Wednesday, October 9, 2024
Home » இந்திய – இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத் தலைவர்களும் மீண்டும் உறுதிபூண்டனர்

இந்திய – இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத் தலைவர்களும் மீண்டும் உறுதிபூண்டனர்

- இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து

by Prashahini
June 10, 2024 12:59 pm 0 comment

தொடர்ந்து 3ஆவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய-இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத் தலைவர்கள் மீண்டும் உறுதியளித்தனர்.

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்று (09) பிற்பகல் புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது. நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்நிகழ்வில் இணைந்துகொண்டார்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு, சீஷெல்ஸ் உப ஜனாதிபதி, மொரீஷியஸ் பிரதமர் மற்றும் பூட்டான் பிரதமர் உட்பட பிராந்திய அரச தலைவர்கள் பலர் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதுடன் பிராந்திய அரச தலைவர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், பிராந்திய தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்த இருக்கை வழங்கப்பட்டது.

இதேவேளை, பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்திருந்த இராப்போசன விருந்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஏனைய அரச தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரசன்னம் குறித்து இந்திய ஊடகங்கள் முக்கிய இடத்தை வழங்கியிருந்ததோடு , புதுடெல்லியின் பிரதான சுற்றுவட்டங்களைச் சுற்றி இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடியின் உருவம் பொறிக்கப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷேனுகா சேனவிரத்ன, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x