Sunday, June 16, 2024
Home » பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவிப்பிரமாணம்

பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவிப்பிரமாணம்

by damith
June 10, 2024 6:00 am 0 comment

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி நேற்று மாலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

மூன்றாவது முறையாக அவர் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். மோடியின் பதவியேற்பு விழா நேற்றிரவு 7.15 மணியளவில் ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. இந்த விழாவில் அண்டை நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவு ஜனாதிபதி ​ெடாக்டர் முகமது முய்சு, சீஷெல்ஸின் துணைத் தலைவர் அகமது அஃபிஃப், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே உட்பட பலர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா முதல் சிறப்பு விருந்தினராக நேற்றுமுன் தினமே டெல்லிக்கு வருகை தந்திருந்தார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லியில் நேற்று மாலை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சியமைத்துக் கொண்டது. இந்தப் பெரும் விழாவை முன்னிட்டு, டெல்லியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நேற்றுப் பிற்பகல் 2 மணிக்கு, ராஷ்ட்ரபதி பவன் அமைந்திருக்கும் பகுதியில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, போக்குவரத்து முடக்கப்பட்டது. அதற்கு முன்னதாக பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த பா.ஜ.க, இம்முறை தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போகவே, தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. இந்தத் தேர்தலில் 543 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க 240 இடங்களில் வெற்றிபெற்றது. அதேபோல அந்தக் கட்சியின் தலைமையிலான கூட்டணி 293 இடங்களில் வெற்றிபெற்றது.

பா.ஜ.க ஆட்சி அரியணையில் அமர்வதற்கு முக்கிய பங்காற்றிய டி.டி.பி, ஜே.டி.யூ மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 7:15 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், இரகசிய காப்பும் செய்து வைத்தார். மோடியைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெறும் பிறரும் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.

பதவியேற்பு விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நேற்று பலப்படுத்தப்பட்டிருந்தன. டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் பெருமையை பெற்றுள்ளார் மோடி.

இதேவேளை நடிகர் ரஜினிகாந்தும், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். சென்னையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டார். டெல்லி புறப்படும் போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கிறார். இது மிகப்பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். அதேபோல, நாடாளுமன்றத்தில் பலம்வாய்ந்த எதிர்க்கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். எனவே, இது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன். சந்திரபாபு நாயுடுவின் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கும் அழைப்பு வந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT