Saturday, July 13, 2024
Home » மோடி தலைமையிலான ஆட்சி பலமடையுமென்பதே நம்பிக்கை

மோடி தலைமையிலான ஆட்சி பலமடையுமென்பதே நம்பிக்கை

by gayan
June 8, 2024 6:00 am 0 comment

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது தடவையாகப் பதவியேற்கிறார் நரேந்திர மோடி. இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றியதையடுத்து புதிய அரசாங்கத்தை அக்கூட்டணி அமைக்கின்றது. புதிய அரசின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கின்றார்.

இந்திய லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மொத்தமாக 291 இடங்கள் கிடைத்துள்ளன. ஆனால் பா.ஜ.க தனித்து 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆகவே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க பா.ஜ.கவினால் இயலாது. இதனால் இந்தியாவில் மீண்டும் தே.ஜ.கூட்டணி ஆட்சி அமைகின்றது.

இப்பதவியேற்புக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மோடியை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தற்போதைய லோக்சபாவை கலைக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் பிரதானமானது தெலுங்கு தேசம் கட்சியாகும். அக்கட்சியானது அதிக ஆசனங்களை வைத்துள்ளது. அக்கட்சியின் தோழமையுடனேயே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்க முடியும். தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு உறுதியாகக் கிடைக்குமா என்ற சந்தேகம் பா.ஜ.கவுக்கு உள்ளத்தில் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தது. ஆனால் அந்த அச்சம் பா.ஜ.கவுக்கு இப்போது நீங்கியுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு இந்தச் சந்தேகத்தைத் தெளிவுபடுத்தி உள்ளார்.

“தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன். கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கிறேன்” என்று ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார். எனவே மோடி தலைமையில் புதிய அரசாங்கம் அமைகின்றது.

ஆனாலும் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைவதில் பெரும் இடையூறுகள் உள்ளதாகவும், அவ்வாறு ஆட்சி அமையுமானால் அந்த ஆட்சி எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாதிருப்பதாகவும் இந்திய அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பதவி மிகவும் முக்கியமானது என்பதால் கடந்த இரண்டு முறை ஆட்சியிலும் அதை பா.ஜ.கவே தக்கவைத்துக் கொண்டிருந்தது. சென்ற முறை ஓம் பிர்லா சபாநாயகராக இருந்தார். அதற்கு முன்பும் சபாநாயகர் பா.ஜ.கவை சேர்ந்தவராகவே இருந்தார். ஆனால் இந்த முறை சபாநாயகர் பதவி எங்களுக்கு வேண்டுமென தற்போது பா.ஜ.க கூட்டணியில் முக்கிய தூண்களாக இருக்கும் சந்திரபாபுவின் தெலுங்கு தேசமும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை நிபந்தனையாக வைத்துள்ளார். ஆந்திரா, தெலுங்கானா என மாநிலங்கள் பிரிக்கப்பட்ட சமயத்தில் இருந்து ஆந்திராவிற்குச் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த நிபந்தனையை தற்பொழுது மீண்டும் கையில் எடுத்துள்ளது தெலுங்கு தேசம்.

அதேபோல் பீகார் மாநிலம் பின்தங்கி இருக்கிறது எனவே எங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என மாநில முதல்வர் நிதிஷ்குமார் நிபந்தனை விதித்துள்ளார் என்று கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளின் இந்த கோரிக்கைகளை பா.ஜ.க சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்திய மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள சிறுபான்மைக் கட்சிகளின் எம்.பிக்கள் சிலரும், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பிக்கள் சிலரும் பா.ஜ.கவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மாத்திரமன்றி, வேறு பல எம்.பிக்களையும் பா.ஜ.கவின் பக்கத்துக்கு வளைத்தெடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

அவ்வாறானால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி மென்மேலும் பலமடைவதற்கு வாய்ப்பு உள்ளது என்றே கூற வேண்டியுள்ளது. அவ்வாறு பலமடையுமானால் எதிரணியான ‘இந்தியா’ கூட்டணியினால் நரேந்திர மோடியின் அரசை வீழ்த்த முடியாதென்பது உறுதியாகி விடும்.

இந்திய அரசியல் நிலைமை இவ்வாறிருக்கையில், பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச அளவில் பெரும் செல்வாக்குப் பெற்றதொரு அரசியல் தலைவர் என்பதை மறுப்பதற்கில்லை. அரசியல் ஆளுமையும் நிர்வாகத்திறனும் கொண்ட தலைவர் அவர். உலக பொருளாதாரத்திலும்,வல்லமையிலும் இந்தியாவை உச்சநிலைக்குக் கொண்டு வருவதற்கு அவரது ஆளுமைத்திறனே காரணமாகும். இலங்கையுடன் நெருக்கமான நட்புறவு கொண்ட அரசியல் தலைவராகவும் அவர் விளங்குகின்றார்.

இவ்வாறான விடயங்களையெல்லாம் கவனத்தில் கொண்டு பார்க்கையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி பலம் பெற்று நீடிக்குமென்றே எண்ணத் தோன்றுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT