Saturday, July 13, 2024
Home » ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் வதந்தி பரப்பும் முயற்சி

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் வதந்தி பரப்பும் முயற்சி

by damith
June 10, 2024 6:00 am 0 comment

நாட்டில் இவ்வருடத்தின் இறுதிப் பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. அதேநேரம் நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் தேர்தலை இலக்காகக் கொண்டு நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு சில அரசியல்வாதிகள் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் வதந்திகளைப் பரப்பியுள்ளனர். இதன் ஊடாக மக்களை தவறான வழியில் இட்டுச் செல்ல அவர்கள் எதிர்பார்ப்பதாகவே தெரிகிறது. அதுவே மக்களின் அபிப்பிராயமும் ஆகும்.

அதேநேரம் தேர்தலை எதிர்கொள்ளத் திராணியற்றவர்கள்தான் இவ்வாறான வதந்திகளைப் பரப்புவர். அதுவே அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது.

இந்நாட்டின் அடிப்படைச் சட்டமாக விளங்கும் அரசியலமைப்பு, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. அதாவது தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அதில் உள்ளடங்கியுள்ளன. அதனால் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் நடத்தப்படும். அரசியலமைப்புக்கு ஏற்ப செயற்படுவது அவசியம். அது சம்பந்தப்பட்ட தரப்பினரின் பொறுப்பும் கடமையும் ஆகும். அரசியலமைப்பை மீறி செயற்பட முடியாது.

அவ்வாறிருக்கையில், தேர்தல் நடத்தப்படுவது குறித்து சந்தேகங்களை ஏற்படுத்தும் வகையில் வதந்திகளைப் பரப்புவதன் மூலம் அற்ப அரசியல் இலாபம் அடைந்து கொள்ளலாம் என சிலர் எதிர்ப்பதாகவே கருதப்படுகிறது. ஆனால் அந்த வதந்திகளின் உண்மைத் தன்மையையும் அதனைப் பரப்புபவர்களையும் மக்கள் அறியாதவர்கள் அல்லர்.

தற்போது தேர்தலுக்கான ஏற்பாடுகள் வெளிப்படையாகவே இடம்பெற்று வருகின்றன. அதேநேரம் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் அத்தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்படுத்தல்களில் ஈடுபட்டுள்ளன. இந்தச் சூழலில் தேர்தல் நடத்தப்படுவது குறித்து சந்தேகம் எழுப்பி அற்ப அரசியல் இலாபம் பெற முடியும் என எதிர்பார்ப்பது பகற்கனவாகவே அமையும்.

அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகள் பிரதமர் தினேஷ் குணவர்தனவை அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். அச்சந்திப்பின் போது பிரதமர், ‘நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் உரிய நேரத்தில் இடம்பெறும். சுதந்திரம் மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் இந்த அறிவிப்பு, ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. எதிரணியைச் சேர்ந்த ஒரு சில அரசியல்வாதிகள் பரப்பும் வதந்திகள் எவ்வித அடிப்படையும் அற்றவை என்பதை இது தெளிவாக்கக் கூடியதாக உள்ளது.

மேலும் தேர்தலை நடத்தாதிருப்பதற்கான தேவை யாருக்குள்ளது என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இவை இவ்வாறிருக்க, இந்நாடு முன்னொரு போதும் இல்லாத வகையில் கடும் பொருளாதார வீழச்சிக்கு உள்ளாகி, கட்டம் கட்டமாக மீட்சி பெற்று மறுமலர்ச்சிப் பாதையில் நம்பிக்கை தரும் வகையில் பிரவேசித்திருக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துவரும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் பயனாகவே அந்த வீழ்ச்சியில் இருந்து குறுகிய காலப்பகுதியில் நாட்டினால் மீட்சி பெற முடிந்ததாக இருந்தது.

இந்நாடு எதிர்கொண்டது போன்ற பொருளாதார நெருக்கடிக்கு உலகின் பல நாடுகள் ஏற்கனவே முகம்கொடுத்துள்ளன. அந்நாடுகள் மீட்சி பெறவென எட்டு முதல் பத்து வருடங்கள் சென்றுள்ளன. ஆனால் இலங்கை அவ்வாறான நிலைமையை எதிர்கொள்ளவில்லை. நாடு குறுகிய காலப்பகுதிக்குள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்சி பெற்றதோடு, இயல்பு நிலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரமும் நம்பிக்கை தரும் வகையில் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறான சூழலில் நாட்டில் நிலைபேறான பொருளாதார அபிவிருத்தி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தேவையும் பரவலாக உணரப்பட்டுள்ளது. இதன் நிமித்தம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொருளாதார ரீதியில் ஒரு முக்கியமான காலகட்டத்தை நாடு கடந்து கொண்டிருக்கிறது. இச்சமயம் மக்கள் ஆணை இன்றியமையாததாகும். ஜனநாயக நாடொன்றில் அந்த ஆணையைப் பெற்றுக்கொள்வதற்கு தேர்தல் மிகவும் முக்கியமானது. அதனால் தேர்தல் நடத்தப்படுவது மிகவும் அவசியமானது. அதனையே பிரதமர் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

ஆகவே தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் வதந்திகளைப் பரப்பி ஒரு போதும் அற்ப அரசியல் இலாபம் பெற்றுக்கொள்ள முடியாது என உறுதிபடக் கூறலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT