Saturday, July 13, 2024
Home » டெங்கு பரவும் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவது அவசியம்!

டெங்கு பரவும் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவது அவசியம்!

by mahesh
June 7, 2024 9:01 am 0 comment

நாட்டில் கடந்த சில தினங்களாக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நீடித்து வருகிறது. அதிலும் கடந்த வார இறுதியில் நாட்டின் பல பிரதேசங்களிலும் கடும்மழை பெய்தது. இதன் விளைவாக நாட்டின் பல பிரதேசங்களிலும் தாழ்நிலங்களில் வெள்ள நிலை ஏற்பட்டது. 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.

குளங்களதும் நீர்த்தேக்கங்களதும் மேலதிக நீரை வெளியேற்றவென வான்கதவுகள் திறந்துவிடப்பட்டன. இதன் விளைவாக தாழ்நிலங்களில் வெள்ளநிலை ஏற்பட்டது.

இவ்வாறான நிலையில், மழைநீர் பல இடங்களிலும் தேங்கி இருப்பதை பரவலாக அவதானிக்க முடிகிறது. டெங்கு வைரஸைக் காவிப்பரப்பும் நுளம்பு இனம் இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொண்டுள்ளது. இதற்கு நாட்டின் பல பிரதேசங்களிலும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவது நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது.

பொதுவாக டெங்கு வைரஸைக் காவிப்பரப்பும் நுளம்புகள் மழைநீர் உள்ளிட்ட தெளிந்தநீர் தேங்கும் இடங்களில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் பண்பை கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை இவ்வின நுளம்புகளின் பெருக்கத்திற்கு நல்ல சாதகமாக அமைந்திருக்கின்றது. அதன் விளைவாகவே தற்போது நுளம்புகளின் பெருக்கத்தைப் பரவலாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஆனால் ஈடிஸ் எஜிப்டைய் இன நுளம்புகள் இன்றி டெங்கு வைரஸ் மனிதனுக்கு பரவாது. இந்த வைரஸை மனிதனுக்கு பரப்பும் பணியையே இவ்வின நுளம்புகள் மேற்கொள்கின்றன. இவ்வைரஸானது மிகவும் பயங்கரமானதும் உயிராபத்து அச்சுறுத்தல் மிக்கதுமாகும்.

ஆனால் இவ்வைரஸைக் காவிப்பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தினால் இவ்வைரஸ் அச்சுறுத்தலைக் கட்டுத்திக் கொள்ள முடியும். தற்போதைய சூழலில் காய்ச்சலுடன் கூடிய நோய் அறிகுறிகள் காணப்பட்டால் ஆரம்ப கட்டத்திலேயே தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொண்டால் நோயை முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

நுளம்புகளின் பெருக்கம் தொடர்பிலும் காய்ச்சலுடன் கூடிய நோய் அறிகுறிகள் குறித்தும் மக்கள் மத்தியில் காணப்படும் கவனயீனம், அசிரத்தை என்பனவே டெங்கு வைரஸ் அச்சுறுத்தல் மிக்கதாக விளங்கக் காரணமாக விளங்குகின்றன.

டெங்கு வைரஸ் நுளம்புகளானது இன, மத, மொழி, வயது, பால் வேறுபாடுகள் இன்றி எவரையும் குத்த முடியும். அதன் ஊடாகவே இவ்வைரஸ் சுகதேகிகளுக்கு பரப்பப்படுகின்றது. மழைநீர் உள்ளிட்ட தெளிந்தநீர் தேங்க முடியாதபடி சுற்றாடலை சுத்தமாகவும் உலர்நிலையிலும் வைத்துக் கொண்டால் இவ்வைரஸ் ஒரு அச்சுறுத்தலாகவே இராது. அதாவது இவ்வைரஸை காவிப்பரப்பும் நுளம்புகள் பல்கிப் பெருகாவிட்டால் இவ்வைரஸினால் அச்சுறுத்தலாக அமைய முடியாது.

இருந்த போதிலும் தற்போதைய மழையுடன் சேர்த்து நாட்டில் டெங்கு வைரஸ் தலைதூக்கக் கூடியதாக அச்சுறுத்தல் உள்ளது. அந்த வகையில் இவ்வருடம் ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதியில் 25 ஆயிரத்து 417 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 09 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் கடந்த சில தினங்களாக டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் எதிர்வரும் மழைவீழ்ச்சிக் காலப்பகுதியில் மேலும் டெங்கு அச்சுறுத்தல் மேலும் அதிகரிக்கக்கூடிய அச்சுறுத்தல் நிலவுகிறது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்திருக்கிறார்.

இக்காலப்பகுதியில் இந்நோய்க்கு உள்ளானவர்களில் பெரும்பகுதியினர் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இரத்தினபுரி, கண்டி, கேகாலை, குருநாகல் உட்பட நாட்டின் பல மாவட்டங்களிலும் இந்நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதனால் டெங்கு வைரஸ் நோயைத் தடுப்பதற்காக நுளம்பின் பெருக்கத்தையும் பரவுதலையும் தடுப்பது மிகவும் அவசியம். அதன் நிமித்தம் வீடுகள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களிலும் கட்டடங்களிலும் பணியிடங்களிலும் டெங்கு நுளம்பு முட்டையிட்டு பெருக முடியாதபடி சுற்றாடலை சுத்தமாகவும் உலர்நிலையிலும் வைத்திருப்பது அவசியம். இது பொதுமக்களின் பொறுப்பாகும்.

அதேநேரம் இக்காலப்பகுதியில் கடும் காய்ச்சல், வயிற்றுவலி, வாந்தி, கடுமையான தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அதை டெங்கு நோயாகக் கருதுவது மிகவும் அவசியம். இந்த அறிகுறிகள் இருந்தால், முதலில் உடல்ரீதியாக ஓய்வெடுப்பதோடு காய்ச்சல் ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குள் அருகில் உள்ள வைத்தியசாலை அல்லது தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகி, உரிய ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் ஊடாக இந்நோய்த் தாக்கத்தை முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT