சிவனொளிபாத மலையின் அருகில் அமைந்துள்ள கிலன்டில்ட் தோட்டத்தில் மிக பிரமாண்டமாக அமையப் பெற்று அடியார்களுக்கு அருளாசி வழங்கும் ஈசனின் திருவடியை பணிந்து வணங்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கிலன்டில் தோட்ட இந்து இளைஞர் மன்றத்தால் ஒரு வருட காலத்துக்குள் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தில் 27அடி உயரமான சிவபெருமானின் சிலை, 27அடி உயரமான திரிசூலம், 10அடி நீளம் 8 அடி அகலம் கொண்ட நந்தி , அபிஷேக லிங்கம், 108 லிங்கங்கள், தியான லிங்கம் (தனியான தியான அறையில்) மற்றும் மகா விஷ்ணு முதலிய அம்சங்கள் அமையப்பெற்றுள்ளமை சிறப்பு.
ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் தம் பாவங்களையும் துயரங்களையும் கழுவி தூய உள்ளத்தவராய் புத்துயிர் பெற்று ஆசி பெறுவதாய் பூஜையின் போதான 27 அடி நீளமுள்ள கங்கையை சடையில் வைத்த எம் பெருமானின் தீர்த்த மழை என்னையும் மெய் சிலிர்க்க வைத்தது. மனதால் என்னப்பன் சிவனோடு பேச அமைதியான சூழலில் தியான லிங்கத்தோடு தியான அறை அமைந்துள்ளமை சிறப்பு.
எம் பெருமான் சிவனின் அருளைப் பெறவரும் அடியவர்களுக்காக சகல நேரங்களிலும் அர்ச்சனை செய்து பூஜித்துக் கொள்ள கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு வழிகாட்டுவதற்கும் சிவனடியார்கள் காணப்படுகின்றனர். பக்த அடியார்களுக்கு அன்ன தானமும் வழங்கப்படுகின்றது. ஆலய சூழலிலேயே வழிபாடுகளுக்கு தேவையான பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக் கொள்ள முடிகின்ற அதேவேளை வாகன நிறுத்துமிட வசதிகளும் காணப்படுகின்றன.
இறையுணர்வைப் பெற்றுக் கொள்ளக் கூடிய அருமையான சூழலில் அமைந்துள்ள ஆலயத்திற்கு இந்துக்கள் மட்டுமின்றி சகோதர மத உறவுகளும் சுற்றுலா பயணிகளும் சிவனின் மகிமை அறிந்து தேடிவந்து தரிசனம் பெற்றுச் செல்வதை காணும் போது என்னப்பன் சிவனின் அருளால் மனிதம் நிலை பெற்றிருப்பதை உணர முடிந்தது.
எம் பெருமான் சிவனின் அருளை பெற்றுக் கொள்ள வருவோர் கலா சார ஆடைகளோடு (ஆண்கள் வேட்டி , பெண்கள் சேலை, சல்வார்) வந்து அருள் பெற்றுச் செல்லலாம். தூர இடங்களில் இருந்து சிவனை தரிசிக்க வரும் அடியார்களுக்கு ஆலயத்தில் அணிந்து கொள்ள வேட்டிகளும் வழங்கப்படுகின்றன. சிவனடியார்கள், அன்பர்கள் நிச்சயம் ஆலயத்திற்கு சென்று அருளையும் ஆலய சூழலில் கிடைக்கின்ற மனத் திருப்திகரமான உணர்வையும் பெற்று கொள்ள வேண்டுகின்றேன்.
இத்தனை சிறப்புகளோடு குறுகிய காலத்தில் (ஒரு வருடத்திற்குள்) ஆலயத்தை அமைத்து சிவனடியார்களுக்கும் அன்பர்களுக்கும் சிவனின் அருளை பெற்று கொடுத்த கிலன்டில் தோட்ட இந்து இளைஞர் மன்றத்தினருக்கும் தோட்ட பொது மக்களுக்கும் துணை நின்ற அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என்னப்பன் சிவனின் அருள் நிறைவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.