேனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தார்கள். இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் அரசாங்கத்தினால் சேருவில பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்டு வந்தன.
அந்தவகையில் 1986ம் ஆண்டு யூன் மாதம் 12ஆம் திகதி அகதிகளுக்கான நிவாரணங்களை வண்டில்களை கொண்டுவந்து ஏற்றிச் செல்லுமாறு அப்போது மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த வர்ணசூரியவினால் மக்களுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் முகாம்களுக்கு பொறுப்பான அரச அதிகாரிகள் மூவர் உட்பட 21பேர் வண்டில் மாடுகளுடன் சேருவில நோக்கிச் சென்றார்கள்.
அங்கிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஈச்சிலம்பற்று நோக்கி வரும்போது மகிந்தபுரவில் வைத்து ஆயுதம் தாங்கிய நபர்களினால் இவர்கள் வழிமறிக்கப்பட்டு பிரதான வீதியில் இருந்து 50 மீற்றர் தூரம் அழைத்துச் செல்லப்பட்டு முழங்காலில் இருக்க வைத்து பின்னர் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். இதில் மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்டதோடு மூன்றுபேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிர் தப்பியிருந்தார்கள். படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவர் முஸ்லீம் சகோதரர்களாவர்.
இப்படுகொலைச் சம்பவத்தில் பின்வரும் நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்
1.அண்ணாமலை தங்கராஜா – கிராம சேவகர் (தம்பலகாமம்) – ஈச்சிலம்பற்று முகாம்
2.அலிபுகான் – கிராம சேவகர் (தோப்பூர்) – பூமரத்தடிச்சேனை முகாம்
3.அயாசு முகம்மது அப்துல் லத்தீப் – (பாலத்தோப்பூர்) – மீள்குடியேற்ற உத்தியோகத்தர் – பூநகர் முகாம்
4.கோணாமலை வேலாயுதம் – பூமரத்தடிச்சேனை
5.கதிர்காமத்தம்பி -விநாயகமூர்த்தி – பூமரத்தடிச்சேனை
6.தெய்வேந்திரம் நவரெட்ணம் பூமரத்தடிச்சேனை
7.தம்பிராசா நவரெட்ணம் பூநகர்
8.கனகசபை கனகசுந்தரம் – பூநகர்
9.கதிர்காமத்தம்பி செல்லத்தம்பி – பூநகர்
10.மூத்ததம்பி காசிப்பிள்ளை – பூநகர்
11.கதிர்காமத்தம்பி நாகராசா – பூநகர்
12.வீரபத்திரன் நடேசபிள்ளை – பூநகர்
13.முத்தையா காளிராசா – பூநகர்
14.முத்துக்குமார் வேலுப்பிள்ளை – பூநகர்
15.வேலுப்பிள்ளை சித்திரவேல் – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று
16.சித்திரவேல் சிவலிங்கம் – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று
17.வீரபத்திரன் சோமசுந்தரம் – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று
18.சித்திரவேல் தம்பாப்பிள்ளை – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று
19.நல்லையா பரமேஸ்வரன் இலங்கைத்துறை முகத்துவாரம்
20.தாமோதரம் தர்மலிங்கம் – ஈச்சிலம்பற்று
21.புண்ணியம் மதிவதனன் – பூமரத்தடிச்சேனை
அத்துடன் வீரபத்திரன் சோமசுந்தரன், வேலுப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தப்பியிருந்தார்கள்.