Sunday, June 16, 2024
Home » தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து பணியாற்றி தமிழின் சிறப்பை உயர்த்த வேண்டும்

தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து பணியாற்றி தமிழின் சிறப்பை உயர்த்த வேண்டும்

by damith
June 10, 2024 1:22 pm 0 comment

“வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ்மொழி, வாழிய வாழியவே” என வருடத்துக்கு ஒருமுறை பாடுகின்ற தமிழ்தாய் வாழ்த்தினால் மட்டும் தமிழ்மொழியை வாழவைக்க முடியாது. பாடலைப் பாடுகின்ற நாம் அப்பாடலை அர்த்தப்படுத்தி செயல்படுகின்றோமா? என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது”.

கல்முனை தமிழ் கோட்டத்திற்கான தமிழ்மொழித் தினப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றது. பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் தமதுரையின் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

“தமிழ்மொழித் தினப் போட்டிகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்த காலஅவகாசம் கொடுக்கப்பட்டும், எவ்வித முயற்சிகளுமின்றி மாணவர்கள் கொண்டுவரப்படுகின்றனர். தமிழைக் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் தங்களது பணிகளை சரிவர முன்னெடுத்தாலேயே தமிழை வளர்க்க முடியும்.

உயர்தரத்தில் தமிழை ஒரு பாடமாகக் கற்பதன் மூலம் தமிழின் அருமை பெருமைகளை அறிய வாய்ப்பு ஏற்படுகிறது. எனினும் ஒருசாரர் தமது பாடத்தை முதன்மைப்படுத்தி தமிழை கற்பதிலிருந்து மாணவர்களை தூரமாக்குகின்றனர். இந்நிலை மாற்றியமைக்கப்பட்டு தமிழ் கற்கின்ற சமூகம் உருவாக வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் ஆற்றல் வளர்வதுடன், அவர்கள் எழுதுகின்றவர்களாவும் பேசுகின்றவர்களாகவும் வளர முடியும்.

‘தமிழ் மொழியானது முஸ்லிம்களுக்குரிய மொழி அல்ல. அம்மொழியை கற்கக் கூடாது. அதில் வேறு இனக் கருத்துக்கள் உள்ளன’ என்கின்ற கருத்துக்களும் முஸ்லிம் சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான தவறான பிரசாரங்களை ஏற்க முடியாது. தமிழ் பேசும் எல்லோருமே தமிழர்கள்தான். தமிழ் முஸ்லிம்களுக்கும் சொந்தமான மொழி. எத்தனையோ முஸ்லிம்கள் பெரும் இலக்கிய நிலையாளர்களாக மாறியுள்ளர். இவ்வாறான வாதங்களைக் கைவிட்டு தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து செயலாற்றுவதன் மூலம் தமிழின் சிறப்பை உயர்த்த முடியும்”.

இவ்வாறு கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் தெரிவித்தார்.

கல்முனை தமிழ் கோட்டத்திற்கான பணிப்பாளரும் கல்முனை வலய திட்டமிடல் பிரதி கல்விப்பணிப்பாளருமான வருண்யா சாந்தரூபன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

பிரதிக் கல்விப் பணிபப்பாளர்களான எம்.எச்.றியாஸா, யூ.எல்.றியால், உவெஸ்லி அதிபர் எஸ்.கலையரசன், தமிழ் பாட ஆசிரிய வளவாளர் உள்ளிட்டோர் அதிதிகளாகப் பங்கேற்றனர்.

--ஜெஸ்மி எம்.மூஸா (பெரியநீலாவணை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT