Thursday, July 25, 2024
Home » பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி உட்பட உலக தலைவர்களும் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி உட்பட உலக தலைவர்களும் வாழ்த்து

by Rizwan Segu Mohideen
June 10, 2024 8:41 pm 0 comment

2024 ஆம் ஆண்டுக்கான லோக சபா தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட உலகின் பல நாடுகளது தலைவர்களும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி, ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, ‘பிரதமர் மோடியினதும் அவரது தேசிய ஜனநாயகக் கூட்டணியினதும் வெற்றிக்காக வாக்களித்துள்ள சுமார் 650 மில்லியன் இந்திய மக்களுக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றும் ‘இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வரையறையற்ற நட்புறவு மேலும் வளர்ச்சி பெற பிரதமர் மோடியினதும் அவர்​ தலைமையிலான கூட்டணியினதும் வெற்றி வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரதமர் மோடிக்கு நல்வாழ்த்து தெரிவித்துள்ள தாய்வான் ஜனாதிபதி லாய் சிங் தே, இருநாடுகளுக்கும் இடையில் வளர்ச்சி பெற்றுவரும் நட்புறவை மேலும் விரிவுபடுத்த ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி 240 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 99 இடங்களிலும் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இதன் ஊடாக பிரதமர் மோடி மூன்றாவது தடவையாகவும் இந்தியாவின் பிரதமராகத் தெரிவாகியுள்ளார். நிதிஷ் குமார் தலைமையிலான ஜே.டி கட்சியும், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு நல்கியுள்ளன.

இலங்கை, மாலைத்தீவு, நேபாளம், இஸ்ரேல், ரஷ்யா, பிரான்ஸ், உக்ரைன், இத்தாலி, ஜமைக்கா உள்ளிட்ட பல நாடுகளது தலைவர்களும் இந்தியாவின் பிரதமராக மூன்றாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமர் மோடிக்கு நல்வாழ்த்துகளைக் கூறியுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT