Sunday, June 16, 2024
Home » அண்ணாமலை-தமிழிசை மோதல் தீவிரமடைகிறது!

அண்ணாமலை-தமிழிசை மோதல் தீவிரமடைகிறது!

by gayan
June 8, 2024 8:00 am 0 comment

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தல் 2024 இல் தமிழ்நாட்டில் பா.ஜ.க தோல்வி அடைந்த நிலையில், அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழக பா.ஜ.க கடந்த 2 வருடங்களில் பல இடங்களில் வளர்ந்துவிட்டதாக அண்ணாமலை தொடர்ந்து கூறி வந்தார். அப்படி இருக்க அண்ணாமலை மீது இயல்பாகவே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பா.ஜ.கவை தூக்கி நிறுத்திவிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

கண்டிப்பாக 25 சதவீதம் பெறுவோம். 9 இடங்களுக்கு மேல் வெல்வோம் என்றெல்லாம் பேசினார். ஆனால் இந்த பேச்சுக்கள் எல்லாம் வீணாகி உள்ளது. அண்ணாமலையின் பேச்சுக்கள் மிக மோசமான பின்னடைவையே கொடுத்துள்ளன. அந்தக் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. பா.ஜ.க கூட்டணியில் ஏசி சண்முகம், சௌமியா அன்புமணி, ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பாரிவேந்தர், நயினார் கண்டிப்பாக நல்ல வாக்கு வங்கியை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எல்லோரும் தோல்வியை தழுவி உள்ளனர்.

பா.ஜ.க தோல்வி காரணமாக அந்த கட்சிக்குள் பலர் அண்ணாமலை மீது வெறுப்பாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை – முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் பா.ஜ.க செயல்பாடு குறித்து மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.

“கூட்டணி வைக்கலாம் என்று நாங்கள் வியூகத்தை அமைத்தோம். அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் செய்யவில்லை. அண்ணாமலையிடம் அதை நீங்கள் கேட்கலாம். நான் மாநிலத் தலைவரை எதிர்க்கிறேன் என்று சொல்ல மாட்டேன். கூட்டணி அமைத்தால் வென்று இருப்போம் என்று கூறுகிறேன்” அவ்வளவுதான் என்றுள்ளார் தமிழிசை.

இருவருக்கும் இடையேயான மோதல் வெளியே தெரிய தொடங்கிவிட்டது. இந்த மோதலுக்கு பின்வரும் காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

1. அண்ணாமலை அ.தி.மு.க தலைவர்களை மோசமாக பேசினார். இது அ.தி.மு.க கூட்டணி உடைய காரணம்.

2. பா.ஜ.கவில் மூத்த தலைவர்களை அண்ணாமலை ஓரம்கட்டினார்.

3. தேர்தல் வியூகங்களை சரியாக வகுக்கவில்லை.

4. வேட்பாளர் தேர்வில் சரியாக செயல்படவில்லை.

5. தேர்தல் செலவினங்களில் முறைகேடு நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம்.

6. பா.ஜ.க சிரேஷ்ட தலைவர்களுக்கு எதிராக அண்ணாமலையே செயல்படுவதாக புகார்.

7. கட்சி நிர்வாகிகளையே அண்ணாமலையின் தரப்பு தாக்குவதாக புகார்.

இவ்வாறு பலதரப்பட்ட புகார்கள்தான் இந்த மோதலுக்கு காரணமாக மாறி இருக்கலாம் என்கிறார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT