Tuesday, October 15, 2024
Home » புதிய பொருளாதாரத்துடனான முற்போக்கு சிந்தனை கொண்ட இளம் தலைமுறை அவசியம்

புதிய பொருளாதாரத்துடனான முற்போக்கு சிந்தனை கொண்ட இளம் தலைமுறை அவசியம்

by Prashahini
June 10, 2024 11:53 am 0 comment

புதிய பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு, முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர் சமூகம் அவசியம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 05 ஆவது இளைஞர் பாராளுமன்றத்தின் 06 ஆவது அமர்வின் இரண்டாம் நாள், விசேட அதிதியாக கலந்துகொண்ட போதே சாகல ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையின் ஐந்தாவது இளைஞர் பாராளுமன்றத்தின் ஆறாவது அமர்வு ஜூன் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் ஜனாதிபதி செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான பசிந்து குணரத்ன ஆகியோர் முதல் நாள் அமர்வின் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இரண்டாம் நாள் அமர்வின் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே. மகேசன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான பசிந்து குணரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நாட்டில் நிலையான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நிரந்தர பொருளாதார கொள்கையின் அவசியத்தை சுட்டிக்காட்டி, உத்தேச பொருளாதார மாற்ற சட்டமூலம் மற்றும் இலங்கையின் தேசிய இளைஞர் கொள்கையை தற்காலத்திற்கு ஏற்றவாறு உருவாக்குவது என்ற தலைப்புகள் இந்த அமர்வின் கலந்துரையாடப்பட்டன.

இளைஞர் பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முதல் நாள் அமர்வில், அறுபத்தி இரண்டு உறுப்பினர்களும், இரண்டாவது நாள் அமர்வில் எழுபத்தி ஒன்பது உறுப்பினர்களும், பங்கேற்றனர்.

இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதில்களை வழங்கிய சாகல ரத்நாயக்க, இளைஞர் பாராளுமன்றத்தில் சிறப்பான பங்குபற்றுதலுக்காக உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்விலும் இணைந்து கொண்டார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த சாகல ரத்நாயக்க,

”இன்றைய அமர்வில் இளைஞர் கொள்கை மற்றும் பொருளாதார மாற்ற சட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இளைஞர்களின் எதிர்காலத்திற்காக நாட்டில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறார். 1978/79 இல் ஆரம்பிக்கப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையே நாம் இந்த நாட்டில் கடைசியாக கண்ட புதிய பொருளாதாரமாகும். அதன்பிறகு, பொருளாதாரக் கொள்கைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், முற்றிலும் புதிய பொருளாதாரம் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. இதன் விளைவாக, ஒரு நாடாக நாம் போட்டியை எதிர்கொண்டு வேகமாக முன்னேற முடியவில்லை.

மேலும் நமது பொருளாதாரம் அரசியல் தாக்கங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும், எங்கள் சிறு குழந்தைகளின் சிந்தனை மனப்பான்மை பாதிக்கப்பட்டது. ஒரு புதிய பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதில், இளைஞர்களின் முற்போக்கான சிந்தனையும் அதனுடன் இணைந்து மேம்படுத்தப்பட வேண்டும். பிள்ளைகளின் கல்வி, அறிவு, பயிற்சி ஆகியவற்றை வளர்க்கவில்லை என்றால், எத்தனை பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்தாலும், அதனால் பலன் பெற முடியாது.

ஜனாதிபதியும் இதனை ஒவ்வொரு தடவையும் சுட்டிக்காட்டுகின்றார். நாம் நகர்ந்து கொண்டிருக்கும் புதிய பொருளாதாரத்திற்குத் தேவையான பயிற்சிகளை இப்போதிருந்தே பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். அதற்கு மனதை தயார்படுத்த வேண்டும். பிற்போக்கு சிந்தனைகளையும் பழைய எண்ணங்களையும் மாற்ற வேண்டும். நல்லவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பலவீனமானவற்றை விட்டுவிட வேண்டும். மேலும், புதிய திட்டத்தில் நல்ல விடயங்களை மாத்திரம் எடுத்துவிட்டு, பலவீனமானவற்றை விட்டுவிட வேண்டும். எனவே புதிய சட்டங்களை கொண்டு வருவதுடன் இளைஞர்களின் மேம்பாட்டிற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றமையையும் இங்கு குறிப்பிட வேண்டும்.” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x