Sunday, June 16, 2024
Home » நமது எதிர்கால சந்ததியினர் தாய்மொழி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்

நமது எதிர்கால சந்ததியினர் தாய்மொழி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்

by damith
June 10, 2024 10:59 am 0 comment

எதிர்காலத்தில் தமிழ் சமுதாயம் எத்தகைய வழியில் புலம்பெயர் நாடுகளில் மொழிப்பற்றுடன் வாழ வேண்டும் என்பதற்கு இன்றைய தமிழ் ஆர்வலரகளும், அறிஞர்களும், எழுத்தாளர்களும் வழிகாட்ட வேண்டும். இதன் மூலமே எதிர்கால சந்ததி செழிப்பாக தாய்மொழிப்பற்றுடன் வாழ முடியும் என எழுத்தாளர் மாத்தளை சோமு தெரிவித்தார்.

சிட்னி தமிழ் மன்றம் ஆதரவில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடும் இலக்கிய அரங்கும் கடந்த வெள்ளியன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றன.

இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய எழுத்தாளர் மாத்தளை சோமு மேலும் தெரிவித்ததாவது:

“புலம்பெயர் மண்ணில் தமிழ்மொழியை பேணிக்காத்திட வீடுகளில் குழந்தைகளுடன் தாய்மொழியில் உரையாட வேண்டியது அவசியம். எதிர்கால சமுதாயம், தமிழை விரும்பிப் படிக்கும் சூழலை உருவாக்க, தமிழின் வளர்ச்சி குறித்து எல்லோரும் அக்கறையோடு தங்களது பங்களிப்பினை செலுத்த வேண்டும்.

பல மொழிகள் உலகில் அழிந்தாலும், தொன்மை வாய்ந்த தமிழ்மொழி இன்றும் உலகில் உயிரோட்டத்துடன் உள்ள மொழியாகும். காலமும் சமுதாயமும் மாறுவதற்கேற்ப, மொழியும் நவீனமயப்பட வேண்டும். எனவே, தமிழைப் பயன்பாட்டு மொழியாக வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம் இப்போது இருக்கிறது.

மொழி வழிக்கல்வியில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான ஆலோசனைகளையும், ஆக்கபூர்வமான அறிவுரைகளையும் அறிஞர்களும், இலக்கிய ஆர்வலர்களும் வழங்க வேண்டும். தமிழ்க் கல்வி முறையில் மொழிக் கல்வியைப் பொறுத்தவரை அவுஸ்திரேலியாவில் பல காத்திரமான பங்களிப்புகளை தமிழ்ப் பள்ளிகள் வழங்கி, தமிழ் மாணவர்களை சிறப்பாக வழிநடத்துகின்றனர்.

உலகின் மூத்த மொழி என்று வரலாற்று ஆய்வாளர்களால் போற்றப்படும் மொழி எம்முடைய தமிழ்மொழி ஆகும். எம்மொழி எதிர்காலத்தில் நிலையாக மேலோங்க, அதைச் சரியாகப் புரிந்து கொண்டு, மொழி வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

இன்றைய இளைய சமுதாயம், வேர்களைத் தேடுகிற காலம் இது. இந்தச் சூழலில் மொழியின் மீது எல்லோரும் நம்பிக்கை வைக்க வேண்டும். எதிர்கால சமுதாயம், தமிழை விரும்பிப் படிக்கின்ற சூழல் உருவாக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை நாம் நிச்சயமாக மேற்கொள்ள வேண்டும்.

தாய்மொழி மட்டுமே சீனாவில் பேச்சுமொழியாக இருக்கிறது. அதனால்தான், சீனாவில் இளைய சமுதாயத்தினால் மிகவும் சரளமாகவும் இயல்பாகவும் தங்கள் மொழியை பேச முடிகிறது. அந்தத் திறனை தமிழ்மொழிக்கும் உருவாக்க வேண்டும். எதிர்காலத்தில் எவ்வாறு நமது மொழியின் தொன்மையை பாதுகாக்கலாம் என்பதையிட்டு தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

எதிர்காலத்தில் தமிழ் சமுதாயம் மேலும் வளர்ச்சியுற ஐங்கரன் விக்கினேஸ்வராவின் எழுத்துப்பணி பங்களிப்பை வழங்கும். இதுபோன்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளை நடத்தி, எதிர்கால தமிழ் சந்ததியினருக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்க வேண்டும்”.

இவ்வாறு எழுத்தாளர் மாத்தளை சோமு தெரிவித்தார்.

பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், இலங்கை இதழியலில் சிவகுருநாதன் ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந்நிகழ்வின் தலைமையுரையை எழுத்தாளர் மாத்தளை சோமு ஆற்றினார். அதன்பின் ‘பாலஸ்தீனம் எரியும் தேசம்’ நூல் அறிமுகவுரையை தனபாலசிங்கம் நிகழ்த்தினார். அதன்பின் ‘ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்’ நூலின் அறிமுகவுரையை ​ெடாக்டர் ஹாரூன் காசிம் ஆற்றினார்.

‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ நூலின் அறிமுகவுரையை எழுத்தாளர் சுந்தரதாஸ் ஆற்றினார்.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் தினகரன் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் சிறப்புரை நிகழ்த்தினார். அத்துடன் திருநந்தகுமார், பாடும் மீன் சிறிஷ்கந்தராஜா ஆகியோரும் சிறப்புரை ஆற்றினர்.

சிட்னி தமிழ் மன்றம் ஆதரவில் நடைபெற்ற நூல் வெளியீடு, இலக்கிய அரங்கின் ஏற்புரையை ஐங்கரன் விக்கினேஸ்வரா நிகழ்த்தினார்.

வி.ரி.சகாதேவராஜா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT